தன்னைதானே உணரவைக்கும் ஒரு நெடும் பயணம்! - கார்வான்
கார்வான்
துல்கர் சல்மான் பெங்களூருவில் வேலை செய்பவர். புகைப்படம் எடுப்பதை தொழிலாக வைத்துக்கொள்ள நினைப்பவரின் எண்ணத்திற்கு அவரின் அப்பா சம்மதிப்பதில்லை. இதனால் வேண்டாவெறுப்பாக ஐடி கம்பெனி ஒன்றுக்கு வேலைக்கு சென்றுகொண்டிருக்கிறார். அப்போது அவரின் அப்பா இறந்துவிட்டதாக தகவல் வருகிறது. அதனை கார்கோ நிறுவனம் ஒன்றில் அனுப்பி வைக்கிறார்கள். ஆனால் அதில் ஒரு குழப்பம் ஏற்பட்டு விடுகிறது. துல்கரின் அப்பாவுக்கு பதிலாக கொச்சியைச் சேர்ந்த பெண் ஒருவரின் உடலை அனுப்பிவிடுகிறார்கள். இவரின் அப்பா உடல் கொச்சிக்கு மாற்றி அனுப்பப்படுகிறது. இப்படி செல்லும்போது இவர்களிடம் உள்ள உடலுக்கு சொந்தக்காரரான தாஹிரா என்ற பெண்மணியின் மகள், ஊட்டியில் உள்ள பள்ளியில் படித்துக்கொண்டிருக்கிறாள். அவளையும் அழைத்துச்செல்லும்படி நேருகிறது. இதன்படி வேன் ஓட்டுநரான சௌகத், துல்கர், தான்யா என மூவரின் பயணம் தொடங்குகிறது. இந்த மூவருக்கும் உள்ள ஒற்றுமை மூவருமே அப்பாவினால் பாதிக்கப்பட்டவர்கள், ஒருவருக்கு அப்பா கொடுமைக்காரர், இன்னொருவருக்கு புரியாத புதிர், இன்னொருவருக்கு அப்பாவைப் பார்க்கவோ புரிந்துகொள்ளவோ கூடவோ வாய்ப்பு கிடைப்பதில்லை.
வேனில் செல்லும் பயணத்தில் அவர்கள் தங்களுக்குள் பரிமாறிக்கொள்ளும் அனுபவங்கள் வழியாக தங்களையே அடையாளம் கண்டுகொள்கிறார்கள். படத்தின் இறுதியில் அந்த அனுபவங்கள் வாயிலாக அவர்கள் என்ன பெற்றுக்கொள்கிறார்கள் என்பதை நாம் காண்கிறோம்.
இந்திப்படத்திற்கு ஆங்கில சப்டைட்டில் பார்த்திருப்போம். ஆனால் தமிழ் சப்டைட்டில் கூட உருவாக்கியிருக்கிறார்கள். ஆர்எஸ்விபி நிறுவனம் தயாரித்த கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மற்றொரு படம் இது.
துல்கர், வேலை மீதான விரக்தியை முதல்காட்சியில் கணினியில் சீட்டு விளையாடும்போதே காட்டிவிடுகிறார்கள். மற்றபடி அவருக்கு லிப்டில் பார்க்கும் பெண்ணுடனான ஒரே ஒரே காதல் காட்சிதான் உள்ளது. காமெடி, காதல் என பல்வேறு இடங்களில் சிக்சர் அடிப்பவர், வேன் உரிமையாளரான சௌகத்தான். இர்பான்கான் இந்த பாத்திரத்தில் அலட்டலாக நடித்திருக்கிறார். கையில அழுக்கு படலேன்னா எப்படி வாழ்க்கையோட ருசி தெரியும்?, பிணத்தை காரில் வெச்சுக்கிட்டு ரொமான்ஸ் பண்றியா, நீங்க உருவாக்குன கிரிக்கெட்டில நாங்கதான் ஜெயிக்குறோம் என பல்வேறு இடங்களில் தன் மனதிலுள்ளவற்றை பேசும் மனிதராக சௌகத் இருக்கிறார்.
இறுதியில் அவமானம் பழகிப்போச்சு என தனது குடும்பம் பற்றி மனந்திறந்து பேசும் இடம் நெகிழ்ச்சியானது. ஷெனாய் வாசிப்பவரின் மூன்றாவது மனைவியை தன்னோடு அழைத்துப்போகும்போதும் தன் அம்மா போல இருக்காதே என்று சொல்லி அழைக்கிறார்.
மிதிலா பால்கர் பெண் பாத்திரம் மிகவும் வலிமையான மன வலிமை கொண்டது. மாணவர்களின் ஹாஸ்டல் அறையிலிருந்து ஜன்னல் வழியாக குதித்து வரும் காட்சியில் அவர் துணிச்சலானவர் என்பதை காட்டிவிடுகிறார்கள். பெரும்பாலும் படத்தில் அவர் ஷார்ட்ஸ்தான் போட்டிருக்கிறார். படித்த தைரியமான பெண். அவரைப் பார்த்து பேசும்போதுதான் துல்கர் அவரது அப்பாவைப் போல மாறுகிறார். ஒரு கெட்ட செய்தி, நல்ல செய்தி என மிதிலா பால்கர் சொல்லும் வசனம், குறும்பானது.
ரோடு மூவி என்பதற்கு பொருத்தமான பல்வேறு சம்பவங்கள் மனிதர்களை வைத்து கோர்த்துள்ள படம்.
அனுராக் சைக்கியா, ஸ்லோசீட்டா, பிரதீக் குக்கத் என பல்வேறு இசையமைப்பாளர்களின் பாடல்களை காரின் கண்ணாடி இறக்கியதும் முகத்தில் அறையும் காற்று போல புத்துணர்ச்சியாக கேட்கலாம். எல்லா பாடல்களுமே படத்தில் ரரும் சூழல்களுக்கானவை.
வானம்!
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக