இணையத்தில் உள்ள அடிப்படைவாதிகள் அசாதாரணமானவர்கள்!
2019ஆம் ஆண்டு மார்ச் 15ஆம் தேதி நியூசிலாந்தில் கிறிஸ்ட்சர்ச்சில் அடிப்படைவாதி ஒருவர் மசூதிகளின் மேல் தாக்குதல் நடத்தினார். மேலும் இத்தாக்குதலை திறமாக திட்டமிட்டு பேஸ்புக்கில் லைவ் செய்தார். இத்தாக்குதலை பல்வேறு தரப்பினரும் பார்த்து அதிர்ந்து போனார்கள்.
வெளிப்படையாக வெளியுலகில் இருக்கும் அடிப்படைவாதிகளை விட இணையத்தில் உள்ள அடிப்படைவாதிகளின் அளவும் எண்ணிக்கையும் அதிகம். இவர்கள் நடத்தும் தாக்குதல்களை அனைவரும் பார்க்கும்படியாகவும் செய்கிறார்கள். இந்த நூற்றாண்டில் நாம் தொலைத்த முக்கியமான விஷயம். குற்றவுணர்வுதான். தனது சந்தோஷம் முக்கியம் என யாரையும் பலிகொடுக்கத் தயங்காத ஆட்கள் உருவாகி வருகிறார்கள். இவர்களைப் பற்றி ஆராய்ச்சி செய்து வரும் ஜூலியா எப்னரிடம் பேசினோம்.
இணையத்தில் ஒளிந்துள்ள தீவிரவாதிகளைக் கண்டுபிடிப்பது எளிதாக இருந்ததா?
அவர்களைக் கண்டறிவது மிகவும் கஷ்டம். காரணம், அவர்கள் படுகொலை செய்வது பற்றிய வீடியோ ஒன்றை வெளியிடுகிறார்கள். அதனைக் கண்டறிந்து நீக்குவது மிகவும் கடினம். ஒரு லிங்கை நீங்கள் நீக்கினால் மூன்று லிங்குகளை புதிதாக உருவாக்குகிறார்கள். ட்விட்டர், பேஸ்புக் என நீங்கள் கண்காணித்துக்கொண்டிருப்பீர்கள். அவர்கள் கேப் எனும் சமூக வலைத்தளத்தைப் பயன்படுத்துகிறார்கள். இதில் பெரும்பாலும் வலதுசாரிகள், படுகொலை செய்பவர்கள் இணைந்துள்ளனர். மேலும் இவர்கள் ட்விட்டர் , பேஸ்புக் ஆகிய வலைத்தளங்களிலும் தங்களது கருத்துகளை பதிவிட்டு ஆதரவாளர்களைத் திரட்டுகின்றனர். இதுதொடர்பான ஆதாரங்களையும் வீடியோ வடிவில் வெளியிட்டு மக்களை உணர்ச்சிக் கொந்தளிப்புகளுக்கு உள்ளாக்குகின்றனர்.
வலதுசாரி குழுக்களை அணுகி எப்படி பேசினீர்கள்?
ஜெனரேஷன் ஐடென்ட்டி போன்ற வலதுசாரி குழுக்களுக்கு சமூக வலைத்தளங்களில் பல்வேறு ஆதரவுக்குழுக்கள் இருந்தன. நான் அவர்களிடம் அறிமுகமாக அவர்களின் திட்டங்களை ஆராய்ந்தேன். அவரகளிடம் இதுபற்றி கேட்டபோதும், அவர்களில் ஒருவர் என்ற முறையில் பதில்களை அளித்தனர். அவர்கள் பயன்படுத்தும் மொழி பற்றி மெல்ல அறிந்துகொண்டேன்.
இக்குழுக்கள் ஆபத்தானவர்களா?
இணையத்தில் உள்ள வலதுசாரி குழுக்கள், தங்களுடைய குழுவில் உள்ளவர்களைப் பற்றியும் அவர்களுடைய குடும்பங்களைப் பற்றியும் தகவல் சேகரித்து வைத்திருப்பார்கள். எனக்கு இருந்த பயமே அவர்கள் என்னுடைய உண்மையான அடையாளத்தை கண்டுபிடித்துவிடுவார்களோ என்பதுதான். எளிதாக குழுக்களை கூட்டவும் ஒருவரை நெருங்கவும் முடியும் திறன் பெற்றவர்கள் இவர்கள்.
நீங்கள் உங்கள் நூலில் சிங்கப்பூரின் மீது ஒருவர் பல கி.மீ. தூரம் தள்ளியிருந்து தாக்குதல் நடத்த முயன்றார் என்று கூறியிருக்கிறீர்கள். இத்தாக்குதலை நாம் தடுக்க முடியாதா?
தாக்குதல் நடத்த திட்டமிட்ட தகவல்தான் நமக்குத் தெரியும். இதற்கு திட்டமிட்ட முக்கியமான ஆளை நீங்கள் பிடிக்கவே முடியாது. பாதுகாப்பு அமைப்புகள் அவர்களைக் கண்காணிக்கிறது என்பது அவர்களுக்கும் தெரியும். அதனால் அவர்கள் பல்வேறு பாதுகாப்பான மென்பொருட்களைப் பயன்படுத்துகிறார்கள். நிறைய சேனல்களை உருவாக்கி தகவல்களை பரிமாற்றம் செய்கிறார்கள். அவர்கள் தீவிரவாத செயல்களுக்கென பல்வேறு ஆட்களை தூண்டிவிட்டு தயார் செய்கிறார்கள். இவர்களுக்கு கூட தங்களின் தலைவர் யார் என்று தெரியாது. அந்தளவு திறமையாக இணையத்தை க் கையாள்கிறார்கள்.
சமூக வலைத்தளங்களில் இயங்கும் இந்தக் குழுக்களை மூட வேண்டும் என ஏன் கூறுகிறீர்கள்?
இவர்கள் வெளிப்பார்வைக்கு தங்கள் கருத்துகளை மென்மையாக முன்வைப்பது போல தெரியும். ஆனால் இவர்கள் இவளை சுடுங்கள் என்று கூற வேண்டுமென்றால், அதை சுற்றி வளைத்து எழுதுவார்கள். காரணம் சட்டச்சிக்கல்கள்தான். தாங்கள் செயல்படும் நாடுகளிலுள்ள பேச்சுரிமைக்கான எழுத்துரிமைக்கான சட்டங்களை இவர்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள். இதன் விளைவாக எந்த சிக்கலிலும் இவர்கள் மாட்டிக்கொள்வதில்லை. வெறுப்பைத் தூண்டுகிறார் என்பதற்கு யாரும் காவல்நிலையத்தில் புகார் தரப்போவதில்லை. அதனைப் பயன்படுத்தி மக்களை தூண்டி விடுகின்றனர். இவற்றை தடை செய்தால் அது குறிப்பிட்ட நாட்டில் மட்டும் தெரியாது.பிற நாட்டில் தெரியும். இதன் உறுப்பினர்கள் விபிஎன் பயன்படுத்தி இத்தளத்தை அணுகுகின்றர்.
நன்றி - நியூ சயின்டிஸ்ட்