பொறியியலில் தோற்றுப்போனவருக்கு சிறந்த ஆசிரியர் பரிசு!
பொறியியலில் தோற்றுப்போனவருக்கு சிறந்த ஆசிரியர் பரிசு!
கடந்த டிசம்பர் 3 அன்று ரஞ்சித் திசாலே குளோபல் டீச்சர் பிரைஸ் எனும் முக்கியமான அங்கீகாரத்தை பெற்றிருக்கிறார். அதைவிட முக்கியம், தான் பெற்ற ஆசிரியர் பரிசுக்கான தொகையை அவரோடு போட்டியிட்ட பிறருக்கும் பகிர்ந்து அளிக்க முன்வந்துள்ளார்.
2006ஆம் ஆண்டு பொறியியல் படித்துக்கொண்டிருந்தார் திசாலே. ஒருகட்டத்தில் படிப்பில் நம்பிக்கை இழந்து அதனை கைவிட்டு கல்வி தொடர்பான டிப்ளமோ ஒன்றுக்கு விண்ணப்பித்தார். அதற்கும் கூட அவராக விண்ணப்பிக்கவில்லை. ஓய்வு பெற்ற பள்ளி முதல்வரான மகாதேவ் தேசாய், அதாவது அவரது அப்பாதான் மகன் வீட்டில் சும்மாயிருப்பதை விரும்பாமல் அப்ளை செய் என்று ஊக்கம் கொடுத்து இருக்கிறார். திசாலேவுக்கு டிப்ளமோ படிப்பின்போது மறக்கமுடியாத இருநபர்களின் அறிமுகம் நடந்தது. ஒருவர், அமர் நல்வாடே, மற்றொருவர் ராஜேந்திரன் மானே. நல்வாடே ஆசிரியர் மாணவர்களுக்கு எப்படி தோழனாக இருந்து கற்றுக்கொடுக்கவேண்டும் என்று கற்றுத்தந்திருக்கிறார். இதுதான் அவரை படிப்பில் நிலையாக நிறுத்தி படிக்க வைத்திருக்கிறது.
படிப்பை முடித்தவருக்கு தொடக்க சம்பளம் 3 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டது. திசாலேவின் முதல் வகுப்பறை பசு கொட்டில்தான். அங்கும் மாணவர்கள் 27 பேர் பாடம் கற்க வந்திருந்தார்கள். ஆனால் இந்த எண்ணிக்கை சில நாட்கள் கூடும், குறையும். அது அவர்கள் பெற்றோர் சொல்லும் வேலைகளைப் பொறுத்து மாறிவந்தது. இந்தியாவின் பிற மாநில அரசு பள்ளிகளைப் போலவே மதிய உணவுத் திட்டம்தான் அங்கு மாணவர்களையும் அவர்களது பெற்றோர்களையும் ஈர்த்து வந்தது.
