தோத்தவன் ஜெயிச்சா அது வெற்றி அல்ல வரலாறு! - சித்ரலஹரி விமர்சனம்!
சித்ரலஹரி
கிஷோர் திருமலா
ஜேகே
தேவி ஸ்ரீ பிரசாத்
பிடித்தது
சாய் தரம் தேஜ், கல்யாணி, நிவேதா பெத்துராஜ் ஆகியோரின் நம்பிக்கையான நடிப்பு.
பொசனேனி கிருஷ்ணாவின் அசலான நடிப்பு.
சுனிலின் காமெடி
டிஎஸ்பியின் சூழலுக்கு ஏற்ற நடிப்பு
அசத்தல்
கிஷோர் திருமலா இப்படத்திற்காக எழுதிய வசனங்கள் அனைத்துமே பிரமாதம். வாழ்க்கையில் ஜெயிக்கவே முடியாத ஒருவனின் விரக்திதான் ஒன்லைன். இதை வைத்தே அவன் வாழ்க்கை எப்படி பிறரால் கணிக்கப்படுகிறது என்பதை இந்தளவு ஆழமாக சொல்ல முடியும், அதற்கு பிரபலமான நடிகரான சாய் தரம் தேஜை ஒப்புக்கொள்ள வைத்து நடிக்க வைக்க முடியும் என்பதையே நம்ப முடியவில்லை.
வசனம், காட்சி அமைப்புகள் என ஒவ்வொரு பிரேமும் இயக்குநரின் பெயர் சொல்ல வைக்கிறது.
அடுத்து, இளையராஜாவின் பக்தரான டிஎஸ்பியின் இசை, கொண்டாட்டமோ, துயரமோ அவ்வளவு பாந்தமாக இழைகிறது. காதலில், பிரேம வெண்ணிலா தாலட்டல் சொக்க வைக்கிறது.
வெண்ணிலா கிஷோர் கஞ்சப்பிசினாறி தமிழனாய் நடித்து பின்னியிருக்கிறார். பத்து நிமிடங்கள்தான் படத்தில் வருகிறார். கிடைத்த கேப்பில் ரசிக்க வைப்பது அழகு.
கவனிங்க ப்ளீஸ்!
அறிமுக பாடல், குத்துப் பாடல், சண்டைகள் என படத்தில் எதையும் திணிக்காமல் இயல்பாக ஒருவரின் வாழ்க்கை எப்படி நிஜத்தால் இழுபடுமோ அப்படித்தான் விஜய் கிருஷ்ணாவின் வாழ்க்கை இருக்கிறது.
தனக்கான முடிவை பிறர் எடுத்தால், முடிவெடுக்க வேண்டிய சந்தர்ப்பத்தில் அவர் என்னாவாகிறார் என்பதற்கு லஹரி சிறந்த உதாரணம்.
முன்முடிவுகளால் ஆண்டுக்கணக்கில் இறுக்கமாகி உள்ளே அழுது கொண்டிருக்கும் !ஸ்வேச்சா கதாபாத்திரத்தில் ஜொலிக்கிறார் நிவேதிதா.
நம்முடைய ஆசை, விருப்பங்கள், முன்முடிவுகளைத் தாண்டி மற்றவர்களையும் கவனிக்க வேண்டும் என்கிற எண்ணத்தை அக்கறையை விதைக்கும் விதத்தில் சித்ரலஹரி பலபடி முன்னே நிற்கிறது. எண்பதுகளில் டிடியில் வந்த இசை நிகழ்ச்சியின் பெயர்தான் படத்தின் தலைப்பும்.
சாய் தரம் தேஜ் ஒரே மாதிரி மாஸ் படங்கள் நடித்து வீணாகப்போகிறோரோ என நினைக்கும்போது தீக்கா, சித்ரலஹரி போன்ற படங்களில் நடித்து விடுகிறார். படம் நடித்தவர்களுக்கு மட்டுமல்ல, பார்ப்பவர்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது. கிஷோர் திருமலாவை நிச்சயமாக வரவேற்கலாம்.
- கோமாளிமேடை
நன்றி: பாலகிருஷ்ணன்