தேசியவாதத்தின் தந்தைகள் உருவானது இப்படித்தான்!




Poster




மொழிபெயர்ப்பு நேர்காணல்

பேராசிரியர். சுனில் பி இளையிடோம்

கேரளத்தின் முக்கியமான கலாசார விமர்சகர் சுனில், எழுதுவதை விட இவரின் பொதுமேடைப் பேச்சு அனைத்து மக்களாலும் ரசிக்கப்படுகிறது. இவரின் முக்கியமான படைப்பு  political unconsciousness of Modernism.  மார்க்சியத்தை புகழ்ந்து மட்டும் பேசாமல் அதன் பிரச்னைகளை பட்டென போட்டு உடைப்பதோடு அண்மையில் பாஜக முன்னெடுத்து வரும் தேசியவாத வரலாறு, நாராயணகுரு என பொதுமேடையில் அசத்தலாக பேசிவருகிறார்.

இசை, இலக்கியம், நடனம் என்பதைத் தாண்டி தேசியவாதம், அதன் வரலாறு வரை பேசுகிறீர்கள். உங்களது எழுத்திலும் பேச்சிலும் கூட தத்துவத்தின் சாயல் உள்ளது. எப்படி இப்படி ஒரு பாணியை பிடித்தீர்கள். 

கலாசார வரலாற்றில் நவீனத்தன்மையை ஆராய்வதே என்னுடைய பாணி. நான் இதுவரை செய்த ஆராய்ச்சிகளை இம்முறையில் செய்துள்ளேன். ஒரே ஒரு கருத்தை எடுத்துக்கொண்டு அதை  நோக்கியே எழுதவேண்டும் பேசவேண்டும் என்பதில்லை. மார்க்சும் இம்முறையில் எதையும் வலியுறுத்தியவரில்லை. நான் கைக்கொள்ளும் முறையில் தத்துவத்தில்  சிக்கிக்கொள்ளும் வாய்ப்பும் உள்ளதால், நான் இம்முறையை அனைவருக்கும் பரிந்துரைக்கவில்லை. மார்க்சிசம் என்பது வேறு. மார்க்சிசவாதியின் கலாசார வரலாற்று ஆர்வம் என்பது வேறு. நான் ஆராய்ச்சியில் ஒன்றை மட்டுமே எடுத்துக்கொள்ள விரும்பவில்லை. 

நீங்கள் தெளிவாக கல்வி சார்ந்தும், குடிமக்கள் சார்ந்த பிரச்னைகளையும் அணுகுகிறீர்கள். இதை உங்கள் பேச்சிலும் எழுத்திலும் பார்க்க முடிகிறது. எப்படி சாத்தியமாகிறது?

இன்று கல்வித்துறை சார்ந்த ஆராய்ச்சிகள் அதன் வளர்ச்சிக்கு உதவுவது போல இல்லை. இன்று அனைத்து பல்கலைக்கழகங்களும் குறிப்பிட்ட இனக்குழு சார்ந்த ஆதரவுப்போக்கை கடைபிடித்து வருகின்றன. இதன் காரணமாக, வரலாறு கூட மாற்றப்பட்டு வருகிறது. வரலாற்று ஆய்வாளர் ரொமிலா தாப்பர், இந்தியா கடுமையான ஒழுக்க விதிமுறைகளின்படி உருவாக்கப்பட்டது மகிழ்ச்சி அளிப்பதாக நேர்காணலில் கூறினார். ஆனால் நாம் இன்று பெருமைப்படும் படி நடக்கும் நிகழ்வுகள் இல்லை  என்பதே உண்மை. இந்துத்துவவாதிகள் வரலாற்றை முழுமையாக கைப்பற்றி விட்டால் கல்வித்துறைக்கும் குடிமக்களுக்கும் உள்ள தொடர்பு பாலம் உடைந்து போய்விடும்.

 குடியுரிமை திருத்த சட்டம் பற்றிப் பேசும்போது உங்கள் பேச்சில் நம்பிக்கை தென்படுகிறதே?

அறிவுசார்ந்த தளத்தில் இதுபோன்ற நம்பிக்கை என்பது பொருந்தாது. அரசியல் சார்ந்து செயல்படும்போது, இதுபோல பேசுவது போராட்டத்திற்கு வலு சேர்க்கும். நான் பேசியது நாளை பற்றிய கனவு சார்ந்தது அல்ல.

இப்போராட்டங்களில் உங்களது அரசியல் சார்புநிலை என்ன?

தேசியவாதம் இங்கு தோன்றியபோது அதற்கு இருவடிவங்கள் இருந்தன. 1880 மற்றும் 1920களில் இரண்டு வடிவங்களாக அவை உருமாறின. முதலில் இருந்த தேசியவாத த்தில் மதம் கிடையாது. 1920களில் உருவான தேசியவாதத்தில் மதம் வலுவாக இருந்தது. இதனை வளர்த்தெடுத்தவர்கள் காந்தி, மாணவர் இயக்கங்கள், சமூதாய இயக்கங்கள் ஆகியோருக்கும் பெரும் பங்கு உண்டு. பின்னாளில் இதுவே நவீன இந்தியாவின் அடித்தளமானது.

இதனை அடிப்படையாக கொண்டுதான் சாவர்கர், தீன்தயாள் உபாத்யாயா ஆகியோர் தேசியவாத தந்தையானார்கள். அதன் பின்னணியில்தான் இன்று நீ இந்தியனா என்று கேள்வி கேட்டு இந்து என அவர்களே பதில் சொல்லி வருகிறார்கள்.


 அரசமைப்பு சட்டம் தொடர்பான கேள்விகளை இன்று கேட்டு விவாதித்து வருகிறோம். இதுபோன்ற விவாதங்களை நாம் முன்னரே தொடங்கவில்லை. இதனால்தான் நமது ஜனநாயக அமைப்புகள் சரிவைச் சந்தித்தனவா?
உண்மைதான். நாம் தாமதமாகத்தான் அரசமைப்புச்சட்டத்தில் உள்ள அம்சங்களை விவாதிக்கத் தொடங்கியுள்ளோம். இதில் ஏற்பட்ட தாமதத்தில்தான் பிராமணிசம் மற்றும் மனுஸ்மிருதி உள்ளே நுழைக்கப்பட்டு சமூக கட்டமைப்புகளையே மாற்றிவிட்டது. இன்று நாம் போராட்டங்களில் பயன்படுத்தும் தேசிய கீதம் மாறவில்லை. அதனை பயன்படுத்தும் விதம் மாறிவிட்டது. அரசமைப்புச் சட்டமும் கூட அப்படித்தான் உள்ளது.


ஆங்கிலத்தில் ரபீக் இப்ராகிம்

நன்றி - பவுன்டைன் இங்க் இதழ்