கொரோனோ வைரசை முன்னரே கணித்த அமெரிக்க எழுத்தாளர்!



Monalisa, Mona Lisa, Corona, Virus, Coronavirus
pixabay



பொதுவாக எழுத்தாளர்களை தீர்க்கதரிசிகள் என்று சொல்லுவதுண்டு. காரணம், அவர்கள் கற்பனையாக யோசித்த விஷயங்கள் திடீரென நிஜத்தில் நடக்கத்தொடங்கும். இதுபோல உலகம் முழுக்க நடப்பது உண்டு.
அண்மையில் கொரோனா வைரஸ் உலகம் முழுக்க வேகமாக பரவிவருகிறது. இதன் பாதிப்பை அமெரிக்க எழுத்தாளர் டீன் கூட்ஸ் 1981இல் தான் எழுதிய ஐஸ் ஆஃப் டார்க்னெஸ் என்ற நாவலில் குறிப்பிட்டுள்ளார். இதில் கொலைகார வைரஸின் பெயர் வூஹான் 400. இப்போது உலகம் முழுக்க பரவி வரும் வைரஸ் முதன்முதலில் பரவியது வூஹான் நகரத்திலிருந்துதான் என்பது நினைவுக்கு வருகிறதா?
இந்நேரத்தில் மனதில் திகிலும் உடலில் நடுக்கம் இருந்தாலும் நீங்கள் வாசிக்கவேண்டிய இத்தகைய திகில் நாவல்களை சொல்லவேண்டியது எங்கள் கடமை.

தி இலியட், ஹோமர்

ஹோமர் எழுதிய கிரேக்க கவிதை. இது பிளேக் நோயால் அழிந்த மக்களின் துயர் பற்றி பேசுகிறது. அப்போலோவை கிரேக்க மக்கள் அவமரியாதை செய்ய அவர் கொடுக்கும் சாபத்தால் ஒன்பது நாட்களில் ஏராளமானவர்கள் இறக்கிறார்கள். இத்துயரத்தை இந்த நூல் பேசுகிறது. 

தி கோப்ரா ஈவன்ட் – ரிச்சர்ட் பிரிஸ்டன் 1998

நியூயார்க் நகரில் கோப்ரா வைரஸை ஆர்க்கிமிடிஸ் என்ற வில்லன் பரப்பிவிட்டு மக்களை அச்சுறுத்தும் கதை இது. ஒருவரின் உடலில் தொற்றும் வைரஸ் சளியிலிருந்து தன் கணக்கைத் தொடங்கி மக்களை மெல்ல கொன்றொழிக்கிறது.
தி ஸ்டேண்ட், ஸ்டீபன் கிங் 1978
மகத்தான க்ரைம் ஃபேன்டசி நூல். கேப்டன் ட்ரைப்ஸ் என்ற வைரஸ் உலகம் முழுக்கப் பரவி 99 சதவீத மக்களை வைகுந்த பிராப்திக்கு அனுப்புகிறது. படிக்க படிக்க திகில் கிளப்பும் நாவல் இது. 

பான்டெமிக், ஸ்காட் ஸ்கிக்ளர் 2014

வெளிகிரகத்திலிருந்து பூமிக்கு வரும் அயல்கிரக வைரஸ், மக்களுக்குப் பரவி அவர்களை கொலைகாரர்களாக மாற்றுகிறது. இதனை அழிக்க எப்போதும் போல அமெரிக்க அரசு பாடுபடுகிறது. இந்த வகையில் உலகைக் காப்பாற்ற அமெரிக்கா படும் பாட்டை மூன்று பாக நூல்களாக எழுதி கல்லாகட்டி விட்டார் ஆசிரியர். 

அவுட்பிரேக், ராபின்குக் 1987

தலைப்பைப் போலத்தான் மருத்துவ ஆய்வகத்திலிருந்து தவறுதலாக வெளியேறும் நுண்ணுயிரி மக்களுக்குப் பரவி கொல்கிறது. இதனால் அரசு குறிப்பிட்ட நகரத்தை சிவப்பு எச்சரிக்கை கொடுத்து தனிமைப்படுத்துகிறது. இதனால் உலகில் ஏற்படும் பயம், பதற்றம் ஆகியவற்றை துல்லியமாக விவரிக்கிறது இந்த நூல்.
நாவல்களே இந்த லெவலில் இருந்தால் திரைப்படங்கள் மட்டும் காதலை மட்டுமே பேசிக்கொண்டிருக்கும்? வைரஸ் பாதிப்பை அடிப்படையாக கொண்ட சில படங்கள் உங்களுக்காக...

அவுட்பிரேக் – 1995, 12 மங்கீஸ் – 1995, ஐயம் லெஜண்ட் 2007, கேரிர்ஸ் – 2009, கான்டேஜியன் 2011, வேர்ல்ட் வார் இசட் -2013, மேகி – 2015, கேபின் ஃபீவர் -2016, வைரல் - 2016

பிரபலமான இடுகைகள்