கந்தர்வனை பல ஜென்மங்களாக துரத்தி பலிகொள்ளத் துடிக்கும் யட்சிணி! - குபேரவனக்காவல் - காலச்சக்கரம் நரசிம்மா

 

 

 

 Medusa, Gorgon, Greek, Monster, Mythology, Antique

 

 

 

 

குபேர வனக்காவல்


காலச்சக்கரம் நரசிம்மா


அமுதன் என்ற சிறுவனை அவனது தாய்மாமா குடும்பத்தினர் கிண்டல்செய்வது முதல் நாவல் தொடங்குகிறது. தந்தையும்,தாயும் காணாமல் போன சூழலில் அவன் தன் தாய்மாமா குடும்பத்தோடு வாழ்ந்து வருகிறான். ஆனால் அவனது அத்தை, அவரது அம்மா என அனைவரும் அவனது நிறம், அவனது காணாமல் போன அம்மாவின் நடத்தை ஆகியவற்றை மனதை வருத்தும்படி பேசிக்கொண்டேயிருக்கிறார்கள். அதனை நம்பாடுவான் என்ற சிவ பக்தர் மட்டும் கோபத்தோடு பார்க்கிறார். அமுதன் யார், அவனது அப்பா, அம்மா யார் என்ற ரகசியங்களை நம்பாடுவான் என்ற கிழவர் அவனுக்கு சொல்லுகிறார். அதிர்ச்சியளிக்கும் அந்த சம்பவங்களின் முன்னொட்டாக புருஷாமிருகம் என்ற கதை நாவல் தொடங்கும் முன்னரே விவரிக்கப்பட்டுள்ளது.

Time, Astrology, Symbol, Ring, Silver, Death, Live

அதை படித்து விட்டு நாவலுக்குள் வந்தால் எல்லாம் சுலபமாக புரியும். அமானுஷ்யம் கலந்த திகில் கதைதான்.


புருஷோத்தமன் என்ற குழந்தை ஶ்ரீவாத்சாங்கம் என்ற வைணவரின் வீட்டு பெண்ணுக்கு மகனாக பிறக்கிறது. அந்த குழந்தையின் எதிர்காலம் என்னவென்று சகடவாக்கி ஒருவர் நாடிச்சக்கரங்களை தொட்டு சொல்கிறார். அது பேரனின் பிறப்பை சந்தோஷமாக கொண்டாடிய தாத்தா, பாட்டிக்கு உயிர்க்கொல்லியாகிறது. 12 பிறப்பான மனித பிறப்பில் அவனது உயிரைக் கொல்ல துரத்திவரும் யட்சிணியைப் பற்றிய விஷயம்.

Woman, Adult, Fantasy, Serpent, Female, Magical, Magic

சாலையில் விபத்து எச்சரிக்கை என பலகை வைத்தால் மட்டும் விபத்துகள் முழுவதுமாக நின்றுவிடுமா? அதுபோலவே எச்சரிக்கைகளை நம்பாடுவான் முதலிலேயே சொல்லி விடுகிறார் என்றாலும் விதி வலியது. தஞ்சாவூரிலிருந்து சென்னைக்கு சொத்துக்களை விற்றுவிட்டு வனஜா வந்து ஒண்டிக்குடுத்தனத்தில் பிள்ளையை வளர்க்கிறார். ஆனாலும் புருஷோத்தமனை கொல்ல நினைக்கும் ம்ருகா துரத்துகிறாள். நம்பாடுவான் தனது ஆலோசனைகளை சொன்னாலும் களத்தில் போராட வேண்டியது புருஷோத்தமன்தான். ஆனால் அதனை அவன் உணராத சூழ்நிலை. அவன் வாழ்கை என்னவானது, இத்தனைக்கு விரைவிலேயே ம்ருகாவின் காதல் வலையை அவன் அடையாளம் கண்டாலும் அவளை தடுத்து நிறுத்தும் சக்தியை அவன் இழந்திருந்தான். அப்போது அவனைக் காத்துக்கொள்ள ஜ்யோத்ஸ்னா என்ற சூரியனின் பெயர் கொண்ட மாமன் மகள் உதவுகிறாள்.


