சப்ளிமெண்டுகளை சாப்பிடுவது அவசியமா?





Vitamins, Tablets, Pills, Medicine, Pharmaceuticals
pixabay




சப்ளிமெண்டுகள் நமக்குத் தேவையா?

 

உணவில் போதிய சத்துகள் உங்களுக்கு கிடைக்காது என எபாங்க் சபாங்க் பானங்கள் வெகு ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி வருகின்றன. மேலும் அதே நிறுவனங்கள் தனி பிராண்டுகளாக சத்து மாத்திரைகளையும் பிரபல நடிகர்களை வைத்து விளம்பரங்களைச் செய்து வருகின்றன. 

உண்மையில் இந்த மாத்திரைகள் நமக்கு தேவைதானா? என நாற்பது வயதுக்குப் பிறகு நமக்குமே தோன்ற ஆரம்பிக்கும். அதைப்பற்றி அறிவோம் வாங்க. 

உண்மையில் நமக்குத் தேவையான அனைத்து சத்துகளையும் நாம் இயற்கையில் பெறுவது மிகவும் கடினம். சித்த மருந்துகளை எடுத்துக்கொள்ளுங்கள். அவற்றில் பெரும்பாலானவை உலோகங்களை பகுதிப் பொருட்களாக கொண்டவை. முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல என்று அப்பொருட்களை டப்பா செட்டி கடையில் வாங்கிச் சாப்பிட்டால் விரைவில் உங்கள் அலுவலக நண்பர்கள் மனமகிழ்ச்சியுடன் உங்கள் கல்லறையில் மலர்வளையம் வைத்து விடுவார்கள். எனவே நாம் அவர்கள் அந்த மகிழ்ச்சிக்கு இடம் கொடுக்க கூடாது. உடலை அவ்வப்போது சோதித்து பக்கவிளைவு குறைவான, அடிப்படை விளைவுகள் அதிகமான மருந்துகளை சாப்பிடலாம். காரணம், நாற்பது வயதிற்குப் பிறகு செல்கள் தேயத் தொடங்கும். எனவே நீங்களாகவே குறிப்பிட்ட மருந்துகளை சாப்பிடத் தொடங்கிவிடுவீர்கள். பெரும்பாலும் உங்களுக்கென அடிக்கடி பார்க்கும் மருத்துவர்களின் பரிந்துரைகளை ஏற்று அதனைப் பின்பற்றுங்கள்.
உலகில் எழுபது சதவீத மக்கள் தங்களின் மருத்துவரின் பரிந்துரை அடிப்படையில் அல்லது அப்படி இல்லாமல் மருந்துகளை சாப்பிட்டு வருகிறார்கள். 

ஏன் சத்து மாத்திரைகளை சாப்பிட வேண்டும்?

நாம் சாப்பிடும் உணவு சரிவிகித உணவு கிடையாது. இதில் ஏற்படும் பற்றாக்குறையை நிச்சயம் வைட்டமின் மாத்திரைகள்தான் போக்கும். ரீவைட்டல் சாப்பிடலாமா, இரும்புச்சத்து மாத்திரை சாப்பிடலாமா என்பது உங்கள் விருப்பம். ஆனால் இதனை முடிந்தளவு மருத்துவரின் பரிந்துரைப்படி செய்யவேண்டும். பொதுவாக மக்கள் வைட்டமின் ஏ, டி, சி ஆகியவற்றுக்கான மாத்திரைகளை அதிகம் உட்கொள்கிறார்கள்.
இதில் பெருமளவு பாதிப்பு ஏற்பட்டதற்கான ஆதாரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. 

விட்டமின் பி9

இதனை இரும்புச்சத்து மாத்திரைகள் அளிக்கின்றன. பருப்புகள், கரும்பச்சை நிற காய்கறிகள் இரும்புச்சத்து நிறைந்தவை. பொதுவாக பெண்களுக்கு இரும்புச்சத்து போதாமை அதிகம் உண்டு. எனவே அவர்களுக்கு கருவுறும் சமயங்களில் இந்த மாத்திரைகளை சாப்பிடச்சொல்லுவார்கள். 

என்ன பிரச்னை?

பொதுவாக குறிப்பிட்ட வைட்டமின்களுக்கான மாத்திரைகளை விட அனைத்து சத்துகளையும் உள்ளடக்கிய மாத்திரைகள் சந்தையில் சக்கைப்போடு போடுகின்றன. இவை, அனைத்தும் நம் உடலால் சரியாக உள்வாங்கிக் கொள்ளப்படுகிறதா என்று நமக்குத் தெரியாது. மேலும் இவை நம் உடலுக்கு தேவைப்படும் அளவில் இருக்கிறதா என்று அறிவதும் கடினம். 

ஆபத்தா, அவசியமா?

பெரும்பாலான மாத்திரைகளில் ஆபத்தான வேதிப்பொருட்கள் உண்டு. குறிப்பாக செலினியம் போன்றவை. அதிகளவில் உள்ள இரும்புச்சத்து, செலினியம், விட்டமின் ஏ ஆகியவை உடலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இவை கழிவாக மாறி வெளியேறும். இதனால் மாத்திரைகளை வாரி விழுங்கிய உங்களது ஆரோக்கிய நோக்கம் அடிபட்டு போகும். 

முறைப்படுத்தப்படாதவை மல்டிவைட்டமின்கள் என்பதால், அவற்றின் லேபிளில் உள்ள விஷயங்கள் மாத்திரைகளில் அப்படியே இருக்கும் என நம்ப முடியாது. மேலும் இந்த மாத்திரைகளின் விலையும் மிக அதிகம். எனவே, இதனைவிட குறைந்த விலையில் காய்கறிகள் கிடைக்கும்போது ஏன் மாத்திரைகளை வாங்கிப்போட்டு விழுங்கி ஆபத்தில் சிக்கிக்கொள்ள வேண்டும்? என உணவு வல்லுநர்கள் சிலர் கூறுகின்றனர்.

நன்றி – ஹவ் இட் வொர்க்ஸ் இதழ்