தினசரி மாணவர்களை வருகைப்பதிவு செய்துவிட்டு பள்ளிக்கு வராத மாணவர்களின் பெற்றோர்களை சந்தித்துப் பேசி மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப சொல்லுவது திசாலேவின் வழக்கமாகிப்போனது. திசாலே பணியாற்றி கிராமத்தில் ஆண்கள் அனைவரும் சொல்லி வைத்தது போல நான்காவது, ஐந்தாவதுதான் படித்திருந்தார்கள். பெண்கள் மட்டும் பத்தாவது என அவர்களை விட அதிகமாக படித்திருந்தனர். எதற்காக இந்த ஒரவஞ்சனை என நினைக்காதீர்கள். பெண்கள் படித்திருந்தால் அவர்களுக்கு எளிதாக மணமானது. எனவேதான் பெண்களை மட்டும் தந்தைகள் படிக்க வைத்து திருமணம் செய்து வைத்தனர். எனவே திசாலே இந்த பார்முலாவைக் கண்டுபிடித்து மாணவர்களின் தாய்மார்களை ஒன்றுதிரண்டு கலந்துரையாடல்களை நடத்தினார். இதன் மூலம் பள்ளிக்கு மாணவர்களின் வரத்து கூடியது. ஆனாலும் பள்ளியில் மாணவர்களை ஈர்க்கும் வேறு விஷயங்கள் தேவை என்று நினைத்தவர், 2010இல் தனது தந்தை மூலம் லேப்டாப் ஒன்றை வாங்கினார். அதை வைத்து மாணவர்களுக்கு இந்தி படங்களை போட்டு காண்பித்து பள்ளிக்கு வரவைத்தார். அதற்கு இடையே பாடங்களையும் அதில் நடத்தினார். இதனால் மாணவர்கள் பள்ளிக்கு சென்றால் படம் பார்க்கலாம் என்ற ஆர்வத்தைக் கொண்டனர். வீட்டில் பாடம் படிப்பதை தீர்க்கமாக புரிய வைக்க பள்ளியில் சைரன் அமைத்தார். இரவு ஏழு முதல் எட்டு வரை படிக்கவேண்டும் என்பதை சைரன் சத்தம் மூலம் பெற்றோர் புரிந்துகொண்டு பிள்ளைகளை படிக்க ஊக்கப்படுத்தினர்.
இவை மட்டுமல்லாமல் அனைத்து பெற்றோர்களின் செல்போன்களுக்கும் குறுஞ்செய்திகளை அனுப்பி தான் கற்பித்த பாடங்களை திரும்ப பத்து முறை சொல்லுமாறு கேட்டுக்கொண்டார். இதனால் பெற்றோருக்கு கல்வியின் முக்கியத்துவம் புரிந்த்து. அவர்களே பிள்ளைகள் வீட்டில் படிப்பதற்கு பொறுப்பேற்றுக்கொண்டனர்.
திசாலே மட்டும்தான் சோலாபூரில் முதல் அரசுப்பள்ளி ஆசிரியராக லேப்டாப், இணையத்தை பயன்படுத்திய சாதனையாளர் எனும்போது உங்களுக்கு என்ன சொல்லலத் தோன்றுகிறது? மெல்ல திரைப்படங்களிலிருந்து மாணவர்களின் கவனத்தை யூடியூப் வீடியோவுக்கு மடைமாற்றினார் திசாலே. சூழல், இயற்கை தொடர்பான பாடங்களுக்கு யூடியூப்பை கூடுதலாக பயன்படுத்தி வெற்றி கண்டார். ஹார்மோனியத்தை வைத்து செய்யுள்களையும் ஆங்கில பாடல்களையும் வாசித்து மாணவர்களை ஈர்த்தார். இதோடு பவர் பாய்ண்ட் பிரசன்டேஷன்களையும் பாடம் நடத்த பயன்படுத்தினார். 2013ஆம் ஆண்டு புரஜெக்டரை வாங்கி அதிலும் பல்வேறு இந்திப்படங்களை திரையிட்டு மாணவர்களுக்கு ஆனந்தம் அளித்தார்.
