ரோலர்கோஸ்டரில் செல்லும்போது கீழே விழ வாய்ப்புள்ளதா?

 

 

Rollercoaster, Roller Coaster, Big Dipper, Switchback

 



ரியலா? ரீலா?

 

1.ஒருவர் தும்மினால் அவருக்கு மற்றவர்கள், காட் பிளெஸ் யூ சொல்லவேண்டும்.

ரியல்: மதம் சார்ந்த இரண்டு கருத்துகள் இதன் பின்னே இருக்கின்றன. ரோமில் பிளேக் நோய் பரவிக்கொண்டிருந்த காலகட்டம். போப் கிரிகோரி (கிரிகோரி தி கிரேட்), யாராவது தும்மினால் அவர் பிளேக் நோயால் பாதிக்கப்பட்டிருக்கக் கூடும். எனவே அவர் அந்நோயிலிருந்து குணமாக காட் பிளெஸ் யூ சொல்லி பிரார்த்தியுங்கள் என்று மக்களைக் கேட்டுக்கொண்டார். அடுத்து, தும்மலின்போது இறைவனின் ஆசி பெற்ற மனித ஆன்மா உடலிலிருந்து வெளியேறுகிறது. எனவே அதைத் தடுக்கவும், வெளியிலுள்ள தீய சக்திகள் பிறரைத் தாக்காமல் இருக்கவும் மக்கள் காட் பிளெஸ் யூ சொல்லத் தொடங்கினர் என்கிறது வரலாறு.

2.வைக்கோலைப் பயன்படுத்தி வீடு கட்ட முடியும்

ரியல்: மண், சுண்ணாம்பு, கற்கள் கொண்டு நம் முன்னோர்கள் வீடு கட்டினர். பின்னாளில் சிமெண்ட், மணல், செங்கற்கள் என புழக்கத்திற்கு வந்தன. இன்று உலகில் பசுமை வீடுகள் என்றழைக்கப்படும் கட்டட வகைகளில் வைக்கோல் கட்டடங்களும் ஒன்று. உலர்ந்த இறுக்கமாக பின்னப்பட்ட வைக்கோல்களைப் பயன்படுத்தி வீடுகள், பள்ளிகள், பூங்காக்கள், வணிகத்திற்குப் பயன்படும் கட்டடங்களைக் கூட கட்ட முடியும். உலர்ந்த வைக்கோலை களிமண், சுண்ணாம்பு அல்லது சிமெண்ட் கலந்து கட்டடங்களைக் கட்ட பயன்படுத்தலாம். சூழலுக்கு உகந்தது. குறைந்த விலையில் வீட்டைக் கட்ட முடியும். பிற கட்டுமானப் பொருட்களை விட நச்சு குறைவானது. கோடை, பனி, குளிர், மழைக்காலம் என அனைத்திற்கும் தாங்கும். இதன் சுவர்களில் கீறல்கள் ஏற்படுகிறதா என்பதைக் கவனிப்பது அவசியம். வைக்கோல் ஈரமானால் கட்டுமானத்தின் உறுதித்தன்மை பாதிக்கப்படும்.





3.ரோலர்கோஸ்டரில் பயணிக்கும்போது கீழே விழ வாய்ப்பிருக்கிறது.

பொழுதுபோக்கு பூங்காக்களில் உள்ள ரோலர்கோஸ்டர் முழுக்க இயற்பியல் விதிகளின்படி செயல்படுகிறது. இயக்க ஆற்றல், நிலையாற்றல், ஈர்ப்புவிசை ஆகியவற்றின்படி செயல்படுவதால் அதில் பயணிப்பவர்கள் மேலும் கீழுமாக, தலைகீழாக அதிவேகமாக சென்றாலும் கீழே விழமாட்டார்கள். பயணிகள் அதில் அமருவதற்கு முன்னரே மணல் மூட்டைகளை வைத்து சோதிக்கின்றனர். பின்னர், பூங்கா பணியாளர்கள் அதில் ஏறி பயணிப்பது இரண்டாம் கட்ட சோதனை.

