வீட்டிலேயே எப்படி வேலை பார்ப்பது?
giphy |
வீடு என்பதே பலருக்கும் ஓய்வு எடுக்கும் இடமாகத்தான் இருந்து வந்தது. இந்தியாவில் கொரோனா பரவும் வேகத்தைப் பார்த்தால் சீனியர் சிட்டிசன்கள் இப்போதே பதற ஆரம்பித்து விட்டார்கள். அவர்களை நிறுவனங்கள் வீட்டுக்கு போ பெருசு என சொல்ல ஆரம்பித்துவிட்டனர். அந்த வரிசை காலியானால் அங்கிள் வரிசை, சித்தப்பா வரிசை அதற்கடுத்து ஜென் இசட் ஆட்கள் வந்துவிடுவார்கள். வீட்டில் வேலை பார்ப்பது சரி, நிறைய நேரம் கிடைக்குமே என்ன செய்யலாம் என யோசித்தோம்.
சிங்கார சமையல்காரன்!
சாம்பாருக்கு வாசத்திற்காக சிக்கன் மசால்பொடி போடுவது, அனைத்திலும் தேங்காயைத் துருவி போட்டு எலைட் லுக் கொண்டுவருவது, எண்ணெய்யை தண்ணீராக ஊற்றி காய்களை ஊறவைப்பது என கணவர்கள் சூப்பர் செஃப்பாக மாறுவது இப்போதுதான். சாம்பாருக்கு சின்ன வெங்காயமா, பெரிய வெங்காயமா என சமையலறையை உருட்டுவது, கடலைப்பருப்பு, குழம்பு மிளகாய் தூள் தேட ரெய்டு நடத்துவது என போர்க்களமாக மாறினாலும் பிரச்னையில்லை. ஏனெனில் அதை சுத்தப்படுத்துவதும் அவர்கள்தானே!
சும்மாருப்பா!
இப்படி சமையலறையில் அமளி துமளி செய்தால் மனைவி என்ன சொல்லுவார். சும்மாருப்பா என்றுதானே. அதுவும் வேலையில்லாத நேரத்தில் சரியான வேலைதான். அமைதியாக உட்கார்ந்து விட்டத்தைப் பாருங்கள். அதுவே, உங்களை சூபி ஞானி என்று சொல்லி சொந்த கருத்துகளை தத்துவமாக போடச்சொல்லி தூண்டும். தியானத்திற்கு பிறகுதே ரத்தகளறியை உருவாக்க முடியும்.
உடம்பை ஃபிட்டாக்குவோம்
ஆபீசில் ராஜாராம் மிக்சர் பாக்கெட்டை நொறுக்கிவிட்டு, ஓய்வு நேரத்தில் டைகர் ஷெரபின் சிக்ஸ் பேக் பாடியை பார்த்து பெருமூச்சு விட்டுதான் பாதிநேரம் போகிறது. வீட்டிலேயே வேலை என்றதும் நமக்கு தோன்றுவது ஆகா, யூடியூப் பார்த்து உடனே அர்னால்டு ஆகிடலாமே என்பதுதான். ஆனால் பயிற்சியின் கடுமை பார்த்து அர்னால்டு சுருங்கி அய்யாசாமி ஆவதுதான் யதார்த்த நிலைமை..
கதை படிப்போம்
ஓய்வு நேரத்தில்தான் நமக்குள்ளிருக்கும் இலக்கியவாதி குர்தா போட்டு கோதாவில் இறங்குவார்கள். இந்த மாதம் என்ன படிச்சே எனும்போது தோன்றும் கோபம், இந்த ஓய்வுநேரத்தில் காட்டாறாக மாறும். குற்றப்பரம்பரை எழுதியவர் சுந்தர ராமமூர்த்தியா, வெண்ணிற ஆடை மூர்த்தியா என குழம்புவர்களுக்கு நண்பர்களாக இருப்பவர்கள் பாடு கஷ்டம். படித்தே சாதிப்பேன் என்பவர்கள் கேட்கும் குறியீடு கேள்விகளை எதிர்கொள்வது கேணி இலக்கிய கூட்ட ஆட்களை சமாளிப்பதை விட கஷ்டம்.
நன்றி - இந்தியன் எக்ஸ்பிரஸ் - சுவேதா சுரேந்திரன்