என்னை மேம்படுத்திக்கொள்ள இதுவே சரியான நேரம்!





Canva.com




அன்புத் தோழர் சபாபதி அவர்களுக்கு, வணக்கம்.
அடுத்தடுத்த பதவியுயர்வுகள், ஊதிய உயர்வு ஆகிய விஷயங்கள் 2019ஆம் ஆண்டு நிறைவேற வாழ்த்துகிறேன்.
இந்த ஆண்டு புத்தகத் திருவிழாவில் காமிக்ஸ்கள், மலையாளச் சிறுகதைகள் ஆகியவற்றை வாங்கினேன். சிறுகதைகளை இனிமேல்தான் படிக்கவேண்டும். அலுவலகங்களில் சிபாரிசு மூலம் வந்தவர்களின் அழும்புகளைத் தாங்க முடியவில்லை. வேலைகளையும் கற்றுக்கொள்ளாமல் அதைச் சமாளிக்க சில முக்கியப்புள்ளிகளை வளைத்து... பிரமிக்க வைக்கிறது பிழைப்புத் தந்திரங்கள். மற்றவர்களுக்கும் சேர்த்து நானே அதிகம் யோசிக்கிறேன். எனக்கு அமைப்புகள் வீழ்ந்து நொறுங்குவது பெரும் மனவலியைத் தருகிறது. நான் வேலை செய்யும் நிறுவனமே செங்கல் செங்கல்லாக பிரிக்கப்பட்டால்... கஷ்டம்தானே?
புதிய அலுவலகத்திற்கு ஏற்றபடி உன்னை மாற்றிக்கொள் என நண்பர் ஏறக்குறைய மிரட்டினார். எனவே பேரகான் ஆபீஸ் வரிசையில் செருப்பு தேடிக்கொண்டி வாங்கினேன். இதற்கு முன்பு எளிமையாக ரப்பர் செருப்பு போட்டுக்கொண்டிருந்தேன். ஏசியில் வேலை. எனக்கு கால் படுபயங்கரமாக வேர்க்கும். எதற்கு லெதர் செருப்பு, வீண்செலவு என்று நினைத்தேன். ஆனால் அதுதாண்டா கவுரதை என்று சொல்லிவிட்டார் நண்பர் ரெட்.
சில உதாரணங்களை சொல்லி மிரட்டினார். எனவே, கொஞ்சம் அப்டேட்டுகள் தேவைப்படுகின்றன. உணவு, உடை, இருப்பிடம் ஆகியவற்றை மெல்ல மாற்றிக்கொள்ள இதுவே சரியான நேரம் என்று நினைக்கிறேன்.
நன்றி! சந்திப்போம்
.அன்பரசு
13.1.2019

2

அன்பு நிறை நண்பர் சபாபதிக்கு, வணக்கம்.
குடியரசு தினத்திற்கான மரியாதையை கொடிக்கம்பத்திற்கு செலுத்திவிட்டு வந்திருப்பீர்கள். அதை ஏற்றுபவருக்கான தகுதியை நாம் கவனிப்பதேயில்லை. ஜிப்ஸி பட பாட்டைக் கேட்டீர்களா? அரசை நார் நாராக கிழித்துவிட்டார்கள். அரசு எதற்கும் அஞ்சப்போவதில்லை. அவர்களின் கருத்தியலில் உறுதியாக இருக்கிறார்கள். ஏறத்தாழ அவர்களுக்கு உதவும் மனசாட்சியை அடகு வைத்தவர்கள் மூலம் அவர்களின் லட்சியக்கனவு நிறைவேறலாம். என்ன நாமும் அதற்காக ரத்தம் சிந்தவேண்டியிருக்கும். அப்பாடல் பாடலாக பலருக்கும் பிடிக்காது. ஆனால் சொன்ன விஷயம் பலரும் சொல்ல நினைத்தது. எனவே, மானசீகமாக ரசிப்பார்கள். நம்மைப் பொறுத்தவரை யார் முதலில் வழித்தடம் போடுகிறார்களோ அவர்களுக்கு கற்பூரத்தைக் கொளுத்திப் போட்டுவிட்டு நம் பாட்டுக்கு போய்க்கொண்டே இருக்க வேண்டியதுதானே!


