குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துகள் தேவை- அரசு கவனிக்க வேண்டியது அவசியம்!
குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துகள் தேவை!
தேசிய குடும்ப நலத்துறை ஆய்வு, இந்தியாவில் 38 சதவீதக்குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் கூறியுள்ளது.
இந்தியா, பொருளாதார ரீதியாக வளர்ந்துவரும் நாடு. நம் நாட்டின் எதிர்காலமான அடுத்த தலைமுறைக் குழந்தைகளின் உடல்நலன் விவாதிக்கப்படவேண்டிய சூழலில் உள்ளது.
மத்திய அரசின் உதவியுடன் பல்வேறு மாநில அரசுகள் பள்ளியில் குழந்தைகளின் ஊட்டச்சத்திற்காக உணவு,முட்டை, பயறுவகைகளை வழங்கி வருகின்றன. ஆனாலும், ஊட்டச்சத்து பற்றாக்குறை இன்னும் நீங்கிய பாடில்லை. காரணம், இவை குடும்பம் சார்ந்தே ஏற்படுவதுதான். தாய் ஆரோக்கியமாக இல்லாதபோது, அவரின் குழந்தை சிறந்த உடல்திறனுடன் எப்படி பிறக்க முடியும்? இதைத் தவிர்க்க ஒடிஷாவில் கர்ப்பிணிப் பெண்களுக்கு மாதம் 12 முட்டைகளை வழங்கிவருகிறது மாநில அரசு. இந்த முட்டை வழங்கும் ஊட்டச்சத்துத் திட்டம், கர்ப்பிணி குழந்தை பெற்று ஆறுமாதங்கள் வரை அமலில் இருக்கும்.
ஒடிஷாவின் அங்குல் மாவட்டத்தில் 31.8 சதவீத குழந்தைகள் (5வயதிற்குட்பட்டவர்கள்) ஊட்டச்சத்து பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர். 37.4% பேர் ரத்தசோகையால் தாக்கப்பட்டுள்ளனர் என்கிறது தேசிய குடும்பநலத்துறை ஆய்வு அறிக்கை (NHFS 4). ஒடிஷா மட்டுமல்ல; இந்தியா முழுக்கவே ஊட்டச்சத்து பிரச்னை உள்ளது. ஒட்டுமொத்த இந்தியாவில் 38.4 சதவீத குழந்தைகள் ஊட்டச்சத்து பிரச்னையாலும், 35.8 சதவீத குழந்தைகள் போதிய உயரம், எடையின்றியும், 58.6% பேர் ரத்தசோகையாலும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிறது அரசு அறிக்கை.
இந்திய அரசின் தேசிய ஊட்டச்சத்து திட்டம் (ICDS) 1975 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. கர்ப்பிணிகள், குழந்தைகள், தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் என அனைவருக்குமான திட்டமாக உருவானது. குழந்தையின் முதல் ஆயிரம் நாட்களில் அவர்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை அளிப்பது திட்ட இலக்கு. ஊட்டச்சத்துப் பற்றாக்குறையை பெருமளவு குறைக்க முயன்ற திட்டம் இது. மாநில அரசுகளில் தெலங்கானாவுக்கு (7 முட்டைகள்) அடுத்தபடியாக ஒடிஷா பள்ளி மாணவர்களுக்கு ஐந்து முட்டைகளை வழங்குகிறது. உலகளவில் இந்தியா மூன்றாவது பெரிய முட்டை உற்பத்தியாளர். தெற்காசிய நாடுகளை விட முட்டையின் விலையும் இங்கு குறைவு. ஆனால் முட்டை சாப்பிடும் பெண்கள் இங்கு 19 சதவீதம் என்பது வேதனையான செய்தி. 2008ஆம் ஆண்டு இதுபற்றிய ஆய்வை சைட் அண்ட் லைஃப் மற்றும் உலக உணவுக்கொள்கை ஆராய்ச்சிக் கழகம் (IFPRI) நடத்தின.
தகவல்:indiaspend