தண்ணீர் தட்டுப்பாட்டை எப்படி சமாளிக்கலாம்?




தண்ணீர் தட்டுப்பாட்டை எப்படி சமாளிக்கலாம்?




சென்னைக்கு நீர் வழங்கும் பல்வேறு ஏரிகள் மழை பொய்த்துப் போனதால் வறண்டுபோய்விட்டன. மக்கள் அரசு வழங்கும் குடிநீருக்காக குடங்களுடன் காத்திருக்கின்றனர். இந்தச்சூழலை எப்படி சமாளிக்கலாம் என கணினியும் கீபோர்டுமாக யோசித்தோம்.

1.வாசல் தெளிக்க பக்கெட் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கவேண்டும. அதற்கு பதில் சுப நிகழ்வுகளில் இளம்பெண்கள் பன்னீர் தெளிக்கிறார்களே அதே பாட்டிலைப் பயன்படுத்தலாம்.

2.ஹோட்டல்களில் சாப்பிடச்செல்லும்போதே, சாப்பாட்டை நெஞ்சுவரை சாப்பிடுங்கள். மீதி மூக்கு வரை உள்ள இடத்திற்கு நீரை தம் பிடித்து குடியுங்கள். சவாலில் ஜெயித்தால் கேன் வாட்டர் காசு மிச்சம்.

3.அகன்ற வாய் கொண்ட தண்ணீர் பாட்டில்களில் குடித்தால்தானே நீர் அதிகம் செலவாகும்? வீட்டுக்கு வரும் விருந்தினருக்குக் கூட பக்கத்து பிளே ஸ்கூல் பாப்பாவிடம் அபேஸ் செய்த ஸ்ட்ரா போட்ட பாட்டில், ஃபீடிங் பாட்டிலில்  நீர் நிரப்பி கொடுத்து வரவேற்கலாம். 

4.தண்ணீர்க்குடம் வரிசையில் நின்று நீர்பிடித்து வருவது ஒலிம்பிக் பதக்கம் வெல்வதை விட கஷ்டம். எனவே, அதிக ஏசி மாட்டியுள்ள வீடுகளை குறிவைத்து செல்லுங்கள். அங்கு ஏசியில் பயன்படுத்தி வெளியேறும்  நீரை சங்கோஜம் பார்க்காமல் மழைநீர் சேகரிப்பாக நினைத்துப் பிடித்தால் நீங்களும் நாளைய தண்ணீர் காவலர்தான்.
5.மாடித்தோட்ட ஆர்வலர்களே, உங்களுக்கானது இந்த டிப்ஸ். மொட்டை மாடியில் நடந்து கொண்டே குளியுங்கள். குளிக்கும் ஒவ்வொரு சொட்டு நீரும் செடிகளுக்கு கிடைக்கவேண்டும் என்ற லட்சியம் முக்கியம்.

6.  குளிக்க குளிக்க வியர்ப்பது சென்னை ஸ்பெஷல். எனவே ஸ்பான்ச் வைத்த சட்டையை பாண்டி பஜாரில் வாங்கி அணிந்தால், சட்டையைப் பிழிந்தாலே அரைக்குடம் தண்ணீரைத் தேற்றிவிடலாம்.

7.  பக்கெட்டிலிருந்து தண்ணீர் எடுத்து குளித்தால்தானே வீணாகும்? அப்படியே பக்கெட்டில் உட்கார்ந்து குளியுங்கள். அதே தண்ணீரை எடுத்து துணி துவைக்கவும் பயன்படுத்தலாம்.

8. பெரும்பாலான ரெஸ்ட் ரூம்களில் முகம் கழுவுவதில்தான் தண்ணீர் அதிகம் செலவாகிறது. எனவே இங்க் பில்லரில் நீர் நிரப்பி அதை கர்ச்சீஃப்களில் நனைத்து முகத்தை துடைத்தால் லைஃப் ஈஸி.

-பாலகிருஷ்ணன், மழையரசி, அரசுகார்த்திக்

ஓவியம்: பாலமுருகன்

நன்றி: தினமலர் பட்டம்

பிரபலமான இடுகைகள்