கொரோனா காலத்தில் ஜார்க்கண்ட் மக்களின் வாழ்க்கையைக் காத்த பெண்மணி! - காயத்ரி தேவி
காயத்ரிதேவி
பாகீரதி
சுய உதவிக்குழுக்கள்
காயத்ரியின் பணிகள் காலை ஏழுமணிமுதலே தொடங்கிவிடுகிறது. தனது வீட்டுவேலைகளை அவர் வேகமாக முடிப்பது அவசியம். அப்போதுதான் அவரது வீட்டு வாசலில் காத்திருக்கும் கிராமத்து பெண்களுக்கு வங்கியில் பணப்பரிமாற்றம் பற்றி விளக்கம் அளிக்க முடியும்.
ஜார்க்கண்டின் ஜெய்ப்பூரைச் சேர்ந்த காயத்ரி லேப்டார் சகிதமாக அனைத்து கிராமத்தினரின் வீடுகளுக்கும் சென்று வங்கிக்கணக்கு தொடங்குவது பற்றி சொல்லிக்கொடுக்கிறார். கடன், காப்பீடு, வங்கிக்கணக்கு புத்தக பதிவு, ஏன் அவர்களின் போனுக்கும் கூட ரீசார்ஜ் செய்துகொடுப்பதையும் செய்கிறார்.
இத்தனைக்கும் இப்பணிகளை நக்சல் ஆதிக்கம் கொண்ட குன்டி மாவட்டத்தில் செய்து வருகிறார் என்பது கவனிக்கவேண்டிய ஒன்று. இப்பணிகளை இவர் அக்டோபர் 2016முதல் செய்துவருகிறார். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டபிறகு, கிராமத்தினர் அனைவரும் பணத்தை வங்கியில் இருந்து பெற அலைபாயத் தொடங்கினர். வங்கிகள் மூடப்பட்டிருந்தால் தினசரி செலவிற்கான பணத்தை எப்படி பெறுவது என்பதுதான் அவர்களின் யோசனை.
இப்போது சுய உதவிக்குழுக்களின் பங்களிப்பு பற்றிய டேட்டாவைப் பார்த்துவிடலாம்.
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் 68 மில்லியன் (ஒரு மில்லியன் - பத்து லட்சம்) பெண்கள் சுய உதவிக்குழுக்களில் பங்கு வகிக்கிறார்கள்.
இந்த பெண்கள் சிக்கலான காலகட்டத்திற்காக 16 கோடி மாஸ்குகளையும். 53 லட்சம் பிளாஸ்டிக் உடைகளையும், 51 லட்சம் சானிடைசர்களையும் தயாரித்து வழங்கியுள்ளனர்.
கிராமத்தில் உள்ள வணிக பிரதிநிதியாக சுய உதவிக்குழுவைச் சேர்ந்த 9400 பெண்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களே வங்கிக்கிளைகள் இல்லாத கிராமத்தினருக்காக பணத்தை மக்களுக்கு வழங்குபவர்கள். கொரோனா காலத்தில் நான் ஆயிரம் பேர்களுக்கு வங்கிக்கணக்கு தொடங்க உதவியுள்ளேன். இவர்கள் எட்டு கிராமங்களைச் சேர்ந்தவர்கள். இதில் 350 பேர் பெண்கள் என்பதை நீங்கள் கவனிக்கவேண்டும். காரிப் கல்யாண் திட்டத்தில் வழங்கப்படும் ரூ.500 கூட வங்கிக்கணக்குகள் மூலமாகத்தான் மக்களுக்குக் கிடைத்தன. ரூ.60 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரையிலுமான பரிவர்த்தனைகளை நாங்கள் செய்துள்ளோம் என்றார் காயத்ரி.
