கொல்வதற்காகவே பிறந்தவன்!- ஹூவாங் யாங்
அசுரகுலம்
ஹூவாங் யாங் (நேற்றைய தொடர்ச்சி)
தஹூவாங்சுஹூவாங் எனும் கிராமத்தில் வீட்டில் தங்கியிருந்தார். யாங். கிராமம் பெரியதுதான். ஆனால் யாங் வாங்கும் சம்பளத்திற்கு சிறிய அறைதான் கிடைத்தது. அங்கு நிறைய கஃபே, தேநீர்கடைகள் இருந்தன. நியான் ஒளிகளால் நிறைந்த அந்த இடத்தில் தன் வேட்டையை யாங் தொடங்கினார்.
மெல்ல அங்கிருந்த இளைஞர்கள் காணாமல் போகத் தொடங்கினர். இது குறித்த புகார் வர போலீசாரும் கண்காணிக்கத் தொடங்கினர். கம்ப்யூட்டரோ அல்லது வேறு விஷயங்களை செய்துகொண்டிருக்கும் மாணவர்களை அணுகுவது யாங்கின் வழக்கம். மெல்ல அவர்களுக்கு வேலை தருவதாக பேசி மனதை மயக்குவார். நம்பிக்கை பெறுவார். பின் விழிப்புணர்வோடு இருந்தால் எப்படி வல்லுறவு செய்வது? என்று போதைப்பொருட்களை மதுபானத்தில் கலந்து கொடுப்பது யாங் பாணி.
போதையில் கவிழ்ந்தவுடன் அவர்களை நண்பர் போல கைபிடித்து வீட்டுக்கு அழைத்து செல்வதாக பாவ்லா காட்டி தன் வீட்டிற்கு கொண்டு சென்றுவிடுவார். வீட்டிற்கு தள்ளி உள்ள ஷெட்டிற்கு இளைஞர்களை கொண்டு சென்று, மரக்குதிரை போன்ற நூடுல்ஸ் செய்யும் கருவி அருகே கிடத்துவார். அந்த கருவி மூலம்தான் மாணவர்களை அழுத்தி எழ முடியாமல் முடக்கி, அவர்களை வல்லுறவு செய்து பின் கொல்லும் செயல்களை செய்வது. மலமும், விந்தணுக்களும் பரவிக்கிடந்த இடமென பின்னாளில் பத்திரிகைகளில் செய்தி வந்தது. மொத்தம் 17 பேர் இந்த இடத்தில் உயிரை விட்டிருக்கிறார்கள்.
இறந்தவர்களின் உடல் பாகங்களை நறுக்கி இன்டர்நெட் சென்டர்கள் அருகே வீசிவிடுவது யாங்கின் வழக்கம். நிறையப் பேர் இதுபோல காணாமல் போக, வேறுவழியின்று போலீசார் விசாரணையில் இறங்கினர். ஆனாலும் பெரியளவில் துப்பு ஏதும் கிடைக்கவில்லை. அப்போதுதான் உள்ளூர் மருத்துவமனையில் சேர்ந்திருந்த பதினாறு வயது இளைஞர் ஸாங் லெய் என்பவர் பற்றிய தகவல் கிடைத்தது.
கஃபேயில் சந்தித்த ஸாங்கை, புது விளையாட்டு ஒன்றை தயாரித்திருப்பதாக யாங் கூட்டிச்சென்றுவிட்டார். மரக்குதிரையில் ஸாங்கை கட்டிப்போட்டு செக்ஸ் டார்ச்சர் செய்ய தொடங்கினார். ஆனால் ஸாங், யாங்குடன் பேசிப்பேசி மடக்கியே சூதானமாக குறைந்தபட்ச கற்புடன் திரும்பி வந்துவிட்டார். இவரது வயிற்றில் ஐந்து ஊசிகளின் அடையாளங்கள் இருந்தன.
போலீஸ் எப்போதும் போல இக்கதையை நம்பவில்லை. ஆனால் எதற்கும் ஒருமுறை போய் பார்த்துவிடலாமே என்று யாங்கின் வீட்டிற்கு சென்றனர். அங்கு யாங் இறந்தவர்களின் பெல்டுகளை மட்டும் தனி கலெக்சனாக வைத்திருந்தார்.
ஷெட் முழுக்க ரத்த கவுச்சி அங்கு என்ன நடந்திருக்கும் என்பதை போலீசாருக்கு புரிய வைத்தது. பல போலீஸ்கார ர்களுக்கு ர த்தத்தைப் பார்த்த தும் கால்கள் மெல்ல நடுங்கத் தொடங்கின.
நவ.12, 2003 ஆம் ஆண்டு யாங் கைது செய்யப்பட்டார். மரண பீதி அவர் முகத்தில் இருக்கும் என எதிர்பார்த்த மக்கள்தான் ஏமாந்து போயினர். காரணம், முகம் கொள்ளாத சிரிப்பு யாங்கின் முகத்தில் பூத்திருந்தது. தான் உலகறிந்த கொலைகாரன் என நிரூபணம் ஆனதுதான் காரணம். அவரின் இளமைக்கால லட்சியம் வென்ற மகிழ்ச்சி. அவரைத்தவிர பிறர் கடுமையான முகத்துடன் நின்றிருந்தனர்.
அவரின் சந்தோஷத்தைப் பார்த்த மக்கள் போலீசுக்கு எதிராக திரும்பினர். நீங்கள் ஒழுங்காக வேலை பார்த்தால் இத்தனை பேர் சாவார்களா? என தூற்றத்தொடங்கினர். ஆகா என உஷாரான போலீஸ், யாங்கிற்கு மரணதண்டனை விதித்தனர். 2003 ஆம் ஆண்டு டிச.26 அன்று துப்பாக்கியால் சுட்டு மரணதண்டனை நிறைவேற்றினர். ஒரே குண்டுதான். தலையை தோட்டா துளைக்க சிரித்துக்கொண்டே யாங் கீழே விழுந்தார். அவர் இறந்த பின்னும் இரண்டு பிணங்களை போலீஸ் கண்டுபிடித்தது.
ஆக்கம்: பொன்னையன் சேகர்
நன்றி: rabrewster.com, pinterest, murderpedia