வாழ நினைக்கும் ஆன்மாவின் துயரமான ஆசை - இச்சா - ஷோபா சக்தி
இச்சா
ஷோபா சக்தி
கருப்பு பிரதிகள்
இந்த நூல் பிரான்சில் உள்ள எழுத்தாளர் ஷோபா சக்திக்கு, போலீஸ் அதிகாரி ஒருவர் கையெழுத்துப் பிரதிகளை அளிப்பது போல தொடங்குகிறது. தற்புனைவு வகையில் எழுதப்பட்டுள்ள நூலை கண்ணீர் பெருகாமல் தொடர்ச்சியாக வாசிப்பது கடினமாக உள்ளது.
ஆலா என்ற தமிழ்பெண்ணின் வாழ்க்கைதான் இலங்கை அரசியல், வரலாறு, புலிகளின் எழுச்சி, வீழ்ச்சி ஆகியவற்றுடன் சொல்லப்படுகிறது. நூலின் செழுமை இதில் புழங்கும் ஏராளமான பழமொழிகள், புதிய சொற்களில் தெரிகிறது. தமிழீழ ஆதரவாளர்களுக்கு இந்த நூல் நிச்சயம் பிடித்தமானதாக இருக்காது.
ஷோபாசக்தி/vikatan |
சாதாரணமாக படிப்பவர்களுக்கு அந்த நிலத்தில் நிம்மதியாக வாழ நினைப்பவர்களுக்கு விடுதலை இயக்கம் எப்படி பிரச்னைகளை உருவாக்குகிறது என்ற எண்ணமே ஏற்படுகிறது. தினசரி வாழ்க்கைப்பாடுகளுக்கு தடுமாறி வரும் தமிழ் மக்களிடம் புலிகள் வலுவில் வந்து உதவி கேட்க பிரச்னைகள் தொடங்குகின்றன. இப்படித்தான் ஆலா என்ற பெண்ணின் வாழ்கையும் இஞ்சி தேநீரை புலிகளுக்கு வழங்கிய பொழுதில் மாறுகிறது. அடுத்த நாள் அவளது தம்பியை வெட்டிக்கொல்கிறது சிங்கள ஊர்க்காவல் படை. இதில் ஏற்படும் முட்டல் மோதலால் அவர்களுக்கு பழக்கமான ஊர்க்காரர்களே தம்மைக் காத்துக்கொள்ள ஆலா குடும்பத்தை சமூக புறக்கணிப்பு செய்கின்றனர். இதனால் அந்த ஊரை விடுத்து வேறு ஊருக்கு இடம்பெயர்கிறது ஆலாவின் குடும்பம். ஆனால் துயரம் அத்தோடு முடிவதாயில்லை. தன் சித்தியின் வீட்டிற்கு சென்று படிக்க முற்படும் ஆலாவுக்கு நன்னித்தம்பி அப்பாச்சி பாலியல் தொந்தரவு கொடுக்க அங்கே உதவிக்கு வருவது புலிகளின் பெண்கள் படை. பின்னர் பள்ளிகளில் மூளைச்சலவை செய்யப்படும் ஆலா மெல்ல புலிகளின் பக்கம் சாய்கிறாள்.
ஆண் என்றால் என்ன, பெண் என்றால் என்ன அங்கு அவளுக்கு புலிகளின் தளபதி ஒருவரின் அங்கீகரிப்பு புத்துயிர்ப்பை அளிக்கிறது. பதினெட்டு வயதை தொடும் முன்பே அவளுக்கு காதல் வருகிறது. அதை வெளிப்படுத்தவும் அவள் தவறவில்லை. ஆனால் இயக்கம் அவளை பலிகொடுக்க நினைத்து அதற்கான முயற்சிகளை தொடங்கிறது. அதில் சிக்குபவள், முந்நூறு ஆண்டுகள் சிறைதண்டனை பெறுகிறாள்.
இந்த நூலில் வரும் சித்திரவதை விவரிப்புகள் சாதாரண வாழ்க்கையை அமைதியாக வாழும் யாரையும் மனபேதலிப்புக்கு ஆட்படுத்துபவை. உடலை நிர்வாணப்படுத்தி குழு வல்லுறவு, போதை மருந்துகளை மிதமிஞ்சி செலுத்துபவை படிக்கும்போதே திகைக்க வைக்கிறது. அதிலும் பன்றிக்கொழுப்பு சித்திரவதை நினைக்க முடியாத பீதியை வழங்குகிறது.
இந்த சித்திரவதையில் இருந்து நமக்கு விடுதலை அளிப்பதாக வரும் வெளிநாட்டு நல்லவர் வாமதேவன் கதை படிக்கும்போதே பொருந்தவில்லை. இறுதியில் நாம் நினைத்தது போலவே முடிவு வேறொன்றாக இருக்கிறது. ஆனால் எழுத்தாளர் இலங்கை புலிகளை வைத்து எப்படி பணம் சம்பாரிக்கிறார்கள் என்பதை சொல்ல நினைத்து அதனை சிறப்பாக செய்திருக்கிறார்.
எளிமையாக இடத்தில் அமைதியாக வாழ நினைக்கும் பெண்ணின் விருப்பம்தான் இச்சா. ஆனால் அது எப்படி சூழல்களால் சிதறடிக்கப்படுகிறது என்பது இச்சால நூலாக உருவாகியிருக்கிறது. நூலின் உள்ளடக்கத்திற்காக எழுத்தாளர் கடுமையாக உழைத்திருக்கிறார். உரோவன் மொழியே அதற்கான சாட்சி.ஷோபா சக்தியின் நெருப்பு போன்ற எழுத்துகள் வாசிப்பவர்களின் மனதை உருக்கும் வலிமை பெற்றுள்ளன.