சந்திப்போமா - அன்பரசு - சபாபதி கடிதங்கள்





Clown, Lonely, Abandoned, Sad, Fantasy


3
அன்புத்தோழர் சபாபதிக்கு, வணக்கம். கடிதம் எழுத தாமதம் ஆகிவிட்டது. அலுவலகம், ஹாஸ்டல் என அலைந்து திரிகிறேன். இந்த அவதிதான் பிரச்னை.
தனி அறைக்கு வந்து சில பொருட்களை வாங்கி தனி ஆவர்த்தனம் செய்ய ரெடி ஆகிவிட்டேன். வேறுவழி ஏதும் இல்லை. படிக்கின்ற மாணவர்களோடு சேர்ந்து இருப்பது உடல்நலத்திற்கும் மனநலத்திற்கும் பெரும் அழுத்தமாக இருக்கிறது. இரவு முழுவதும் விளக்கு எரியவில்லையென்றால், என் அருகிலுள்ள படுக்கைக்காரர் பதற்றமடைந்து விடுகிறார். எப்படி இங்கே தங்கியிருப்பது என நினைத்தேன். எப்படியோ நான் முதலில் வேலை செய்த பத்திரிகையில் இருந்த நண்பர் எனக்கு அறையைப் பிடித்து தந்துவிட்டார். சிறிது நிம்மதியாக இருக்கிறது.
கவச்சம் என்ற தெலுங்குப்படத்தைப் பார்த்தேன். வெகுளியான நாயகன், பேராசை பிடித்த நாயகி என்ற ஒன்லைனில் கதை பயணிக்கிறது. டான்சையை எட்டி உதைப்பது ஆடி பீதியைக் கிளப்பியவர்தான் இந்தப் படத்தின் நாயகன் சாய் சீனிவாஸ். அவரின் ரியாக்ஷன்களைப் பார்க்க சகிக்கவில்லை. சொத்துக்காக நடைபெறும் சதியும், துரோகமும்தான் படத்தின் கதை. சில ட்விஸ்டுகள் நன்றாக இருக்கின்றன. ஆனால் அவை இரண்டரை மணிநேரம் நம்மை சினிமா பார்க்க உதவாது. தெலுங்குப்படங்கள் யூடியூபில் எளிமையாக கிடைப்பதுதான் அவற்றைப் பார்ப்பதற்கான காரணம்.
நன்றி!
சந்திப்போம்!
.அன்பரசு
4.5.2019


 Grandstand, Stadium, Teddy Bear, Seats, Still Life

4
அன்புத்தோழர் சபாபதிக்கு, வணக்கம். நலமா?
கல்லூரி நண்பர்களின் மனப்போக்கு எனக்கு புரிபடாத ஒன்று. வி.பி.சுரேஷ் எதார்த்தமான போக்கு கொண்டவர். நான் கனவுலகில் வாழ்பவன். அவரிடம் நான் பேசியதே மிக குறைவு. ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டாலும் நான் உங்களுடன்தான் அதிகம் பேசியிருக்கிறேன். என்னுடைய உளறல்களை நீங்கள் மட்டும்தான் இடைமறிக்காமல் புன்னகையுடன் கேட்ட ஒரே ஆள். எனவே, இதை கவனத்தில் கொள்ளுங்கள். திடீரென நண்பர்களுக்கு கான்ஃபரன்ஸ் போட்டு பேசக்கொடுத்தால் நான் என்ன பேசுவேன்? அவர்களுக்கு மணமாகிவிட்டது, குழந்தைகள் இருக்கலாம். சிறந்த செரிலாக் உணவு, காசுக்கு மதிப்பான டயப்பர், ஆடைகளுக்கான கடை என பேசுவார்கள். நான் அவர்களிடம் பேச எந்த விஷயமும் பொதுவாக இல்லை.
உங்கள் நண்பர்களான மணிகண்டன், கோபால் சுரேஷ் போன்றவர்கள் இத்தகைய ஆட்களே. எனவே தயவு செய்து உங்களுக்கு வரும் அழைப்புகளை நீங்களே எடுத்துப் பேசுங்கள். நான் பிறகு கூட உங்களுக்கு அழைத்துப் பேசுகிறேன். கான்ஃப்ரன்ஸ் வேண்டாம். நிறைய சிக்கல்களை ஏற்படுத்திவிடும். கொலைகாரன் படம் பார்த்தேன். லீலை என்ற பாடல்களுக்கான படம் எடுத்தவரா என வியக்க வைத்திருக்கிறார் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ். தியேட்டரிலும் பார்க்கலாம். டிவியில் பார்க்கும்போது உங்களுக்கு நிரம்ப பிடித்துப்போகும். பாப்கார்ன் தின்பதையும் பெப்சி குடிப்பதையும் கூட தாமதப்படுத்தும் வேகமான திரைக்கதை. வீட்டில் பார்த்தால் காசும், நேரமும் மிச்சம். இசையமைப்பாளர் சைமன் கிங்கின் இசைதான் எங்கேயோ கேட்டோமோ என ஹாலிவுட் படங்களைத் தேடச்சொல்கிறது.
டிஎன்பிஎஸ்சிக்காக படித்துக்கொண்டிருப்பீர்கள். கவனமாக படியுங்கள். சாப்பாட்டை கவனமாக சாப்பிடுங்கள். உடம்பில் கவனம் போய்விட்டால் அப்புறம் எதற்கும் பிரயோஜனமில்லை.
நன்றி!
சந்திப்போம்!
.அன்பரசு
16.6.2019