பயணிகள் அமைந்துள்ள கார் மேலேறுவதிலும் கீழிறங்குவதிலும் புவிஈர்ப்புவிசையின் பயன்பாடு அதிகம். இயக்க ஆற்றல் முறையில் பயணிகள் மேலும், கீழும் சென்று வருகின்றனர். நிலையாற்றல் பயணிகளின் மீது எதிராக செயல்படுவதால் அவர்கள் கீழே விழுவதில்லை. ரோலர்கோஸ்டர் அமைப்பு நீள்வட்ட வடிவில் அமைக்கப்படுவது மையவிலக்கு விசையின் கடுமையைக் குறைக்க உதவுகிறது. இதன் வேகமும், திசையும் மாறிக்கொண்டே இருக்கும். நியூட்டனின் இயக்கவியல் விதிப்படி செயல்படும் இந்த அமைப்பின் இயக்கம், சீரற்றது ஆகும்.

4.கோடைக்காலத்தில் சூரிய ஒளி மூலம் நடைபாதையில் முட்டையை வேக வைக்க முடியும்

ரியல்: கோடை வெயில் காரணமாக இப்படி யோசனைகள் பலருக்கும் தோன்றும். முட்டையிலுள்ள புரதம் முழுமையாக வேக 70 டிகிரி செல்ஸியஸ் வெப்பம் தேவை. நடைபாதைக் கற்கள் கருப்பு நிறத்தில் இருந்தால் இது ஓரளவு சாத்தியம். ஆனால் முட்டை சீராக வெந்திருக்க வாய்ப்பு குறைவு. கான்க்ரீட்டில் வெப்பம் 62 டிகிரி செல்ஸியஸ்தான் இருக்கும் என்பதால் முட்டையை வேகவைப்பது கடினம்.

அமெரிக்காவிலுள்ள அரிசோனா மாநிலத்தில் ஆண்டுதோறும் ஜூலை 4 அன்று, சூரியவெப்பம் மூலம் முட்டையை வேக வைக்கும் போட்டியை நடத்துகிறார்கள். இதில் பங்கேற்பாளர்கள் லென்ஸ், கண்ணாடி, அலுமினிய பிரதிபலிப்பான்கள் என பலவற்றையும் பயன்படுத்துகிறார்கள். 1899ஆம் ஆண்டிலேயே லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் பத்திரிகையில் இத்தகைய புருடா செய்திகள் வலம்வந்திருக்கின்றன.



5. கடல் உயிரினமான ஆக்டோபஸால் மனிதர்களை அடையாளம் கண்டறிய முடியும்.

ரியல்: உண்மைதான். முதுகெலும்பற்ற கடல் உயிரினமான ஆக்டோபஸ்ஸிற்கு எட்டு கரங்கள் உண்டு. இவற்றின் சிக்கலான நரம்பமைப்புகள் மூலம் தகவல்களை எளிதாக நினைவுகொள்ளுகின்றன. கரங்களிலுள்ள நரம்புகள் மூலம் தகவல்களைப் பெற்று அவை தன் செயல்பாட்டைக் கட்டுப்படுத்துகின்றன. ஆய்வகங்களிலும், கடலிலும் உள்ள ஆக்டோபஸ்களை சோதித்ததில் அவை விளையாட்டுத்தன்மை கொண்டவை. பார்த்து தொட்டுணர்ந்த மனிதர்களின் முகங்களை அவை எப்போதுமே மறப்பதில்லை என்றும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளார். ஆக்டோபஸ்களோடு நெருங்கிப் பழகிய ஆராய்ச்சியாளர்கள், தங்கள் தோற்றத்தையும், ஆடைகளையும் மாற்றிக்கொண்ட பின்னும் ஆக்டோபஸ்கள் அவர்களை சரியாக அடையாளம் கண்டு வியக்க வைத்துள்ளன.


dinamalar pattam


கருத்துகள்