கேங்ஸ்டரின் ரீவைண்ட் வாழ்க்கை - ரணரங்கம் படம் எப்படி?
ரணரங்கம் தெலுங்கு - 2019
இயக்கம் - சுதீர் வர்மா
ஒளிப்பதிவு திவாகர் மணி
இசை - பிரசாந்த் பிள்ளை
ஸ்பெயினில் வசிக்கும் தேவா தன்னுடைய கதையை சொல்லுவதாக தொடங்கும் கதை ஆந்திராவில் நடக்கிறது. ஆந்திராவில் பிளாக்கில் டிக்கெட் விற்கும் தேவா, அப்போது இருந்த காலகட்டத்தைப் பயன்படுத்தி நண்பர்களோடு சட்டவிரோத மதுபான பிசினஸில் இறங்குகிறார். இதை தனக்கு விடப்பட்ட நேரடி சவால் என்று நினைக்கும் அந்த ஊரின் எம்எல்ஏ முரளி சர்மா, பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்துகிறார். தேவாவின் பக்கத்தில் ஏராளமாக உயிர்ப்பலியாகிறது. முரளி சர்மாவுக்கும் இழப்புகள் அதிகமாகிறது. உச்சமாக அவரின் உயிரும் போகிறது. அதற்கு காரணமான சம்பவத்தால் தேவா கடுமையாக பாதிக்கப்பட்டு வெளிநாட்டுக்கு போகிறார். ஆனால் செய்யும் பிசினஸ் ஏதும் மாறவில்லை. அவர் நண்பர்கள் அப்படியே தொழிலை செய்து வருகின்றனர். அப்போது இந்தியாவில் இருந்து வரும் வேலையை தேவா ஏற்க மறுக்கிறார். அதனால் அவரின் மகள், காதலி உள்ளிட்டோரின் உயிருக்கு ஆபத்தாகிறது. இப்போது தனது தொழிலை விட்டு வெளியேறிய தேவா ஆந்திராவுக்கு திரும்ப நேரிடுகிறது. தனது தொழிலை திரும்பவும் செய்தாரா இல்லையா? தனது மகளை மீட்டாரா என்று பேசுகிறது படம்.
ஆஹா
படத்தின் மேக்கிங் நன்றாக இருக்கிறது. சர்வானந்த் நன்றாக நடித்திருக்கிறார். கல்யாணியின் பாத்திரம் அவருக்கு செட்டே ஆகவில்லை. பாடல்களுக்கு மூன்று பேர் இசை, பின்னணி பிரசாந்த் பிள்ளை. அதெல்லாம் பரவாயில்லை.
ஐயையோ
எளிதாக யூகித்துவிடும் கதை. அனைத்தும் அப்படியே நடக்கின்றன. மேக்கிங்கிற்காக மெனக்கெட்ட இயக்குநர் சுதீர், நண்பனின் துரோகம் என்ற ஒன்றை மட்டும் வைத்துக்கொண்டு படத்தை ஒட்டிவிட நினைக்கிறார். அது ஒட்டவேயில்லை. மேலும் இளமையான, வயதான சர்வானந்த் கதாபாத்திரம் நன்றாக இருந்தாலும் அவரின் வளர்ச்சி பற்றிய புத்திசாலித்தனமான திட்டங்கள் படத்தில் குறைவு. ஒரு கட்டத்தில் படத்தில் கொலைகள் அதிகமாக இருப்பதுபோல்தான் தெரிகிறதே தவிர திருப்பங்களோ சுவாரசியமோ அல்ல.
சர்வானந்த் ரசிகர்கள் அவரின் ஸ்டைலுக்காக பார்க்கலாம்.