ஆனாலும் ஜென்மாந்திர பந்தமாக புருஷோத்தமனை வேட்டையாட வரும் ம்ருகா, அவனை திட்டம் போட்டு வலையில் வீழ்த்துகிறாள். இறுதியில் அவன் அந்த வலையிலிருந்து மீண்டானா, இல்லையா என்பதுதான் 287 பக்க நாவலின் இறுதிப்பகுதி.


பரபரப்புக்கு குறைவே இல்லாத கதை. காவல் மிருகம் தனது காவலை மீறுபவர்களை பிடித்து கொல்கிறது. அதை எப்படி செய்கிறது, அதன் கொல்லும் விதம் என்ன என்பதுதான் இங்கே சிறப்பு. மதன பயங்கரி என்ற தன்மை கொண்ட யட்சிணி, காதலையும் காமத்தையும் தனக்கு ஏற்றபடி ஆயுதமாக பயன்படுத்துகிறாள். இதில் விழுந்தவர்கள் விழிக்கும்போது சொர்க்கம்தான். புருஷோத்தமன் மெல்ல அந்த வலையில் விழும் விவரணைகள் சிறப்பாக எழுதப்பட்டிருப்பதால், ரசனையாக இருக்கும் அதேநேரம், சாகச அனுபவமாகவும் மாறுகிறது.


சதி எனும் பழக்கத்தை ஜ்யோத்ஸ்னா ஆதரித்துப் பேசும் பகுதி இயல்பானதாக இல்லை. எந்த காலமாக இருந்தாலும் அந்த வாதம் தவறானது. குறிப்பிட்ட பாத்திரத்தின் மனக்கருத்து என்று கூறமுடியுமா என்று தெரியவில்லை. கற்புக்கு பாதுகாப்பு நெருப்பு என்ற கருத்தில் அக்கருத்து கூறப்படுகிறது. யட்சிணி ம்ருகாவும் இதில் கோட்டயம் புஷ்பநாத் போல கணவர் யக்ஞம், துணைவர் புருஷ் என இருவரிடமும் ஒரே நேரத்தில் காமம் கொள்வதில்லை. மனப்பூர்வமான காதலும், அன்பும் புருஷ்ஷிடம் மட்டுமே. உடல் மட்டும் யக்ஞத்திற்கு என ம்ருகா இருப்பது அப்பாத்திர வார்ப்புக்கு நேர்மையாக இல்லை. இறுதிப்பகுதியில் சதியை நிறைவேற்றியிருக்கிறாள். இம்முறை அமுதனின் நன்மைக்காக அச்சடங்கு நடைபெறுகிறது.



ம்ருகா இதில் தான் நினைத்ததை எப்பாடுபட்டாவது யார் உயிரை பலிகொடுத்தாவது சாதிக்கும் பாத்திரம் இறுதிரை அந்த இறுமாப்பு அவளின் கண்களில் விலகாமல் இருப்பது கதையை வலுவாக்குகிறது. சுயமாக முடிவெடுக்கும் திறன் கொண்டவள், அசுர கோபம் கொண்டவள். தான் நினைத்த வாழ்க்கைக்காக குறுக்கே நின்ற யாரையும் எப்போதும் மன்னிக்க அவள் தயாராக இருப்பதில்லை. இந்த ஆக்ரோஷத்தை நாவலில் வேறு எந்த பெண் பாத்திரங்களிடமும் பார்க்க முடியாது. ம்ருகாவிற்கு அடுத்து கவனம் ஈர்க்கும் பாத்திரம் சீமரின் பேத்தி மாடில்டா. இவள்தான் அமுதனை இயக்குகிறாள். அவன் வெற்றிபெறுவதற்கான பல்வேறு விஷயங்களை உருவாக்குகிறாள். நந்தனா என்ற பாத்திரம் காதல் என்ற விஷயத்திற்காக வந்தாலும் கூட கதையை ஒரு அங்குலம் கூட நகர்த்த உதவுவதில்லை.


கோமாளிமேடை டீம்.




கருத்துகள்

பிரபலமான இடுகைகள்