குரங்கு வளர்க்கும் பெண்ணை நேசிக்கும் காதலனின் காதல் கதை! - குரங்கு வளர்க்கும் பெண் - மோகனரங்கன்

 

 

 

 

 

 

 

"தோன்றும் வடிவத்தில் எழுதுவது மட்டுமே கவிதைகள் அல்ல" - க.மோகனரங்கன் ...

 

 

 

 

குரங்கு வளர்க்கும் பெண்


தமிழில் மோகனரங்கன்


லியனோர்டு மைக்கேல்ஸ் எழுதியுள்ள கதைதான் நூலின் தலைப்பாக உள்ளது. இந்த அமெரிக்க சிறுகதையாளரின் கதையில் உள்ள காதலும், காமமும் பித்தேறிய நிலையில் உள்ளது. வேலை காரணமாக நகருக்கு வரும் பியர்டு, விலைமாது ஒருவளின் மீது காதல் கொள்வதுதான் கதை. அந்த காதலும், இதயத்துடிப்பு போல அதனூடே பரவி வதைக்கும் காமமும் அவனை நெருப்பாக சுடுகிறது. இதற்காக அவன் செய்யும் விஷயங்கள்தான் கதையை நடத்திச்செல்கின்றன.


காதலும் இரு பாலினத்தவருக்கான உறவுமுறைச்சிக்கலும் உரையாடலில் வெளிப்படுகிறது. மயக்கத்தில் இருப்பதுபோலான ஒன்றாக இருக்கும்போது தெரியாத வேறுபாடுகள் அவர்கள் உறவு கொண்டபின் வெளியாகின்றன. அது இருவருக்கும் கசப்பு ஏற்படுத்த பிரிகிறார்கள். ஆனால் பியர்டுவினால் இங்கரை நினைக்காமல் இருக்கமுடியவில்லை. இந்த மயக்கம் அவனை என்ன செய்யத் தூண்டுகிறது என்பதுதான் கதையின் மையம்.


யுவான் சுய்ங் சுய்ங் எழுதிய காதலனின் காது என்ற கதை பெண்களின் மனதைப் பேசியவகையில் முக்கியமான கதை. தாய்லாந்தைச் சேர்ந்த எழுத்தாளர் யுவான். உறவு கொள்ளும்போது அந்தரங்க உறுப்புகளை நேரடியாக பார்த்தாலும் ஒருவரின் உறுப்பை சுத்தம் செய்வது என்பது வேறுவிதமானது. காதலிக்கு அப்படி ஒரு நிலை ஏற்படுகிறது. காதலனின் காதை சுத்தம் செய்யும்போது அவளின் மனநிலையில் ஏற்படும் மாற்றம்தான் கதை.


நாம் ஒருவரிடம் இனம்புரியாத ஈர்ப்பு கொண்டிருக்கும்போது நம்மால் மற்றொருவர் நினைப்பதை எளிதில் புரிந்துகொள்ளலாம அல்லது முடியும் என்ற நம்பிக்கை மனதில் இருக்கும். ஆனால் உண்மையில் அப்படி நிகழாதபோது மனதில் ஏற்படும் வெறுமையும், விரக்தி உணர்வையும் இக்கதை கண்ணாடி போல பேசுகிறது.


இருபாலினத்தவரின் பார்வை சாதாரண விஷயத்தில் எப்படியிருக்கிறது என்பதைக் கூறுவதும்தான் என்று சொல்லலாம்.


இந்த தொகுப்பின் முக்கியமான அரசியல் கதையாக கர்னலுக்கு யாரும் எழுதுவதில்லை என்ற நெடுங்கதையை சொல்லலாம்.


மகந்தோ என்ற நகரில் வாழும் கர்னல், ஓய்வூதியத்திற்கு விண்ணப்பித்து பதினைந்து ஆண்டுகளாக காத்திருக்கிறார். அவரது மகன் புரட்சிபடைகளுக்கு ஆதரவானவன் என்பதால் காவல்துறையால் சுட்டுக்கொல்லப்படுகிறான். வயதான காலத்தில் அவர்களுக்கு வீட்டிலும் வறுமை சூழ என்ன செய்கிறார்கள் என்பதே கதை.


ராணுவத்தில் பணியாற்றியவர்களுக்கு சரியான முறையில் ஓய்வூதியம் கிடைக்காத நிலையில், அவர்களுக்கு உதவுவது மகன் வளர்த்த சேவல் மட்டுமே. அதன் மூலமே அவர்கள் பந்தயத்தில் வென்று பணம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வாழ்கிறார்கள். கர்னலின் மனைவிக்கு ஆஸ்துமா பிரச்னை இருக்கிறது. அதற்கு வைத்தியம் பார்க்கும் மருத்துவரிடம் கூட சேவல் பந்தயத்தில் வென்றால் பணம் தருகிறேன் என்கிறார் கர்னல். வீட்டிலிருந்து விற்கப்படும் பொருட்களும் ஒருகட்டத்தில் இல்லாமலாக சேவலை விற்றுவிடலாமா என்ற பேச்சு எழுகிறது. மகனின் நினைவாக அவர்களிடம் இருப்பது சேவல் ஒன்றுதான். அதனை விற்கவேண்டாம் என கர்னல் வாதிடுகிறார். ஆனால் அவரது மனைவி வியாதியை விட நான் பசியால் செத்துக்கொண்டிருக்கிறேன் என அழுகிறாள். இறுதியில் என்ன முடிவெடுத்தார்கள் என்பதுதான் இறுதிப்பகுதி.


கதை முழுக்க வரும் உரையாடல்கள் சிறப்பாக எழுதப்பட்டுள்ளன. கற்பனை நகரம் என்றாலும் நடக்கும் நிகழ்வுகள் அனைத்தும் லத்தீன் அமெரிக்க நாடுகளின் அரசியல் நிலையை கண்முன் காட்டுகிறது. மக்களிடையே நிலவும் வறுமை, மக்களை பயன்படுத்தி முன்னேறும் இரக்கமில்லாத வணிகர்கள், லஞ்சம், ஊழல், அரசியல் சமச்சீரின்மை ஆகியவற்றை கதை மிகவும் நுணுக்கமாக பேசிச்செல்கிறது.


இறுதியில் கர்னல் பேசும் வசனத்தை கதையைப் படிக்கும் யாருமே மறக்கமுடியாது.


ரேமண்ட் கார்வர் எழுதிய காட்டுக்கோழி, அவர்கள் யாரும் உன்னுடைய கணவன் இல்லை என்ற சிறுகதைகள் கவனிக்கத்தகுந்தன. இவரின் பிற கதைகளும் கூட நகரத்தில் வாழும் தம்பதியினரிடையே நடக்கும் பல்வேறு உறவுச்சிக்கல்களை பேசுகின்றன. காட்டுக்கோழி கதையில் சாலையில் செல்லும்போது, குறுக்கே வரும் காட்டுக்கோழியை திடீரென ஏற்படும் மன உந்துதலால் ஒருவன் கொன்றுவிடுகிறான். பின் நினைத்துப் பார்க்கும்போது, அவனது வாழ்க்கையில் அந்த காட்டுக்கோழியின் மரணம் ஏற்படுத்தும் பல்வேறு நினைவுகள் காதலியை விட்டு பிரியத் தூண்டுகின்றன. அந்த நிகழ்ச்சிகளும் அதனால் ஏற்படும் விளைவுகளும்தான் கதை. எளிய கதை போல தோன்றினாலும் அவை ஏற்படுத்தும் நினைவுகளும் அதனை ஒருவர் பார்ப்பதும் மாறுபடுகின்றன.


அவர்கள் யாரும் உன்னுடைய கணவன் இல்லை என்ற கதை, உளவியல் பூர்வமான கதை. பிறர் தன்னுடைய மனைவியை உடல் பருமன் தொடர்பாக கிண்டல் செய்ய அதனை மாற்ற உறுதிபூணும் கணவன் செய்யும் கோமாளித்தனமான முயற்சிகளால் அந்த பெண்ணுக்கு ஏற்படும் நிலைமைதான் கதை.


இது ஒருவகையில் வாழ்க்கை நம் கையைவிட்டு பிறரது அபிப்ராயங்களின் படி நடப்பதை பகடியாக காட்டுவதுபோல உள்ளது. வாயேரிசம் சார்ந்த சிறுகதை எனவும் இதனைக் கூறலாம். மனைவியின் உடலை இன்னொருவரின் கருத்து, பார்வை வழியாக பார்த்து ரசிப்பது. அந்த மனநிலை எர்ல் என்ற விற்பனை பிரதிநிதி கணவனுக்கு கைகூடியதா, டொரினின் நிலை என்னவானது என்பதை சிறப்பாக எழுதியிருக்கிறார் சிறுகதை ஆசிரியர் ரேமண்ட் கார்வர்.

கோமாளிமேடை டீம்



கருத்துகள்

பிரபலமான இடுகைகள்