இவரது சரஸ்வதி சுய உதவிக்குழுவில் பதினொரு உறுப்பினர்கள் உள்ளனர். இவர்கள் தினசரி கூலியாக கிடைக்கும் பணம் இருபது ரூபாய் என்றாலும் அதனை சேமிக்கத் தவறுவதில்லை. வணிகப்பிரதிதியாக இவர் மாநில அரசு மூலம் நியமிக்கப்பட்டுள்ளார்.
பணமதிப்பு நீக்க நடவடிக்கை அறிவிக்கப்பட்டபோது மக்களிடையே தங்கள் சேமிப்பு மீது பயம் ஏற்பட்டது. அதுபோலவே பொதுமுடக்க காலத்திலும் மக்களுக்கு தங்கள் சேமிப்பு என்னாகுமோ என்ற பயம் ஏற்பட்டிருக்கிறது. அத்தனையையும் காயத்ரி சமாளித்து பயம் போக்கியிருக்கிறார். மேலும் அவர்களுக்கு தேவையான நிதியுதவிகளையும் வங்கி மூலமாக பெற்றுத்தந்திருக்கிறார். அதோடு பிற மாநிலங்களிலிருந்து வரத்தொடங்கிய ஏழு லட்சம் பேர்களைப் பற்றிய தகவல்களையும் தனது குழுவினரின் உதவி மூலம் பெற்று மாநில அரசுக்கு வழங்கியுள்ளார். அவர்களுக்கு தேவையான உணவு, சானிடைசர், மாஸ்க் என பல்வேறு உதவிகளை பெற்றுக்கொடுத்திருக்கிறார்.
தொலைதூரக்கல்வி மூலம் சமூகவியல் படித்துள்ள காயத்ரிதேவிக்கு கொரோனா பற்றி பயம் இல்லையா? பயம் இருந்தாலும் மற்றவர்கள் பாதுகாப்பாக மகிழ்ச்சியாக நாம் செய்யும் வேலை என்று நினைத்துக்கொண்டு இந்த வேலைகளை செய்தேன் என்கிறார்.
கேரளத்தின் பாலக்காட்டைச் சேர்ந்த பாகீரதி இதேபோலான வேலையைத் தான் செய்திருக்கிறார். நியூட்ரிமிக்ஸ் என்ற சப்ளிமெண்டை அங்கன்வாடி குழந்தைகள் முதல் மூன்று வயது சிறுவர்கள் வரை கொடுத்திருக்கிறார். நோய்த்தொற்று பிரச்னையால் அங்கன்வாடிகள் மூடியிருக்கும்? அதற்காக குழந்தைகளின் வளர்ச்சியை பலிகொடுக்க முடியாது என பளிச் பதில் தந்து வியக்க வைக்கிறார்.
குடும்பஸ்த்ரீ என்ற திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட சுய உதவிக்குழுவில் 12 ஆண்டு காலமாக செயல்பட்டு வருகிறார். இவரது குழு, நியூட்ரிமிக்ஸ் என்ற உணவுப்பொருளை தயாரித்து வருகிறது. மொத்தம் 149 பெண்கள் பத்தொன்பது யூனிட்டுகளாக பிரிந்து 135 மெட்ரிக் டன் உணவுப்பொருளை தயாரித்து வருகிறார்கள். 242 குடும்பஸ்த்ரீ யூனிட்டுகளுக்கு 2 ஆயிரம் பெண்கள் உழைத்து வருகின்றனர். இவர்கள் வழியாக 33 ஆயிரம் டன் நியூட்ரிமிக்ஸ் உணவு அங்கன்வாடிகளுக்கு அனுப்ப ப்பட்டுள்ளது. இருமாதமாக இவர்கள் தயாரித்த உணவுப்பொருட்களுக்கான தொகை கிடைக்காத நிலையிலும் குழந்தைகள் பசியால் வாடக்கூடாது என்று நினைத்த உயர்ந்த உள்ளத்தை கௌரவிக்க என்ன விருதுகளைக் கொடுப்பது?
திவ்யா ஜே சேகர்
போர்ப்ஸ் இதழ்
கருத்துகள்
கருத்துரையிடுக