ஒன்பது அரிசி ரகங்களை உருவாக்கிய தன்னிகரற்ற விவசாயி!

Image result for dadaji ramaji khobragade




தாதாஜி எனும் தற்சார்பு விவசாயி!

Related image



விவசாயிகள் கடன் தள்ளுபடி கோரியும், தண்ணீர் விடக்கோரியும் பேரணி நடத்தி அரசிடம் கெஞ்சியபடி மனம் வெந்து தற்கொலை செய்து இறப்பது தினசரி செய்தியாகிவிட்டது. மகாராஷ்டிராவைச் சேர்ந்த தாதாஜியும் பயிர்க்கடனை அடுத்த தலைமுறைக்கு சொத்தாக்கிவிட்டு காலமானார். மூன்றாம் வகுப்பு மட்டுமே படித்த தாதாஜி, வேளாண்மை ஆராய்ச்சியாளர்களுக்கே சவால்விடும்படி ஒன்பது பாரம்பரிய அரிசி ரகங்களை கண்டறிந்து பயிரிட்டு  விதர்பா விவசாயிகள் பலரையும் காப்பாற்றிய சாதனை அவரை விவசாயிகளின் ஹீரோவாக்கியுள்ளது.
Image result for dadaji ramaji khobragade



விவசாய விஞ்ஞானி!

மகாராஷ்டிராவின் சந்திரபூர் மாவட்டத்திலுள்ள நண்டெட் கிராமத்தைச் சேர்ந்த தாதாஜி ராமாஜி கோப்ரகாடே, வறுமையால் 7 வயதிலிருந்து விவசாய கூலிவேலைக்கு செல்லத் தொடங்கிவிட்டார். எண்பது வயதுவரை பல்வேறு பாரம்பரிய அரிசிவகைகளை பயிரிட்டு நோயாளி மகன் மித்ரஜித்தின் குடும்பபாரத்தை தன் தோளில் சுமந்தவர், தன் விவசாய ஆராய்ச்சி சாதனைகளுக்காக 'மகாராஷ்டிரா கிரிஷி புரஷ்கார்' விருது வென்றவரும் கூட.

படேல் 3 என்ற பாரம்பரிய அரிசியிலிருந்து தாதாஜியின் சாதனை தொடங்குகிறது. இவரின் அரிசியை சந்தையில் விற்க எடுத்துச்சென்ற வியாபாரி பீம்ராவ் ஷிண்டே, நறுமணத்துடன் புதிதாக இருந்த அரிசிக்கு தன் கையிலிருந்த வாட்சின் பெயரான ஹெச்எம்டி என பெயர் சூட்டினார். 1983 ஆம் ஆண்டு தொடங்கி படேல் 3, ஹெச்எம்டி என ஒன்பது அரிசிவகைகளை(Chanaur, Nanded 92, Nanded Hira, DRK, Vijay Nanded, Dipak Ratna ,HMT). கண்டறிந்து பயிரிட்டுள்ளார் தாதாஜி. இவற்றில் ஹெச்எம்டி ரகம், தமிழ்நாடு, ஆந்திரா, குஜராத், சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பயிரிடப்பட்டுவருகிறது.

பயிர்செய்ய விரும்பு!

 தன் மகனின் மருத்துவச்சிகிச்சைக்காக வாழ்வாதாரமாக இருந்த நாலரை ஏக்கர் நிலத்தை கூறுபோட்டு விற்றதில் விவசாயத்திற்கு மிஞ்சியது 1.5 ஏக்கர் மட்டுமே. குடும்பத்திலுள்ள ஏழுபேரின் வயிற்றுக்காக தனியாளாக உழைத்தாலும் நெற்பயிர் ஆராய்ச்சியை அலைந்து கடன் பெற்றேனும் செய்துகொண்டிருந்தார் தாதாஜி. இதற்கான அங்கீகாரம் 1994 ஆம் ஆண்டு கிரிஷி மேலவா எனும் விவசாயிகளின் சந்திப்பில் கிடைத்தது. தாதாஜியின் அரிசி ரகங்கள் தோராயமாக ஏக்கருக்கு 15 குவிண்டால் மகசூல் தருபவை.

காப்புரிமை துரோகம்!

