இந்தியா உருவாக்கும் சூப்பர் கணினிகள்!
இந்தியா, 2015ஆம் ஆண்டு முதலாக சூப்பர் கணினிகளை உருவாக்கும் முயற்சிகளைத் திட்டமிட்டது. இதற்காக நேஷனல் சூப்பர்கம்ப்யூட்டர் மிஷன் - என்எஸ்எம் தொடங்கப்பட்டது. இதற்காக 750 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இந்த திட்டத்திற்காக மின்னணு மற்றும் தகவல்தொடர்புத்துறை, இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் ஆகிய அமைப்புகள் இணைந்து பணிபுரிந்து வருகின்றன.
ஏழு ஆண்டுகளில் மூன்று சூப்பர் கணினிகளை உருவாக்குவது திட்டமாகும். இதற்காக அரசு திட்டமிட்டு பணியாற்றி வருகிறது. ”அரசின் நோக்கம் சிறப்பானதுதான். ஆனால் அரசு இத்திட்டத்திற்காக நிதியை குறைத்து வழங்கியிருப்பதால், பணிகள் வேகம் பிடிக்கவில்லை ” என்கிறார் இத்திட்டத்திற்காக இயங்கும் அதிகாரிகளில் ஒருவர். கணினிகளை உருவாக்குவதில் பல்வேறு தொழில்நுட்ப இடர்பாடுகளை இக்குழு சந்தித்துள்ளது. இதன் விளைவாக அடிப்படையான மென்பொருட்களையும் வன்பொருட்களையும் என்எஸ்எம் திட்டக்குழுவினர் உருவாக்குவதில் தொடக்க காலங்களை செலவழித்து உள்ளனர்.
இன்று உலகளவில் சீனா சூப்பர் கம்ப்யூட்டர் போட்டியில் முதல் இடத்தில் உள்ளது. இந்த நாடு மொத்தம் 227 சூப்பர் கணினிகளை வைத்துள்ளது. அடுத்தபடியாக அமெரிக்கா 117 சூப்பர் கணினிகளை உருவாக்கியுள்ளது. என்எஸ்எம் திட்டம் தொடங்கி நான்கு ஆண்டுகளில் பரம் சிவாய் எனும் சூப்பர் கணினியை குழுவினர் உருவாக்கினர். இக்கணினி வாரணாசியில் உள்ள ஐஐடியில் நிறுவப்பட்டு பிரதமர் மோடி இதனை த் திறந்து வைத்தார். இக்கணினியை உருவாக்க 23.50 கோடி ரூபாய் செலவாகியுள்ளது.
இதுவரை மூன்று சூப்பர் கணினிகளை உருவாக்குவதற்கு 94 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. அரசுக்கு பதினொரு சூப்பர் கணினிகளை உருவாக்கும் திட்டமும் உள்ளது. விரைவில் அதற்கான அறிவிப்புகள் வரலாம்.
நன்றி - இந்தியன் எக்ஸ்பிரஸ் - மார்ச் 11, 2020 அஞ்சலி மாரர்