புறாவாகி துப்பறியும் அமெரிக்காவின் உளவு ஏஜெண்ட் - ஸ்பைஸ் இன் டிஸ்கைஸ்
ஏஜெண்ட் ரெஸ்லிங் உளவுத்துறை ஏஜெண்டுகளிலேயே தைரியமானவர். அனைத்து விஷயங்களையும் தனியாக சென்று ராணுவம் போல எதிரிகளைத் தாக்கி விஷயங்களை கொண்டு வருபவர். அவருக்கு நினைத்துப் பார்க்க முடியாத எதிரியாக வருகிறார் ரோபோ ஹேண்ட். ரெஸ்லிங்கின் முகத்தை ஜெராக்ஸ் செய்து பல அரசு அதிகாரிகளை விஞ்ஞானிகளை போட்டுத்தள்ளுகிறார். கூடவே உளவுத்துறை ஏஜெண்டுகளின் டேட்டாபேஸை கொள்ளையடித்து அத்தனை பேரையும் அடையாளம் கண்டு கொல்லத் தொடங்குகிறார். இதனை ரெஸ்லிங் அறியாமல் இருக்கிறார். அவருக்கு விஷயம் புரிபடும்போது போலீஸ் அவரை கைது செய்ய கொலைவெறியோடு அலைகிறது.
இந்நிலையில் அவருக்கு ஆயுதங்களை உருவாக்கிக் கொடுக்கும் பணியில் இருக்கும் வால்டர், ரெஸ்லிங் அவனுடைய கருவிகளை பிடிக்கவில்லை என்று கூறியதால் வேலை இழக்கிறான். அதற்காக ரொம்பவெல்லாம் கவலைப்படவில்லை. கொரியன் காதல் படங்களைப்பார்த்துக்கொண்டு புறாக்களை வளர்த்துக்கொண்டு ஆராய்ச்சி செய்து வருகிறான், ரெஸ்லிங் தனக்கு வால்டர் மட்டுமே உதவி செய்யமுடியும் என புரிந்துகொண்டு அவன் வீட்டுக்குப் போகிறார். அங்கு நடைபெறும் தாறுமாறு கோளாறுகளால் ரெஸ்லிங் புறாவாக மாறிவிடுகிறார். அவர் எப்படி இந்த நிலையில் ரோபோ கரத்தைக் கண்டுபிடித்து தன் உளவு நிறுவனத்தை காப்பாற்றுகிறார் என்பதே கதை.
கதை பேன்டசி என்பதால் ரெஸ்லிங், வால்டர் பிரமாதப்படுத்தியிருக்கிறார்கள். ரெஸ்லிங்காக இருக்கும் போது மிதப்பாகவும், புறாவாக மாறும்போது பணிவாகவும் பதற்றமாகவும் குரலில் ஏற்றத்தாழ்வுகளை காட்டி பின்னியிருக்கிறார் வில் ஸ்மித்.
அனிமேஷன் படம் என்பதால் ஜாலியாக ரசிக்கலாம். ரெஸ்லிங், வால்டர் என்ற இரு கதாபாத்திரங்களுக்கு இடையிலான வேறுபாட்டை நன்கு உணர்த்தியிருக்கிறார்கள். வசனங்களையும் நறுகென்று எழுயிருக்கிறார்கள். ரெஸ்லிங் தன்னைக் கொல்ல முயல்பவர்களை கொல்ல முயலும்போது எல்லாம் வால்டர் அனுமதிப்பதில்லை. யாரையும் கொல்ல வேண்டாமென்று அன்பை போதிப்பவனாக வருகிறான். இறுதியில் அவன் தன் நோக்கத்தில் வெல்வது நன்றாக உள்ளது.
கோமாளிமேடை டீம்