உணர்ச்சிகள் வழியாக ஒருவரை எளிதாக புரிந்துகொள்ளும் செயற்கை நுண்ணறிவு! - பரபரக்கும் ஏஐ ஆராய்ச்சி உலகம்
உணர்ச்சிகளை புரிந்துகொள்ளும் செயற்கை நுண்ணறிவு!
செயற்கை நுண்ணறிவு சார்ந்த ஆராய்ச்சி, மனிதர்களின் உணர்ச்சிகளை புரிந்துகொள்ளும் அளவுக்கு முன்னேறி வருகிறது.
செயற்கை நுண்ணறிவு பல்வேறு துறைகளில் வளர்ச்சிபெற்று வருகிறது. பல்வேறு இணையத்தளங்களில் வாடிக்கையாளர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லுவதும் ஏ.ஐ நுட்பம்தான். புகைப்படங்களை பயிற்சி செய்து விலங்குகளை எளிதில் அடையாளம் காண கற்பதோடு மனிதர்களின் உணர்ச்சிகளையும் புரிந்துகொள்ளும் முயற்சியில் செயற்கை நுண்ணறிவுத்துறை பயணிக்கிறது.
எப்படியிருக்கிறீர்கள், சாப்பிட்டீர்களா? என்ற வார்த்தைகளை இன்று பலரும் வீடியோ அழைப்புகளிலும், குறுஞ்செய்திகளிலும்தான் கேட்டு வருகிறார்கள். இந்த அழைப்புகள் நேருக்கு நேர் பேசுவது போல இருக்காது. இதில் ஒருவரின் உணர்வைப் புரிந்துகொண்டு பேசினால் எப்படியிருக்கும்?
எல் கலியோபி என்ற பெண்மணி, அஃபெக்டிவா என்ற செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். வண்டி ஓட்டும்போது, மின்னஞ்சல் அனுப்பும்போது ஒருவரின் உணர்வுகளை எளிதாக அடையாளம் காணமுடியும் என இந்நிறுவனம் கூறுகிறது. இதன்மூலம் ஒருவருக்கு ஏற்படும் மனநலப்பிரச்னைகளை எளிதாக கண்டறியலாம். 2009ஆம் ஆண்டு செயல்படத்தொடங்கிய அஃபெக்டிவா, விளம்பரங்கள் எப்படி மக்களைச் சென்றடைகின்றன என்பதைக் கணித்தது.
இதற்காக மார்க்கெட்டிங் நிறுவனத்துடன் இணைந்து மக்களின் வீடியோக்களை ஆராய்ந்து அவர்களின் முக உணர்ச்சிகளை பதிவு செய்தது. இதைப்போலவே லண்டனில் உள்ள ரியல்ஐஸ் என்ற நிறுவனமும் செயல்பட்டு வருகிறது. ’’ நாங்கள் ஒருவர் பேசும் குரல் வழியே அவரின் உணர்ச்சிகளை ஆராய்கிறோம்’’ என்கிறார் அமெரிக்காவைச் சேர்ந்த டெக் நிறுவனமான பிகேவியரல் சிக்னல்ஸின் ராணா குஜ்ரால். வணிக நிறுவனங்கள் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒருவர் வாங்கும் கடனை கட்டுவாரா இல்லையா என்று கூட கணித்து சொல்லிவிட முடியும். பிகேவியரல் சிக்னல்ஸ் நிறுவனம் தனது தொழில்நுட்பத்தை ஐரோப்பிய வங்கி ஒன்றுக்கு விற்றுள்ளது.
எக்மன் ஃபேஷியல் ஆக்சன் கோடிங் சிஸ்டம்படி(FACS), உலகளவில் அனைவரும் அறிந்த முக உணர்ச்சிகள் ஏழு. இவற்றை நன்கு பார்த்து புரிந்துகொண்டவர் 77 சதவீதம் கணித்துவிடமுடியும். எக்மன் கோட்பாட்டுப்படி ஏ.ஐ. நிறுவனங்கள் அல்காரிதம்களை உருவாக்குகின்றன. மனிதர்கள் முழுமையானவர்கள் இல்லை எனும்போது அவர்களின் உணர்ச்சிகளை எப்படி அல்காரிதம்கள் சிறப்பாக கணிக்கும் என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.
சீன நிறுவனமான மெக்வில், மைக்ரோசாப்ட் ஆகிய இரு நிறுவனங்கள் இணைந்து உணர்ச்சிகளைக் கணிக்கும் ஏ.ஐ. அல்காரிதத்தை தயாரிக்க முனைந்தன. இதில் பேஸ்கெட்பால் விளையாடும் கருப்பின, வெள்ளையின வீரர்களின் படங்களைப் பயன்படுத்தினர். கருப்பின வீரர்கள் விளையாட்டில் எதிர்முறை உணர்ச்சிகளை காட்டினர் என முடிவுகள் கூறின. இங்கிலாந்திலுள்ள லங்கன்ஷையரில் சிசிடிவி வீடியோக்களிலுள்ள மக்களின் உணர்ச்சிகளை காவல்துறை ஆராய்ந்து வருகின்றனர். இந்த வீடியோக்களை 31 நாட்களில் அழித்துவிடுவதாக விளக்கம் அளித்துள்ளனர். டொயோட்டா கார் தயாரிப்பு நிறுவனமும் இத்தொழில்நுட்பத்தை சோதனை முறையில் பயன்படுத்தி வருகிறது. உலக நாடுகளில் உணர்ச்சிகளை கண்டறியும் ஏ.ஐ. நுட்பம் அமலுக்கு வரும் முன்னரே அதற்கான சட்ட விதிகளை வலுவாக உருவாக்குவது அவசியம்.
தகவல்
New scientist
AI gets emotional
Chris baraniuk
New scientist 21 November 2020
கருத்துகள்
கருத்துரையிடுக