  1994 ஆம் ஆண்டு நடந்த சம்பவம் தாதாஜியின் வாழ்க்கையையே புரட்டிப்போட்டது. பஞ்சாபிராவோ தேஷ்முக் கிரிஷி வித்யாபீடத்தைச்சேர்ந்த (PKV)  ஆராய்ச்சியாளர் ஒருவர் ஆராய்ச்சிக்காக வேண்டி தாதாஜியிடம் ஹெச்எம்டி ரக அரிசி பெற்றுச்சென்றார். விவசாய ஆராய்ச்சி என்றதும் உடனே 5 கிலோ அரிசியை அள்ளிக்கொடுத்த தாதாஜி, பல்கலைக்கழகம் தங்களது தூயரக கண்டுபிடிப்பு என காப்புரிமைக்கு விண்ணப்பிப்பார்கள் என்பதை நிச்சயம் எதிர்பார்த்திருக்கவில்லை. இந்த சினேக நம்பிக்கை துரோகத்தின் வலி தாதாஜியின் ஆயுள் இறுதிவரை இருந்தது.  

பசுமை இந்தியா!

நேஷ்னல் இன்னோவேஷன் பவுண்டேஷனில்(NIF) 2005 ஆம் ஆண்டு பரிசுபெற்றவர், இந்நிறுவனத்தின் ஆதரவில் தனக்கிருந்த விவசாயக்கடன் பத்து லட்சரூபாயையும் கட்ட முயற்சித்தார். இறுதியில் மிஞ்சிய 3 லட்சரூபாய் கடனை கட்டுவதற்கான வழியை, அவர் இறக்கும்வரை அயராது தேடிவந்தார். அப்போதும் என்ஐஎஃப் அத்தொகையைப் பெற தாதாஜியின் அரிசி வகைகளை தனியாரிடம் விற்க முயற்சித்தது. என்ஐஎஃப்பின் எண்ணத்தை உறுதியாக மறுத்து வறுமையிலும் தன் நோக்கத்தை மாற்றிக்கொள்ளாத விவசாயி தாதாஜி. முந்தைய அனுபவத்தினால் பயிர்வகைகள் மற்றும் விவசாயிகள் உரிமை ஆணையத்தில்(PPVFRA) தனது அரிசிவகைகளை பதிவு செய்தார். 2012 ஆம் ஆண்டு என்ஐஎஃப் அமைப்புக்கு ஹெச்எம்டி, டிஆர்கே எனும் இரு ரகங்களை அளித்ததால் கிடைத்த பணம் கடன் சுமையின் பாரத்தை குறைத்தது. பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாக்கும் செயல்பாட்டில் அமரர் தாதாஜி விதைத்த விழிப்புணர்வை நாம் முன்னெடுத்து செல்வது தற்சார்பு இந்தியாவை கட்டமைக்கும்.


National Innovation Foundation (NIF)

இந்தியஅரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் மரபுவளம் காக்கும் முயற்சி, என்ஐஎஃப் அமைப்பு. நாட்டின் 585 மாவட்டத்தில் 2 லட்சத்து 25 ஆயிரம் தொழில்நுட்ப ஐடியாக்களை பெற்றுள்ள இந்த அமைப்பு 816 புதிய விவசாய, தொழில்நுட்ப கண்டுபிடிப்பாளர்களை அங்கீகரித்து கௌரவப்படுத்தியுள்ளது. 41 பயிர்வகைகளை பதிவு செய்துள்ள என்ஐஎஃப், விவசாயிகள், தொழில்முனைவோர்க்கு 3.84 கோடி வரை கடன் உதவிகளை வழங்கியுள்ளது.



காப்புரிமை ஆணையம்!

2001 ஆம் ஆண்டு அக்.30 உருவான பயிர் பாதுகாப்பு, காப்புரிமை சட்டம்(PPVFR Act) விளைவாக உருவான ஆணையம் இது. விவசாயிகள் புதிய பயிர்வகைகளை ஆராய்ச்சி செய்து கண்டறியவும் அதனை அறிவுசார் சொத்துரிமையாக பதிவு செய்யவும் உதவுகிறது. பயிர் வகைகளை 15 ஆண்டுகளுக்கு இங்கு பதிவு செய்து வைக்கலாம். அரிய பயிர்வகைகளை பயிரிட்டு அதனை காப்பாற்றுபவருக்கு விருதளிப்பதோடு பணப்பரிசாக இவ்வாணையம் அளிப்பது ரூ.10 லட்சம்.  



 -.அன்பரசு