Buddhist, Ritual, Water, Buddhism, Meditation, Ancient





5
அன்புள்ள தோழர் சபாவுக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா?
நான் குடியிருக்கும் அறையில் தண்ணீர் பிரச்னை தொடங்கிவிட்டது. சிலசமயங்களில் எனது அலுவலகத்தில்தான் சென்று குளிக்கிறேன். அங்கிருக்கும் காவலர் கூட என்னப்பா, குளிச்சிட்டு வந்துடு. நான் அடுத்து போய் குளிக்கணும் என்று நக்கலடிக்க தொடங்கிவிட்டார். ஆபீசில் இதற்காகவே சோப்பு, ரேசர், கண்ணாடி, ஷாம்பூ எல்லாம் வாங்கி வைத்திருக்கிறேன். என்ன செய்வது நிலைமை அப்படி?
சென்னையிலுள்ள வைணவர்கள், வைணவ அனுதாபிகள் என பலரும் காஞ்சிபுரத்திற்கு சென்றுவிட்டார்கள். அத்திவரதரைப் பார்க்கத்தான். 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் விழாவாம். தந்தி, தினகரன் எல்லாருமே அத்திவரதருக்கு சிறப்பிதழ், ப்ளோஅப் வெளியிட்டு கல்லா கட்டினார்கள். மாதமொரு நூலை வாசிக்க ஆபீசும் வற்புறுத்துகிறது. அதைத்தாண்டி நான் இயல்பாகவே படித்துக்கொண்டிருப்பவன்தான். ஆனால் வேலை நெருக்கடியால் படிப்பதில் சிறு தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது. காலையில் கிளம்பினால் மாலைதான் அறைக்கு வர முடிகிறது. மனச்சோர்வைப் போக்க காமிக்ஸ்தான் உதவியாக உள்ளது. ஷெல்பிலுள்ள நூல்களைப் பார்த்தாலே குற்றவுணர்வு ஏற்படுகிறது.
நேற்று மரணதேசம் மெக்சிகோ, நீதியின் நிழலில் என்ற காமிக்ஸ்களைப் படித்தேன். ஒரே நூல்தான். இரண்டு கதைகள் இருந்தன. நவகோ தலைவர் டெக்ஸ் வில்லர் கடத்தப்பட்ட கொத்தடிமையாக்கப்பட்டுள்ள குழந்தைகளை மீட்பதும், செவ்விந்தியர்களைக் காப்பாற்றுவதும்தான் கதை. நீங்கள் இதையெல்லாம் சிறுவயதில் படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
நன்றி!
சந்திப்போம்!
..அன்பரசு
2.7.19

Images - Pixabay