நவீன காலத்தின் மிகச்சிறந்த தொழிலதிபர்! துணிச்சல், தைரியம், தொலைநோக்குப்பார்வை, அசாதாரண வெளிப்படைத்தன்மை கொண்ட எலன் மஸ்க்

 

 

 

 

 

 


 


2020ஆம் ஆண்டின் சிறந்த தொழிலதிபர்!


அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்பேஸ்எக்ஸ், டெஸ்லா நிறுவனங்களைத் தொடங்கியவரான எலன் மஸ்க், பார்ச்சூன் இதழால் 2020ஆம் ஆண்டிற்கான சிறந்த தொழிலதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பொதுவாக டிவிட்டரில் தொழில்தொடர்பான விஷயங்களை பலரும் பகிர்ந்துகொள்ளமாட்டார்கள். ஆனால் எலனின் பல்வேறு டிவிட்டர் பதிவுகள் நாளிதழில் தலைப்புச்செய்தியாகும் வகையில் பகிரங்கமான உண்மையை பேசுவதாக உள்ளன. இப்படி பேசுவது மட்டுமல்ல செய்யும் செயலிலும் அவர் புலிதான்.


கடந்த பத்தாண்டுகளில் நாசாவின் பல்வேறு பணிகளை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வெற்றிகரமாக செய்துள்ளது. நூற்றுக்கு மேற்பட்ட முறை விண்வெளிக்கு அதன் ஃபால்கன் ராக்கெட்டுகள் சென்று திரும்பியுள்ளன. கடந்த ஆண்டு நவம்பரில், அமெரிக்காவின் மூன்று விண்வெளி வீரர்களுடன், ஜப்பான் நாட்டு வீரரையும் கூட சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பி சாதனை புரிந்தது ஸ்பேஸ் எக்ஸ். இதற்கான அனுமதி கூட ஒருவாரத்திற்கு முன்னர்தான் எலன் மஸ்க் பெற்றார் என்பது முக்கியமான விஷயம்.


செவ்வாயில் மக்களை குடியேற்றுவதுதான் எலனின் நீண்டகால திட்டம். இவரின் டெஸ்லா நிறுவன மதிப்பு, ஜெனரல் மோட்டார்ஸ், ஃபோர்டு ஆகிய நிறுவனங்களை விட பலமடங்கு அதிகம். போரிங் கம்பெனி, நியூராலிங்க், ஓபன் ஏஐ என எலன் தொடங்கிய நிறு்வனங்கள் அனைத்துமே எதிர்காலத்திற்கானவை. போக்குவரத்து, மருத்துவம், செயற்கை நுண்ணறிவு என பல்துறைகளிலும் இவை ஆட்சி செலுத்தவிருக்கின்றன.


இன்று தொழில்துறையிலுள்ள இயக்குநர்களை உங்களுக்கு இன்ஸ்பிரேஷன் யார் என்று கேட்டால் எலன் மஸ்க் பெயரைத்தான் சொல்லுவார்கள். அந்தளவுக்கு அடுத்த 12 அடிகளை முன்னதாகவே தீர்மானித்து செயல்பட்டு வருகிறார். 2019ஆம் ஆண்டு டெஸ்லா நிறுவன பங்குகள் விலை வீழ்ச்சியடைந்தது, வால்மார்ட் சோலார் பேனல்கள் தொடர்பாக வழக்கு தொடர்ந்தது என பல்வேறு சங்கடங்களை சந்தித்து மீண்டிருக்கிறார் எலன் மஸ்க்.


’’எந்த சிக்கலான விவகாரங்களிலும் முடிவை ஆலோசித்து வேகமாக எடுக்கும் திறன் எலனுக்கு உண்டு’’ என்கிறார் இரிடியன் கம்யூனிகேஷன் நிறுவன இயக்குநரான மேட் டெச். இவரது நிறுவன செயற்கைக்கோள்களை ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம், விண்ணில் ஏவியுள்ளது. பல்வேறு திறமையானவர்களைக் கண்டுபிடித்து அவர்கள் மூலம் உருவாக்கும் புதிய கண்டுபிடிப்புகளை சிறப்பாக விற்பனை செய்வதற்கான திறன் எலனுக்கு உள்ளது என்பதுதான் அவரின் வெற்றி ரகசியம்.


தனது பணியாளர்களை நினைத்தவுடனே வேலையிலிருந்து நீக்குவது, விண்வெளியை வணிகமாக்குவது, டிவிட்டரில் பங்குவிலை, ஆராய்ச்சி பற்றி மனதிற்கு தோன்றியபடி எழுதுவது என எப்போது சர்ச்சைகள் எலனை சுற்றிவந்துகொண்டே உள்ளன. பெரிய பிரச்னைகளுக்கு புதிதாக ஐடியாவைப் கண்டுபிடித்து தீர்ப்பது, வாடிக்கையாளர்களின் பிரச்னைகளை புரிந்துகொண்டு சரிசெய்வது, திறமையான பணியாளர்களை தேர்ந்தெடுத்து சவால்விட்டு அவர்களை அதி திறமைசாலிகளாக மாற்றுவது, வெளிப்படைத்தன்மையுடன் இருப்பது ஆகிய அம்சங்களை எலன் மஸ்கிடம் இருந்து கற்றுக்கொள்ளலாம். இவரின் செயல்வேகத்திற்கு எதிர்காலத்தில் பூமியைக் கடந்து, பிற கோள்களிலும் அவரின் பெயர் ஒலிக்கலாம்.

தகவல்

Forbes


கருத்துகள்