அடுத்து திசாலே செய்தது முக்கியமானது. மாணவர்களின் மேடை பயத்தைப் போக்க அவர்கள் என்ன கற்றுக்கொண்டார்கள் என்பதை பேச வைத்து ரெக்கார்ட் செய்து வீடியோவாக்கினார். இதனை பிற வகுப்பு மாணவர்களுக்கும் போட்டு காண்பித்து பயத்தை நீக்கினார். பவர் பாய்ண்ட் வீடியோக்கள், ஆடியோக்களை பெற்றோர்களின் போனுக்கு அனுப்பிய திசாலே வீட்டிலிருந்தே மாணவர்கள் பயில வழிகாட்டினார். இதன்பிறகு 2014ஆம் ஆண்டு பார்கோடை கடையில் ஸ்கேன் செய்வதை புரியாமல் பார்த்து அதன் விவரங்களை தெரிந்துகொண்டார். அதன் அடிப்படையில் க்யூஆர் கோடை உருவாக்கி, அதை ஸ்கேன் செய்தால் வீடியோ, ஆடியோ வடிவில் பாடங்களை அணுகுவதற்கான முயற்சியை சாத்தியப்படுத்தினார். இவரின் இந்த செயல்பாடு திசாலேவை மாவட்டம் முழுக்க பிரபலப்படுத்தியது. எனவே, மகாராஷ்டிர கல்வித்துறைக்கு க்யூஆர் கோடுகளை பாடநூல்களில் இணைக்க வலியுறுத்தி கடிதம் எழுதினார். அதனை ஏற்ற கல்வித்துறை ஆறாம் வகுப்பு நூல்களில் பரிசோதனை முயற்சியாக செய்துபார்த்து பாசிட்டிவான கருத்துகளை பெற்றது. இதனால் மாநில பாடத்துறை நூல்களில் க்யூஆர் கோடு இடம்பிடித்தது.
இந்த க்யூஆர் கோடு பரிசோதனை திசாலேவுக்கு மைக்ரோசாப்ட் இன்னோவேட்டிவ் எஜூகேட்டர் எக்ஸ்பர்ட் என்ற பெருமையைப் பெற்றுத் தந்தது. இதற்காக உலகம் முழுக்க தேர்ந்தெடுக்கப்பட்ட 300 ஆசிரியர்களில் இவரும் ஒருவர். இதற்காக டொரன்டோ சென்று தனது கண்டுபிடிப்பை பல்வேறு நாட்டு ஆசிரியர்கள் முன்னர் செய்துகாட்டினார். நேஷனல் இன்னோவேஷன் பவுண்டேஷனின் விருதும் இதன் காரணமாக திசாலேவுக்கு கிடைத்தது.
இவரது சீரிய பணி காரணமாக, மாணவர்களின் இடைநிற்றல் சதவீதம் பரிட்டே வாடியில் குறைந்துபோனதோடு, பெண்கள் உயர்கல்வி கற்கவும் காரணமாக அமைந்தது. இவரிடம் கல்வி கற்ற சாக்சி சிண்டே என்ற பெண் பெங்களூரில் மென்பொருள் பொறியாளராக உள்ளார். இதன்மூலம் சிறுவயதில் பெண்கள் திருமணம் செய்துகொடுத்ததும் குறைந்துள்ளது.
மாணவர்களை வகுப்பறையில் வைத்து பாடம் கற்றுக்கொடுப்பதை விடுத்து பிக்னிக் கூட்டிச்செல்வது, பாடம் தொடர்பான திரைப்படங்களை காட்டுவது என மாணவர்களின் ஆர்வத்தை வளர்த்துள்ளார் திசாலே. இந்த வேலைகளோடு பிற நாட்டு மாணவர்களுக்கு இணையத்தில் பாடங்களை நடத்தி வருகிறார். இதோடு மாணவர்களை பாகிஸ்தான், இஸ்ரேல், பாலஸ்தீன், இராக், ஈரான் ஆகிய நாடுகளுக்கு அழைத்துச்சென்றிருக்கிறார் 2019ஆம் ஆண்டு சிறந்த ஆசிரியர் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட திசாலே அதனை பெறவில்லை. ஆனால் இந்த ஆண்டு பரிசை வென்றுவிட்டார். தேர்வுக்குழு ஆன்லைன் மூலம் கிராமத்தில் உள்ள பெற்றோர்கள் மாணவர்களிடம் உரையாடி நிலையை அறிந்து திசாலேவை பரிசுக்கான ஆசிரியராக தேர்ந்தெடுத்துள்ளனர். பத்து லட்சம் ரூபாயை தன்னோடு போட்டியிட்ட பிற ஆசிரியர்களுக்கும் பகிர்ந்து அளிப்பதாக அறிவித்திருக்கிறார் இந்த ஆசிரியர்.
தி வீக்
கருத்துகள்
கருத்துரையிடுக