வரி குறைவாக லாபம் நிறைவாக சம்பாதிக்கும் டெக் நிறுவனங்கள்
கூகுள், ஆப்பிள், பேஸ்புக், டிவிட்டர் ஆகிய நிறுவனங்கள் வரி குறைவாக வசூலிக்கும் நாடுகளில்தான் தங்களது அலுவலகங்களை அமைக்கின்றனர். பில்லியன்களில் லாபம் சம்பாதித்தாலும் மில்லியன்களிலேயே வரி கட்டி வருகின்றனர். இதனைக் கவனித்த புதிய அரசுகள் டெக் நிறுவனங்களுக்கு வருமானத்திற்கு ஏற்ப வரி கட்டுமாறு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க ஆலோசித்து வருகின்றனர்.
இங்கிலாந்தில் 2018ஆம் ஆண்டில் பேஸ்புக் நிறுவனம், 1.6 பில்லியன் டாலர்கள் லாபம் சம்பாதித்து, வரியாக 28 மில்லியன் டாலர்களைக் கட்டியுள்ளது. அதாவது அதன் மொத்த வருமானத்தில் 1.75 சதவீதம்.
இதே காலகட்டத்தில் கூகுள் நிறுவனம் 1.4 பில்லியன் டாலர்களை சம்பாதித்து 67 மில்லியன் டாலர்களை வரியாக கட்டியுள்ளது. உலகம் முழுக்க இருக்கும் பன்னாட்டு வரி சதவீத அளவு என்பது பல்வேறு நாடுகளுக்கு வருவாயை ஈட்டித் தருவதில்லை என்கிறார் நிறுவனங்கள் சார்ந்த வல்லுநரான நீல் ரோஸ்.
மேற்சொன்ன டெக் நிறுவனங்கள் இங்கிலாந்தில் மட்டுமல்ல, இவை கிளை விரித்த அனைத்து நாடுகளிலும் லாபம் அதிகமாகும், வரி குறைவாகவும் அமையும்படி லாபி செய்து வரிகளை திருத்தி சம்பாதித்து வருகின்றன.
இதில் கவனமாக முதலில் விழித்துக்கொண்ட நாடு பிரான்ஸ்தான். டெக் நிறுவனங்களுக்கு கூடுதலாக மூன்று சதவீத வரியை விதித்துள்ளது. இதன் மூலம் அரசுக்கு நஷ்டம் ஏற்படாது. 2018-19ஆம் ஆண்டு மட்டும் இதுபோல 30 நிறுவனங்களுக்கு வரியை உயர்த்தி அறிவித்துள்ளது. இதற்கு அயர்லாந்து, ஸ்வீடன் ஆகிய நாடுகள் எதிர்ப்பை தெரிவித்துள்ளன. காரணம் பல்வேறு டெக் நிறுவனங்கள் அயர்லாந்தில்தான் தங்கள் நிறுவனத்தை நடத்தி வருகின்றன. இங்கு வசூலிக்கப்படும் கார்ப்பரேட் வரி 12.5 சதவீதம்தான். இதுபிற நாடுகளை விட மிகவும் குறைவு.
பிரான்சை பின்தொடர்ந்து இங்கிலாந்து, ஸ்பெயின், ஆஸ்திரியா ஆகிய நாடுகள் டெக் நிறுவனங்களுக்கான வரியை திருத்தி உயர்த்தி அறிவித்துள்ளன. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எப்போதும் போல் பிரான்ஸ் தயாரித்து அங்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு அதிக வரி என மிரட்டியுள்ளார்.
ஜி20 நாடுகள் மாநாடு பிப்ரவரி மாதத்தில் நடைபெற்றது. இதில் டெக் நிறுவனங்களுக்கு அளிக்கும் வரி சதவீதம் பற்றி பேசப்பட்டது. இதில் நாடுகள் தங்கள் நாட்டு எல்லையில் நடைபெறும் வியாபாரத்தில் குறிப்பிட்ட வரி தங்களுக்கு வேண்டும் என கூறின. உலகளவில் குறைந்தபட்ச வரி சதவீதம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என கூறப்பட்டது.
நன்றி - நியூ சயின்டிஸ்ட்