தன் குடும்பத்தை வெட்டிக்கொலை செய்தவர்களை ரத்தப்பொரியலாக்கும் சென்னகேசவரெட்டி! - சென்னகேசவரெட்டி- விவி விநாயக்
சென்னகேசவ ரெட்டி
ரெட்டி குடும்பங்களுக்குள் நடக்கும் நீதி, அநீதி போராட்டம்தான் படம்.
கிராமத்தில் உள்ள பள்ளியில் சென்ன கேசவ ரெட்டியின் சிலை உள்ளது. அதனை பற்றி பிரார்த்தனை கூட்டத்தில் பெருமையாக சொல்லும் ஒருவர், அவர் எங்கிருந்தாலும் திரும்ப நம் ஊருக்கு வருவார் என்கிறார். அதேநேரம் பெரிய மாளிகை போன்ற வீட்டில் ஒரு போட்டோவை எடுத்துப் பார்க்கும் தேவயானியை, அவரது கணவர் அடித்து உதைக்கிறார். அதில் இருப்பவர் வேறு யார், சென்ன கேசவ ரெட்டிதான்.
பிறகு கதை மும்பைக்கு செல்ல அங்கு அசிஸ்டெண்ட் கமிஷனராக தன் போக்கில் அரசியல்வாதிகளுக்கு போக்கு காட்டி நீதியை நிலைநாட்டும் அதிகாரி வேறு யார் பாலையாதான். வாலிபராக இருக்கிறார். இவரை கல்லூரியில் பார்க்கும் மருத்துவப்படிப்பு படிக்கும் பெண் தங்கள் ஊர் பெரியவருக்கு தகவல் சொல்ல, அவர் இவரைப் பார்க்க வந்து உண்மையைத் தெரிந்துகொள்கிறார். ஆனால் அவர் யார் என்ற உ்ண்மையை சொல்லக்கூடாது என தங்கள் ஊரைச் சேர்ந்த பெரிய மனிதரிடம் வாக்கு கொடுத்துவிட்டு ஊர் திரும்புகிறார்.
சென்ன கேசவ ரெட்டிக்கும் அவரைப் போலவே இருக்கும் போலீஸ் அதிகாரிக்கும் என்ன தொடர்பு என்பதை அரிவாளும், நாட்டு வெடிகுண்டுமாக விவரித்திருக்கிறார்கள்.
அண்ணன் தங்கை பாசம் இதில் எல்லை மீறியதாக உள்ளது. எப்படியென்றால் அண்ணனுக்காக தனது கணவனை தானே தங்கை வெட்டிக்கொன்றுவிட்டு சிறைக்கு போகுமளவு. கோர்ட்டில் நீதிபதியை பாம் வைத்து கொல்லுவது, சென்னகேசவ ரெட்டி குடும்பத்தினரை உறவாடி பின்னர் குழந்தைகளை கூட விடாமல் அரிவாளால் வெட்டிக் கொல்லுவது, போலீஸ் மீது நாங்க ராயலசீமாடா என நாட்டு வெடிகுண்டை வீசுவது என விவி விநாயக் படத்தின் இயக்குநர் யாருப்பா என கேள்வியைக் கேட்க வைத்துக்கொண்டே இருக்கிறார்.
படத்தின் காதல்காட்சிகள் ரத்தக்களறியான கதையில் பெரிதாக உதவவில்லை. இரண்டு பாலையா இருந்தால் வயது மூத்தவர்தான் முக்கியமானவராக இருப்பார். இதிலும் மூத்தவர் பேசும் வசனங்களும் செயல்பாடுகளும்தான் சிறப்பாக உள்ளன. படத்தின் முடிவில்தான் வாலிப பாலையா காக்கிச்சட்டையைத் தூக்கிவிட்டு தன் தந்தையின் இடத்தில் செயல் தலைவராகிறார்.
வலி எல்லோருக்கும் ஒன்றுதான். அநீதி செய்பவனுக்கு தண்டனை கொடுத்தே ஆகவேண்டும் என போராடும் சென்னகேசவ ரெட்டி தனது முழு குடும்பத்தையே பலி கொடுத்தாலும் எதற்கும் பயப்படாமல் தான் நினைத்ததை செய்துகாட்டுகிறார். அவரின் செயலின் தீ்விரம் அவரை எதிர்க்கும் கடமை கண்ணியமான மகனையே இளகச்செய்துவிடுகிறது. ஒருவகையில் அதுவே சிறையில் காலத்தைக் கழிக்கும் அவரது தந்தைக்கு மகனின் பூரணமான அஞ்சலியாக இருக்கும்.
ரத்தப்பொரியல்!
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக