பாஜகவின் வெறுப்பு அரசியல் நாட்டையே அழித்துவிடும்!- மம்தா பானர்ஜி
பாஜகவிற்கு மாற்று அணியை உருவாக்கும் முயற்சியில் உறுதியாக இருப்பவர் மேற்குவங்க முதல்வரான மம்தா பானர்ஜி. எதிர்க்கட்சிகளை சமாளிப்பதோடு சவாலான மத்திய அரசையும் அரும்பாடுபட்டு சமாளித்து வருகிறார்.
உங்கள் வாழ்க்கையில் ஏராளமான சவால்களை சந்தித்திருக்கிறீர்கள். அதுவும் சிறுவயதிலேயே. இதுவரை சந்தித்ததில் மிக கடினமான சவால் என்று எதனைக் குறிப்பிடுவீர்கள்?
என் வாழ்க்கையில் போராட்டம் என்பதும் ஒரு பகுதி. எனது தந்தை இறந்தபோதுகூட நான் யாரிடமும் உதவி கோரி நிற்கவில்லை. கல்லூரியில் படித்துவந்த காலகட்டம் தொடங்கி இடதுசாரிகளின் ஆட்சியின் சிரமங்களை அனுபவித்து வந்தோம். மொத்தம் 34 ஆண்டுகள். இவை தவிர உடல்ரீதியிலான சிரமங்கள். தலைமுதல் வயிறு வரைக்கும் ஆறுக்கும் மேற்பட்ட அறுவைசிகிச்சைகள் செய்யப்பட்டு உயிர்பிழைத்துள்ளேன். இக்காலகட்டங்களில் எங்கும் அணுவளவும் பயப்பட்டதில்லை.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை தோற்கடிப்பது மிகச்சிரமமான போராட்டங்களில் ஒன்று என கூறலாமா?
நாங்கள் மாணவப்பருவத்திலிருந்து இன்றுவரை 34 ஆண்டுகளாக அவர்களோடு போராடி வருகிறோம். மோசமான இடதுசாரிகளின் ஆட்சியால் மாநிலத்தில் எந்த மேம்பாட்டு திட்டங்களையும் எங்களால் செய்யமுடியவில்லை. இதுவரை அவர்கள் பெற்ற கடன்களான 2 லட்சத்து 14 ஆயிரம் கோடி ரூபாயை அடைத்துள்ளோம். பாருங்கள். இந்த ஆண்டு மட்டும் பெற்ற கடனுக்கான வட்டியாக 47 ஆயிரத்து 700 கோடி ரூபாயை கட்டியுள்ளோம். மத்திய அரசின் எள்முனையளவு உதவியின்றி நாங்கள் செய்யாத தவறுகளை சரி செய்ய முயற்சித்து வருகிறோம்.
ஒருங்கிணைந்த அரசு என்று பிரதமர் மோடி கூறிவருவதைப்பற்றி..?
ஒருங்கிணைந்த அரசு என்பதை மறந்துவிடுங்கள். பாஜகவின் வெறுப்பு அரசியல் நாட்டை, சமூகத்தை , பொருளாதாரத்தையே அழித்து வருகிறது. வங்காளத்தின் ஜிடிபியைப் பாருங்கள். இவ்வாண்டு வளர்ச்சி 11.46 ஆனால் இந்தியாவின் வளர்ச்சி 6.5தான். அண்மையில் பாஜக, எமர்ஜென்சி காலத்தைப் பற்றி பேசிவருகிறது. ஆனால் அவர்களின் ஆட்சிகாலத்தில்தான் உண்மையைப் பேசுவதற்கு மக்கள் அச்சப்படுகிறார்கள். உண்மையைப் பேசினால் காவல்துறை உள்ளிட்ட சக்திகளை மக்களுக்கு எதிராக பயன்படுத்துகிறார்கள். எங்கள் கட்சி தொண்டர்களையும் கூட அவர்கள் கைது செய்துள்ளனர். நாங்கள் தொடர்ச்சியாக அவர்களை எதிர்த்து போராடி வருகிறோம். இந்தியாவிலேயே எங்கள் மாநிலம் மட்டுமே விவசாயிகளின் வருமானத்தை மூன்று மடங்காக்கியுள்ளோம். ஆனால் பிரதமர் தான் விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக்கியதாக பெருமைப்பட்டுக்கொள்கிறார்.
நீங்கள் இடதுசாரிகளை விட தீவிரமான இடதுசாரி செயல்பாடுகளில் ஈடுபடுவதாக கூறுகிறார்களே?
நான் இடதுமல்ல; வலதுமல்ல. நாட்டை நேசிப்பதோடு ஜனநாயகத்தை, கூட்டாட்சி தத்துவத்தை நம்புகிறேன். கட்சி கொள்கையைக் கேட்டால் இது மக்களுக்கான மக்களால் உருவாக்கப்பட்ட அரசு என்று கூறுவேன்.
தொழிற்துறையில் உங்களது கொள்கை என்ன? அரசு-தனியார் கூட்டை நம்புகிறீர்களா?
அரசு-தனியார் கூட்டில் நிறைய தொழில்களை செய்து வருகிறோம். நலிந்த தொழில்களை இணைத்து வலுவாக்கி வருகிறோம். புதிய தொழிற்சாலைகளுக்காக நிலங்களை கையகப்படுத்தி தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி வருகிறோம்.
மாற்று அணியினராக நீங்கள் கைகோர்த்து நிற்பது பாஜகவிற்கு எதிராக, அதாவது எதிராக வாக்குகளைப் பெற என்று கூறலாமா?
பாஜகவினர் செய்யும் அராஜகங்கள், சித்திரவதைகள் கொஞ்சநஞ்சமல்ல. ஏன் பாஜகவினர் சிலர் கூட அவர்களை ஏற்கமாட்டார்கள். அவர்கள் நூறு ஹிட்லர்களுக்கு சமம்.
மத்தியிலுள்ள அரசுடன் உங்கள் கருததுக்களை ஏன் பகிர்ந்துகொள்வதில்லை?
அவர்கள் பெரிய மனிதர்கள். நான் அவர்களுக்கு அறிவுரை கூறவேண்டியதில்லை. மனைவி, அறிவு, புத்தகங்களை பிறருக்கு கொடுத்தால் திரும்ப வராது(Bou, buddhi aar boi kau ke debe na) என்று வங்க பழமொழி ஒன்றுண்டு. மத்திய ஆட்சிமுறை மாற்றப்பட்டு மாநிலங்களுக்கு அதிகாரம் கிடைத்தால் நான் என் கருத்துகளை அவர்களுடன் பகிர்ந்துகொள்வேன்.
நீங்கள் முன்னர் வாஜ்பாயோடு தேசிய ஜனநாயக கட்சியில் கூட்டணியில் இருந்திருக்கிறீர்கள்தானே?
வாஜ்பாய் மதச்சார்பற்றவர். அன்று தேசிய ஜனநாயக கட்சி கூட்டணிக் கட்சிகளை நம்பியிருந்தது. மேலும் ஒன்றுசேர்ந்து வேலை செய்யும் தேவையிருந்தது. ராஜ்நாத்சிங், சுஷ்மா உள்ளிட்டவர்கள் மீது எங்களுக்கு பெரிய மரியாதை இருந்தது.
ஆர்எஸ்எஸ் தங்கள் தலைமையகத்தில் உரையாற்ற அழைத்தால் செல்வீர்களா?
அவர்கள் பாஜக வை கைகழுவிவிட்டு வந்து அழைத்தால் அது பற்றி யோசிக்கலாம். அதற்கு முன்னால் நிச்சயம் கிடையாது.
உங்கள் வழிகாட்டி யார்? எப்படி ஊக்கம் பெறுகிறீர்கள்?
மக்கள்தான் எனது வழிகாட்டி. நான் வசதியான குடும்பத்தில் பிறந்து ஆங்கிலவழிக்கல்வி பெற்றவளல்ல. எனது பெற்றோர் ஒற்றுமை, அமைதி, பிறரைப் பற்றி யோசிப்பது, அனைவரையும் அரவணைத்து செல்வது பற்றி கற்றுக்கொடுத்துள்ளனர். நல்ல மனிதராக இருப்பது முக்கியம் பின்னரே அரசியல்.
ஆங்கிலத்தில்: ராஜ் செங்கப்பா
நன்றி: இந்தியா டுடே
தமிழில்:ச.அன்பரசு