இறந்துபோன அப்பாவை நினைவுகூரும் நான்கு மகன்களின் நினைவுக்குறிப்புகள்! - இறுதி யாத்திரை - எம்.டி. வாசுதேவன் நாயர்

 

 

 

 


 

 

 

 

 

இறுதியாத்திரை


எம்.டி. வாசுதேவன் நாயர்


கேரளத்தில் சிறிய கிராமத்தில் வேலை செய்து வரும் ஒருவர், திருமணம் முடிக்கிறார். தனது வியாபாரம் சார்ந்து இலங்கை வரை செல்கிறார். அங்கும் சென்று தொழில் செய்து முன்னேறுகிறார். அவருக்கு நான்கு பிள்ளைகள் பிறக்கின்றனர். அதோடு அவருக்கு இலங்கையிலும் மனைவி, மகள் உண்டு. இந்த நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர் இறந்துவிடுகிறார். அவரது பிள்ளைகளுக்கு இறப்புச்செய்தி சொல்லப்பட்டு விட நால்வரும் அப்பா பற்றிய நினைவுகளுடன் கிராமத்திற்கு வந்து சேர்கின்றனர். இதில் அப்பு, குட்டேட்டன், ராஜேட்டன், உண்ணி ஆகியோர் தங்கள் தந்தை பற்றிய நினைவுகூர்தலே 130 பக்க நாவல்.


தந்தை பற்றிய தகவல்கள் அனைத்துமே மகன்களின் நினைவுப்பூர்வமாகவே சொல்லப்படுகிறது. எதுவுமே நேரடியாக கூறப்படுவதில்லை என்பதுதான் நாவலின் முக்கியமான சிறப்பம்சம். பல்வேறு நினைவுக்குறிப்புகளை நினைத்தால் அவர்களது தந்தை பற்றிய சித்திரம் உருவாகிறது. அம்மா இறந்துபோனதற்கு அவர் ஏன் அழவில்லை. மகனுக்கு இலங்கையில் ஏன் வேலை வாங்கித்தரவில்லை, ஒரு ரூபாய் இருந்தால் பத்து ரூபாய் போல பிறருக்கு ்காட்டுபவர் இறுதிக்காலத்தில் பணம் கேட்டு மகன்களுக்கு கடிதம் எழுதியது ஏன், அவருக்கு்ம இலங்கையிலுள்ள இரண்டாவது மனைவிக்குமான உறவு எப்படி இருந்தது, இரண்டாவது மனைவியின் மகளை சொந்த ஊருக்கு கூட்டிவந்தபோது அவரின் மனநிலை என பல்வேறு விஷயங்கள் நூலில் கூறப்படுகின்றன. இவை அனைத்துமே மகன்களின் மனநிலையில் பதிவாகியுள்ளன. ஆனால் எதுவுமே குறிப்பிட்ட சரி தவறு என்ற சார்பில் அமையாமல் பார்வையாளனாக ஒரு காட்சியைப் பார்ப்பது போல பதிவு செய்யப்பட்டுள்ளது.


சைலஜாவின் மொழிபெயர்ப்பில் கேரளத்தின் ஆற்றுப்படிக்கட்டு, ஹேமாவின் உடல் வனப்பு, குளத்து நீரில் முங்கியெழும் பொரிக்கு அலையும் ஆமை என அனைத்து விவரங்களும் அழகாக சுவாரசியமாக படிக்க முடிகிறது. தந்தை இறந்தபிறகு உபவாசம் இருந்து அவரை எரிக்கவேண்டும் என்ற தகவல் புதிதாக உள்ளது. நான்கு மகன்களுக்கும் அப்பா பற்றிய கசப்பும், இனிப்புமாக நினைவுகள் அவர் இறந்துபோனபிறகு மனதில் ஊறுகின்றன. இறுதி யாத்திரையின் போது அவர்களது அத்தை அழுவது, இனிமேல் எதற்காகவும் அவர்களது மகன்கள் அங்கு வரப்போவதிலைல என்ற யதார்த்தத்தை என்பது உணர்ச்சிகரமாக நிகழ்ச்சியாக இருந்தாலும் உண்மை.


எம்.டி.வாசுதேவன் நாயரின் இறுதியாத்திரை நாவல், நோயில் தவித்து இறந்துபோன தந்தை பற்றிய மகன்களின் நினைவுகளை சிறப்பாக பதிவு செய்துள்ளது.


கோமாளிமேடை டீம்



கருத்துகள்