பத்தொன்பதாம் நூற்றாண்டின் சிறந்த கண்டுபிடிப்புகள்!
பத்தொன்பதாம் நூற்றாண்டின் சிறந்த கண்டுபிடிப்புகள்!
சைக்கிள்
1817-1880
பதினைந்தாம் நூற்றாண்டு தொடக்கத்திலேயே சைக்கிள் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் தொடங்கிவிட்டன. அப்படித்தான் இரண்டு, நான்கு சக்கர வண்டிகள் உருவாக்கப்பட்டன. ஆனால் பாதுகாப்பான இரு சக்கர வாகனங்கள் கண்டுபிடிக்க மனிதர்களுக்கு நானூறு ஆண்டுகள் தேவைப்பட்டன. 1817ஆம் ஆண்டு ஜெர்மனியைச் சேர்ந்த அறிவியலாளர் கார்ல் வான் டிரெய்ஸ், மரத்தினால் ஆன சக்கரங்களை இணைத்த சைக்கிளை உருவாக்கினார். இதில் சீட்டும் கூட இருந்தது. 1860ஆம் ஆண்டு பெடல்களைக் கொண்ட சைக்கிள் உருவானது. இதனை வெலோசிபெட் என்று அழைத்தனர். இதனை பிரான்சில் உருவாக்கினர். வடிவமைப்பு ஓகே என்றாலும் சைக்கிள் டயர் கடினமாக இருந்ததால் இதில் பெடல் போடுவது எலும்புகளை உலுக்கும் அனுபவத்தை கொடுத்தது. எனவே இதனை போன்சேக்கர் என்று அழைத்தனர். பிறகு 1880இல் உருவாக்கப்பட்ட சைக்கிள் தான் பெடல் அமைப்பும், செயின் அமைப்பும் இணைந்து சைக்கிளை செலுத்துவதற்கு சமநிலையைக் கொடுத்தது.
1865
பதப்படுத்துதல்
பத்தொன்பதாம் நூற்றாண்டில் உணவு, பானங்கள் ஆகியவற்றை பதப்படுத்தி வைக்கும் தேவையை மனிதர்கள் உணர்ந்தனர். குறிப்பாக பால் உற்பத்தி செய்யப்பட்ட அனைத்தையும் ஒரே நேரத்தில மக்களால் பயன்படுத்த முடியவில்லை. இதனால் அவை விரைவில் கெட்டுப்போனதால் மக்களுக்கு பொருளாதார இழப்பும் ஊட்டச்சத்து பாதிப்பும் ஏற்பட்டது. இதற்காக பதப்படுத்துதல் எனும் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டது. இதனால் பாலை குறிப்பிட்ட வெப்பநிலைக்கு சூடுபடுத்தி அதிலுள்ள நுண்கிருமிகளை அழித்தனர். இதனால் பால் பொருட்கள் குறிப்பிட்ட நாட்களுக்கு கெடாமல் இருந்தது. ஒயின் தயாரிப்பில் இருந்த லூயிஸ் பாஸ்டர் இந்த பதப்படுத்துதல் முறையை விபத்தாக கண்டுபிடித்தார். இன்று இம்முறை மதுபானம், பால் உற்பத்தி துறையில் தவிர்க்க முடியாத செயல்முறையாக உள்ளது. நுண்ணுயிரியல் சார்ந்த துறையிலும் பதப்படுத்துதல் முக்கியமானது. இன்று தயாரிக்கும்படும் பல்வேறு பால்பொருட்கள் 180 நாட்கள் வரை கெடாமல் சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்கப்படவும் பதப்படுத்துதல் முறையே காரணம்.
1866
பாதாளச் சாக்கடை அமைப்பு
பத்தொன்பதாம் நூற்றாண்டில் லண்டன் தேம்ஸ் நதி, சாக்கடை கழிவுகளால் கடுமையாக மாசுபட்டு துர்நாற்றம் வீசியது. இதனால் ஏற்பட்ட காலரா பாதிப்பால் பத்தாயிரம் பேர் இறந்துபோனார்கள். இந்த சம்பவம் நடைபெற்றது, 1853 முதல் 1854க்கு இடைப்பட்ட காலமாகும். அரசு எப்போதும் போல இறந்துபோனவர்களை கணக்கெடுத்தபிறகு நடவடிக்கையில் இறங்கியது. பொறியியலாளர் ஜோசப் பாஸல்கெட்டே பாதாளச்சாக்கடை திட்டத்தை உருவாக்கினார். பெரும் குழாய்களை அமைத்து போர்லேண்ட் சிமெண்ட் மூலம் கட்டுமானத் திட்டம் நிறைவேறியது. அப்போது கூட கழிவுகளை எந்திரம் மூலம் அகற்றும் வசதி இல்லை. மனிதர்கள்தான் அதனை செய்தனர்.
1829
ஸ்டீபன் ராக்கெட்
ராக்கெட் என்றதும் சீனாவுக்கு போட்டியாக… என நினைத்துவிடவேண்டாம். பயணிகள் ரயிலை உருவாக்கியவர் ஸ்டீபன். 1829ஆம் ஆண்டு இவர் ராக்கெட் என்ற பெயரில் உருவாக்கிய நீராவி எஞ்சின் மணிக்கு 48 கி.மீ வேகத்தில் பயணித்தது. அப்போது இது பெரிய விஷயம். பல்வேறு மாதிரிகள் உருவாக்கப்பட்டு பிறகு லிவர்பூல் மான்செஸ்டரில் இந்த ரயில் இயங்கத் தொடங்கியது.
எக்ஸ்ரேஸ்
1895
இதுவும் விபத்தாக உருவான கண்டுபிடிப்புதான். ஜெர்மன் இயற்பியலாளர் வில்லியம் ராண்ட்ஜென் வாயுக்கள் நிரம்பிய குழாய் வழியாக மின்சாரத்தை செலுத்தும்போது எக்ஸ்ரே முறையை கண்டுபிடித்தார். இப்படி முதலில் எடுத்த எக்ஸ்ரே அவரது மனைவியின் மோதிரம் அணிந்த விரல் படம்தான். கதிர்வீச்சு நமது உடலை கடந்துசெல்லும்போது ஏற்படுவதுதன் எக்ஸ்ரே படம்.
கருத்துகள்
கருத்துரையிடுக