அலுவலகம் அதற்கான அம்சங்களோடு என்னை அழுத்துகிறது. நான் எழுதலாம் என்று நினைத்து சென்றால், அங்கு பல்வேறு ஆணவ ஆட்களை சமாளித்தாலே போதும்ப்பா என்று ஆசிரியர் சொல்லிவிட்டார். அரசு அலுவலகம் போல எங்கள் அலுவலகமும் ஆகிவிட்டது. பத்து மணிக்கு உள்ளே வந்ததும் லன்ச் என்ன தம்பீ? கடிச்சிக்க, தொட்டுக்க என்றே பேசுகிறார்களே தவிர வேலை செய்யும் பத்திரிகை பற்றி யாரும் பேசுவதில்லை. சாப்பாட்டை அந்த நேரத்திற்கு நினைத்து சாப்பிட்டால் போதாதா?
செய்யும் வேலையைத் தவிர அனைத்தையும் பேசும் இந்த குழுவிற்கான நிர்வாக நல்மேய்ப்பன் நான்தான். குழுவின் மொழியில் சொன்னால் டபுள் ஏஜெண்ட். இப்பணிக்காக எனக்கு விண்ணரசு காத்திருக்கும் என்ற நம்பிக்கை இல்லை.
தெலுங்குப்படங்களில் கமர்ஷியல் குருமாவை ஊறப்போட்டு அடித்தாலும், பரிசோதனை முயற்சிகளுக்கும் பஞ்சமில்லை. அந்த வகையில் சம்மோகனம், ரங்குல ரத்னம் என்ற இருபடங்களைப் பார்த்தேன். குத்துப்பாட்டு, டைட்டில் பாட்டு, நியூட்டனை கோமாளியாக்கும் சண்டைக்காட்சிகள் என எவையும் கிடையாது. யூடியூபில் கிடைக்கிறது. டிஎன்பிஎஸ்சிக்கு படிப்பது போக நேரம் கிடைத்தால் பாருங்கள்.
நான் தங்கியுள்ள மேன்ஷனில் என் அறை நண்பர் காமிக்ஸ் பிரியர். எனது காமிக்ஸை படிக்கிறேன் என்று வாங்கியவர், ஊருக்கு கொண்டுபோனார். அங்கேயே வைத்துவிட்டு வந்துவிட்டார். அதை சிரித்தபடியே சொன்னார். வாயிலேயே குத்தலாம் என்று நினைத்தேன். ஆனால் அவரின் கடோத்கஜ உருவத்தைப் பார்த்தவுடன் அவரை மன்னித்து ரட்சித்து விடலாம் என மூளை சொன்னது. மஜா லேலோ என்று சொல்லி புன்னகைத்தேன். பெண், பொன், புத்தகம் இரவல் கொடுத்தால் வரவே வராது. இதை மறக்கக்கூடாது என்று நினைத்துக்கொண்டேன்.
நன்றி!
சந்திப்போம்

.அன்பரசு
26.1.2019


அன்புள்ள தோழனுக்கு, நன்றாக இருக்கிறாயா?
நீ போனில் பேசவே தயங்குவாய். ஆச்சரியமாக இருக்கிறது. கடிதம் எழுதி இருக்கிறாய். தயவு செய்து பர்சனலாக விஷயங்கள் எழுதும்போது இன்லேண்ட் கவரில் எழுதி அனுப்பு, இந்த கடிதம் எனக்கு வரும் முன்பே தந்தி பேப்பர் போல பலரும் படித்துவிட்டுத்தான் கொடுப்பார்கள். உன் கையெழுத்தை நானே சிரமப்பட்டுத்தான் படிக்கிறேன். அதனால் அவர்களுக்கு சில விஷயங்கள் மட்டும்தான் புரியும். உன்னை ஏன் கணினித்துறையில் என்க்ரிப்ஷன் பிரிவுக்கு பணிமாற்றம் செய்யக்கூடாது? சாதாரணமாக எழுதினாலே எனக்கு ஒன்றும் புரியவில்லை. சமாளித்து புரிந்துகொள்கிறேன். 
நீ  என் சம வயது ஆள். ஆனால் எதற்கு கடிதத்தில் ங்க போட்டு எழுதுகிறாய் என்று தெரியவில்லை. சொன்னால் அதற்கு குடலை விட நீளமாக ஒரு விளக்கம் சொல்லுவாய். உனக்கென ஒரு தத்துவம்.. அதோடு உன் வழியும் என் வழியும் வேறுவேறு. நீ மனதளவில் அதை உணர்ந்திருப்பாய் என்று நினைக்கிறேன். சாதி ரீதியாக நான் எதிர்கொள்ளும் சிக்கல்கள் அதிகரித்து வருகின்றன. என் குடும்பத்திற்காகத்தான் இந்த வேலையைச் செய்து வருகிறேன். எனக்கு இந்த வேலையில் பெரிய ஆர்வமில்லை. அடிக்கடி வெயிலில் நிற்க வைக்கிறார்கள். நான் டிஎன்பிஎஸ்சி படித்து முடித்தால்  ஏதாவது நல்ல வேலைக்குப் போய்விடலாம் என்று நினைத்து படிக்கிறேன். 
நன்றி !

சந்திப்போம்!

சபாபதி
கோவை -18