திரில்லர் படங்களை பார்ப்பது ஆரோக்கியத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும்! - ரீலா? ரியலா?
ரியலா? ரீலா?
1.திகில், திரில் திரைப்படங்களைப் பார்க்கும்போது நம் உடலிலுள்ள ரத்தம் உறையும்.
ரியல்: திகில், திரில் நிறைந்த படங்களை இரவில் பார்த்திருப்பீர்கள். அப்போது உங்களை அறியாமல் இதயத்துடிப்பு அதிகரிக்கும். வியர்க்கும். ஆனால் உங்கள் ரத்தத்தில் ஏதாவது மாற்றங்கள் நடந்திருக்கும் என யோசித்திருக்கிறீர்களா? திரைப்படக்காட்சி வழியாக படத்தோடு ஒன்றிப்போகும்போது, நம் உடலில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. அதன் விளைவாக ரத்தத்தில் உள்ள புரதமான ஃபேக்டர் 7 மாறுதலுக்கு உள்ளாகிறது. இதன் விளைவாக ரத்தம் தற்காலிகமாக ஜெல் போல மாறுகிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். படங்கள் பார்ப்பவர்களுக்கு மட்டும்தான் என்றில்லை. பங்கி ஜம்ப் விளையாட்டை மேற்கொள்கிறவர்களுக்கும்கூட உடலில் இந்த மாற்றம் ஏற்படுகிறது என ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர். ஆபத்து ஏற்படும்போது உடல் தன்னைக் காத்துக்கொள்ளும் வழிமுறைதான் இது. வேறொன்றுமில்லை.
2. உயரமான கட்டடத்திலிருந்து சில்லறைகளை கீழே வீசி, மனிதர்களின் தலையில் விழுந்தால் அவர் இறந்துவிடுவார்.
ரியல்: முட்டாள்கள் தின கண்டுபிடிப்புகளில் இதுவும் ஒன்று. அமெரிக்காவிலுள்ள எம்பயர் ஸ்டேட் கட்டடத்திலிருந்து (443 மீ.) சில்லறைகளை சிதறவிடுகிறீர்கள். அது கீழே நடந்து செல்பவரின் தலையில் விழுகிறது. இதனால் அவருக்கு தலையில் வலி ஏற்படுமே ஒழிய இறந்துபோக மாட்டார். இதற்கு காரணம், கீழே விழும் நாணயத்தின் எடை குறைவு. அதன் வேகம், காற்றின் தன்மை ஆகியவற்றை இந்த செயல்பாட்டில் கவனிக்கவேண்டும். ஒருவரைக் கொல்லவேண்டுமென்றால் நாணயத்தின் எடை அதிகமாக இருக்கவேண்டும். அப்போதுதான் புவிஈர்ப்பு விசையின் உதவியுடன் கீழே செல்பவரின் தலையில் விழுந்து உயிரை பலிவாங்கும். காசு விழுவது தெரிந்தால் சில நிமிடங்கள் பொறுங்கள். கீழே விழும் காசை பொறுக்கிக்கொள்ளுங்கள். லாபம்தானே?
3. பிரெட்டின் மேலோட்டை சாப்பிட்டால் சுருள் முடி உருவாகும்.
ரியல்: ஐரோப்பாவில் தோன்றிய ஆரோக்கிய நம்பிக்கை இது. சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு அங்கு சுருள்முடி கொண்ட குழந்தைகள் ஆரோக்கியமாக இருப்பார்கள் என்ற நம்பிக்கை நிலவியது. 2002இல் பிரெட்டின் மேலோட்டில் புற்றுநோயை தடுக்கும் ஆன்டி ஆக்சிடன்டுகள் இருப்பதாக ஜெர்மன் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். எனவே, சுத்திகரிக்கப்பட்ட வெள்ளை பிரெட்டை விட கோதுமை பிரெட்டை வாங்கிச் சாப்பிட்டால் கூடுதல் ஊட்டச்சத்துகளும் உடம்பில் சேரும்.
4. பால் குடிப்பது குழந்தைகளை உயரமாகவும் வலிமையாகவும் மாற்றும்
ரியல்: பால் உற்பத்தி நிறுவனங்கள், ஊட்டச்சத்து பான தயாரிப்பாளர்கள் மட்டுமே இப்படி விளம்பரம் செய்வார்கள். அமெரிக்க பால் தயாரிப்பு நிறுவனங்கள், எட்டு வயதிற்கு மேற்பட்டவர்கள் தினசரி மூன்று கப் பால் குடித்தால் ஆரோக்கியம் கிடைக்கும் என்று கூறியிருக்கின்றன. ஆனால் இக்கருத்தை ஹார்வர்ட் மற்றும் கார்னெல் பல்கலைக்கழகங்கள் உறுதியாக மறுத்துள்ளன. பால் எலும்புகளின் உறுதிக்கு காரணம் என்ற கூற முடியாது என்று இவை கூறியுள்ளன. தினசரி பால், சீஸ், யோகர்ட் என அமெரிக்கர்கள் வெளுத்து வாங்குவதால் அதிலுள்ள அதீத அமிலத்தன்மை எலும்புகளை சிதைக்கின்றன என்கிறது ஆய்வாளர்களின் அறிக்கை. இவர்கள் யாருமே பால் குழந்தைகளை உயரமாக்கும் என்று கூறவில்லை என்பதைக் கவனித்தீர்களா?
5. விண்வெளியில் ஈர்ப்புவிசை கிடையாது
ரியல்: விண்வெளியில் எடை இல்லாமல் இருப்பது பற்றி பல்வேறு செய்திகளைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். விண்கலத்தில் வீரர்கள் மிதந்தபடி தங்கள் பணிகளைச் செய்வதைப் பார்த்தவர்கள் இப்படி கூறுகிறார்கள். உண்மையில் விண்வெளியில் ஈர்ப்புவிசை உண்டு. ஆனால் நாம் பூமியில் அதனை உணர்கிறோம் அல்லவா? அந்தளவு வலிமையாக இல்லை. விண்கலங்கள் பூமியைச் சுற்றி பல கி.மீ. தூரத்தில் வலம் வர ஈர்ப்புவிசை தேவைப்படுமே? எங்கிருந்து அந்த ஈர்ப்புவிசை கிடைத்திருக்கும் என யோசியுங்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக