இஸ்ரோ சிவனும், மத அடையாளமும் - சந்திப்போமா - கடிதங்கள்

Nepal, Guru, Man, Hindu


மத அடையாளங்கள் அவசியமா?


அன்புள்ள நண்பர் சபாபதிக்கு, வணக்கம்.  
உங்கள் உடல்நலமும், மனநலமும் சிறந்தோங்க வாழ்த்துக்கிறேன்.
நான் தனிப்பட்ட முறையில் இறைநம்பிக்கையோடு இருக்கிறேன். ஆனால் மக்களின் பிரதிநிதியாக இருந்தால், அவர்கள் முன் தோன்றும்போது மத அடையாளங்களைத் தவிர்ப்பேன். மக்கள் நம்மை அணுக நாமே மத அடையாளங்களை சுவராக கட்டக்கூடாது. இது என்னுடைய கருத்து. இஸ்லாமியரோ, கிறிஸ்துவரோ வருகையில் காஞ்சி மகாபெரியவரின் புகைப்படத்துடன் அனைத்து மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்த ஒருவர் இருந்தால் அது சங்கடமான சூழலை உருவாக்கும் என்றே நான் நினைக்கிறேன். குறிப்பிட்ட இன மக்களின் மீதான தாக்குதல் சூழல் நடந்து வரும் நிலையில் இதுபோன்ற அடையாளங்கள் மக்களை இன்னும் தனிமைப்படுத்தும்.
அறிவியல் துறையில் இதுபோன்ற விஷயங்கள் புகுந்துவிட்டன. நான் தங்களிடம் போனில் இதுபற்றி பேசினேன். அது பெரிய விஷயமில்லை என்றீர்கள். எனக்குப் அப்படிப்படவில்லை. இஸ்ரோ சிவன் மக்கள் வரிப்பணத்தில் ஆராய்ச்சியைச் செய்யும்போது மாதிரிகளை கடவுளின் பாதங்களில் வைத்து சரணடைவது சரியானதல்ல.
சேட்டன் பகத்தின் இந்தியா பாசிட்டிவ் என்ற நூலைப் படித்து வருகிறேன். தாராளவாத வலதுசாரி எழுத்தாளர் இவர். இன்றைய சமகாலத்திற்கு ஏற்றபடி செக்சும் காதலும் கலந்து காக்டெய்லாக கலந்து எழுதி வெற்றி கண்டவர். கட்டுரைகளை சுமாரான விஷயங்களுடன்தான் எழுதுகிறார். டைம்ஸ் பத்திரிகையில் கூட கட்டுரைகளை எழுதி வருகிறார். பிளாக்கில் இவரது கட்டுரைகளை மொழிபெயர்த்து எழுத இந்த புக்கை வாங்கினேன். முன்னமே இவரது நூல்களை (யங் இந்தியா) மொழிபெயர்த்து வலைத்தளத்தில் எழுதியுள்ளோம்.  
வெங்கடசாமி என்ற நண்பர் எப்போதும் சொல்கிறார். சார் நீங்க உங்க கைச்சரக்கையும் கலந்து எழுதறீங்க. நீங்க பேசற மாதிரியே இருக்குன்னு. ஆனால் உண்மையில் ஒரு மொழிபெயர்ப்பை செய்யும்போது நான் அதில் கூறப்பட்ட கருத்தின் திசையில் சென்று கொண்டிருப்பேன். அப்போது பேசும்போது, அந்தக் கருத்தோட்டமே வருகிறது. அதனால் அவர் அப்படி கூறினார். சேட்டன் பகத்தின் கருத்துகள் பொதுவாக அன்னாஹசாரேவின் ஊழல் ஒழிப்பு வகையறாக்களில் அடங்கும். நான் என்னுடைய கருத்துக்களை சேர்த்து எழுதுவது தனிக்கட்டுரைகளில்தான். சேட்டன் பகத்தைப் பொறுத்தவரை அவர் சொன்னதை தமிழுக்கு ஏற்றபடி மாற்றினேன். அவ்வளவேதான். புதிய நூலைப் பொறுத்தவரை இதில் நான் சில விஷயங்களை சேர்த்து நீக்கி மாற்றி எழுதியுள்ளேன். பிரதிபி லிபி வலைத்தளத்தில் இதனை வெளியிட நினைத்தேன். ஆனால் காப்புரிமை சங்கடங்கள் ஏற்படலாம் என விட்டுவிட்டேன். நீங்கள் பிரதிலிபியில் ஏதேனும் படித்தீர்களா?
நன்றி!
சந்திப்போம்!
.அன்பரசு
3.8.2019

Stress, Pressure, Anxiety, Angst, Stressed, Business
 நேர்மையும் பணியும்!
அன்பு நண்பர் சபாபதிக்கு, வணக்கம் 
 15ஆம் தேதி எனக்கு விடுமுறை. இன்று நண்பரைச் சந்திக்கச் சென்றேன். மதிய உணவு அவருடன் சாப்பிடுவதாக ஏற்பாடு. வாக்கு தவறி, கரும்பு ஜூஸ் வாங்கிக்கொடுத்துவிட்டு சென்றுவிட்டார். மணமானவர்கள். எனவே, சொல்ல ஏதுமில்லை. செவன்த் சன் என்ற படத்தைப் பார்த்தேன். நன்மை தீமை மோதல்தான் கதை. பேய் ஒன்றைக் கொல்வதற்காக காத்திருப்பவர் தனக்கு துணையாக இளைஞர் ஒருவரை காசு கொடுத்து வாங்கிக்கொள்கிறார். அவன் பேயை அழிக்கும் விதி கொண்டவன். ஏன் எப்படி என்பதுதான் கதை.
சண்டைக்காட்சிகளும், சிஜியும் படம் பக்கா என்று சொல்ல வைக்கிறது. மற்றபடி சிலுவைதான் உலகைக் காக்கும் என்று சொல்லி, நம் மூளையில் சுண்ணாம்பு அடிக்கவில்லை. அதுவே பெரிய விடுதலை.
ஆபீஸ் செல்வது சுந்தர் சியின் அரண்மனை படத்திற்கு செல்வது போல திக் திக்க்கென்றே இருக்கிறது. எப்போதே எந்த திக்கிலிருந்து பிரச்னை வரும் என்றே புரியவில்லை. வான்ஹெல்சிங் போல வில்லும் அம்புமாக சுற்ற வேண்டியிருக்கிறது. சுயநலம், போலித்தனம். தனக்கான ஆதரவு ஆட்கள் என இதழை சிதைப்பதற்கான அத்தனை அம்சங்களும் இவர்களிடம் இருக்கிறது. எப்படிப்பட்ட மனிதர்கள். யாருடனும் நம்பிக்கையாக பேச முடியவில்லை. காலபைரவரை வேண்டிக்கொண்டு வேலை செய்துவருகிறேன்.
சேட்டன் பகத்தின் நூலைப் படித்து விட்டேன். இனி கே.என்.சிவராமன் சார் கொடுத்த உலக மக்களின் வரலாறு நூலை படிக்கவேண்டியதுதான். பிறரின் கருத்துகளை எதிர்வினை காட்டாமல் கேட்கக்கூட பெரிய மனது தேவை. இதற்குத்தான் பயிற்சி செய்து வருகிறேன்.
நன்றி!
சந்திப்போம்!
.அன்பரசு
16.8.2019

Road Sign, Attention, Shield, Stop, Stop Sign, Far
போலி நட்பு!

அன்புத்தோழர் சபாபதிக்கு, வணக்கம்.  

நலமறிய ஆவல். நட்பு கொள்வதைப் பற்றி போனில் பேசினீர்கள். நான் தங்கள் கருத்தை பகுதியளவில் ஏற்கிறேன். நாம் நம் முன் எதிர்ப்படும் அனைவரிடமும் பேசலாம். ஆனால் அவர்கள் அத்தனை பேரையும் நண்பர்களாக ஏற்பதில்லை. உறவு பலப்பட உருவாக நம்பிக்கை தேவை. அது இல்லாதபோது சிமெண்ட் கலக்காத கான்க்ரீட்டாக கட்டடம் இருக்கும். விளைவு என்னவாக இருக்கும்?
 
நட்பை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும் என்ற தன்முனைப்பு எப்போதும் இருந்ததில்லை. பெரிய திட்டம் போட்டு இதனை செய்யவில்லை. நானாக ஓர் உறவை அமைத்து பயன்பெற்றதில்லை. நீங்களும் நானும் பேசுவது கூட இயல்பாக ஏற்பட்டதுதான். இதற்கான சூழல் கல்லூரியில் அமைந்துவிட்டது. நம் மனதிடம் பேசுவது போல, மனசாட்சி போல சிலர் அமைகிறார்கள். நானாக போய் நட்பு ஏற்படுத்திக்கொள்ள முயன்று நிறைய மனக்காயம் பட்டிருக்கிறேன். பொருட்களை இழந்திருக்கிறேன். பயன்படுத்திவிட்டு தூக்கி எறியப்பட்ட நிகழ்ச்சிகளும் உண்டு. போலியாக வற்புறுத்தப்பட்டு சிரிக்கும் நிகழ்ச்சிகளில் நான் பங்கேற்பதில்லை. முடிந்தளவு அவற்றை தவிர்த்து விடுவதால் கெட்ட பெயரும் ஏற்படுகிறது. அதற்கு என்ன செய்வது?
வளர்ந்தாலும் சிறுபிள்ளைத்தனமாக நடந்துகொள்பவர்களை பாராட்ட முடியுமா? நீங்கள் வேலை என்றால் மட்டும்தான் என்னிடம் பேசுகிறீர்கள். முதலாளி வாங்கியுள்ள ரோபோவாக நீங்கள் என்றார் சக ஊழியர் ஒருவர். நேரடியாக மனந்திறந்து பேசாத ஒருவரிடம் நட்பு பாராட்ட என்ன இருக்கிறது? கொடுக்கிற சம்பளத்திற்கு எனக்கிட்ட பணிகளை நான் செய்யவேண்டும். இல்லையென்றால் சீட்டை அடுத்தவரிடம் கொடுத்துவிட்டு ஈரோட்டுக்கு கிளம்பவேண்டியதுதான்.
  ஒரு லட்சத்திற்கு பக்கமாக வாங்குகிறார் இந்த புகார்தாரர். நாற்பது வயதிற்குள்ளாக தன்னை உலகிற்கு நிரூபித்து விட்டவர், இப்போது அகில உலகமும் தன் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கவேண்டும் என நினைக்கிறார். வயதானால், தலை நரைத்துப்போனால் ஒருவர் வரம் தரும் நிலைக்கு வந்துவிடலாமா ஆச்சரியமாக இருக்கிறது. மனதளவில் நெகிழ்வுத்தன்மை இம்மியும் கிடையாது இவர்களுக்கு. தான் நினைப்பதுதான் சரி என அணி சேர்த்து சண்டை செய்யும் மனம் கொண்ட ஆட்கள். சோறு, தூக்கம், அடுத்தவரை நோகடிக்கும் நகைச்சுவை இதைக்கொண்டே வாழ்கிறார்கள். அவர் கூறியதற்கு நான் அதைத்தவிர என்னங்க சார்? என்றேன். பின்னே நாம் என்ன அவரிடம் பொண்ணைக் கேட்டு வாங்கி கல்யாணம் செய்திருக்கிறோமா என்ன? உடனே ஷாக்காகி கண்கள் சிவந்தவர், எழுந்து போய்விட்டார். நான் செய்திக்கட்டுரைகளை எழுத தொடங்கிவிட்டேன்.
நட்பில் காரியம் சாதிக்கும் எண்ணம் எனக்குக் கிடையாது. ஆபீஸ் நேரத்தில் வேலையை செய்யச்சொன்னால் கோபம் வந்துவிடுகிறது. மறக்காமல் கவலையை விட்டு உடற்பயிற்சியை செய்யுங்கள். போலீசாருக்குத்தான் ஆரோக்கியம் மிகவும் முக்கியம்.
நன்றி!
சந்திப்போம்!
.அன்பரசு
10.9.2019
Images - Pixabay