உணவில் தில்லுமுல்லு! - கலப்படத்தின் ஆபத்து



Bottle, Color, Container, Cooking, Drink, Food, Fruit
pixabay


பாலில் வேதிப்பொருட்களை கலப்பது, கோதுமை மாவில் சோயா மாவு கலப்பு, எண்ணெயில் ஆர்ஜிமோன் எண்ணெய் கலப்பு என கலப்படம் இல்லாத உணவு வணிகம் கிடையாது என்று ஆகிவிட்டது. வணிகத்திற்கு கருணை கிடையாது என்பதால் உணவில் பாரபட்சம் பார்க்காமல் கல், மண், மலிவான எண்ணெய்களை கலந்து விற்கிறார்கள். அனைத்து தில்லுமுல்லுகளையும் செய்துவிட்டு மேட் இன் இந்தியா என்று பிரின்ட் செய்து விற்பனைக்கு அனுப்பி விடுகிறார்கள்.

சாதாரண உணவில் உள்ள கலப்படத்தைக் கண்டறிய சற்று கூர்மையான நாக்கும் அறிவும் தேவை. 2013ஆம் ஆண்டு உலகளவில் டின்னில் அடைக்கப்பட்ட இறைச்சிப் பொருட்களை சோதனை செய்தனர். அதில் மாட்டு இறைச்சி என்று எழுதப்பட்ட டின்களில் மாட்டிறைச்சிக்கு பதிலாக குதிரை இறைச்சி உள்ளீடு செய்யப்பட்டிருந்தது. கறிகளில் என்ன தீண்டாமனை என அதிலும் கலப்படம் செய்து உலகளவில் மாட்டிறைச்சி உணவுகளுக்கான சந்தையை தில்லாலங்கடி ஆட்கள் குலைத்தனர்.

பால் பொருட்களில் பலரும் தில்லுமுல்லு வேலைகளைச்செய்கிறார்கள். இன்று உங்கள் கையில் கிடைக்கும் பால் பாக்கெட்டை பால் பண்ணையில் நான்கு நாட்களுக்கு முன்னரே வேதிப்பொருட்களை சேர்த்து குறிப்பிட்ட நாட்களுக்கு பயன்படுத்தும்படி தயார் செய்வார்கள். நீங்கள் பயன்படுத்தும் குறிப்பிட்ட பிராண்ட் பால் நன்கு அடர்த்தியாக இருக்கும். அப்படிப்பட்ட பால் எல்லாமே திடமான வேதிப்பொருட்களின் வார்ப்புதான். அதை தெரியாமல் சேர்ப்பதுதான் கலப்படக்கார ர்களின் வியாபார ரகசியம்.

வே புரதம், சமையல் எண்ணெய் ஆகியவற்றை பாலில் கலந்து அதன் அளவை கூட்டுகின்றனர்.

சந்தையில் நன்றாக விற்கும் டிமாண்ட் இருக்கும் பொருட்களில் அனைத்திலும் கலப்படம் உண்டு. துனா மீன், மாக்யூ மாட்டிறைச்சி ஆகியவற்றிலும் பெரியளவு கலப்படம் நடைபெற்று வருகிறது.

கலப்படம் என்பதை பொருட்களில் மட்டும் செய்துகொண்டிருப்பது புத்திசாலித்தனமல்ல என்பதை கலப்ப ஆட்களுக்கும் தெரியும். எனவே டிமாண்ட் இருக்கும் பொருட்களின் லேபிள்களை மட்டும் காப்பியடித்து சாதாரண பொருட்களுக்கும் அதே லேபிளை பயன்படுத்தி அதிக விலையில் விற்கின்றனர். நியூசிலாந்தில் பெறப்படும் மனுவா தேன் அப்படி ஒன்று. இதைப்போன்றே பல்வேறு கலப்படங்கள் அண்ணாச்சி கடை முதல் மோர் சூப்பர் மார்க்கெட் வரை உண்டு.

சாதாரண டீ குடிக்கும்போதே நண்பர் வெங்கடசாமி மாதிரி ஆட்கள் க்ரீன் டீ  தான் நான் எப்போது குடிப்பேன் என்று குடித்து வெறுப்பேற்றுவார்கள். அதில் நிறமேற்றப்பட்ட மணல்தூள், மரத்தூள், பயன்படுத்தப்பட்ட தூள் ஆகியவற்றின் கலப்பும் உண்டு என்பதை அறிய மாட்டார்கள். எனவே கவனமாக பார்த்து டெட்லி டீயை தேர்ந்தெடுத்தாலும் எழுத்துகள் சரியாக எழுதப்பட்டுள்ளதா, அசலா, நகலாக என்பதை ஆராய்ந்து பார்த்து வாங்குங்கள். கல்லீரல் பாதிக்கப்பட்டால் அதை மாற்றிக்கொண்டு உயிர்வாழ்வது மறு உலகில் மட்டுமே சாத்தியம். பரலோக தந்தையை பிராத்திக்கொண்டு கலப்படத்தை தவிருங்கள்.


ஸ்பார் மார்க்கெட்டில் ஆலிவ் ஆயில்களை குவித்து வைத்து வாங்குங்க வாங்குங்க ஒண்ணு வாங்கினால் இன்னொன்று ப்ரீ என கூவ ஆரம்பித்து விட்டார்கள். பின்னே ஒரு லிட்டரே 750 ரூபாய் என்று சொன்னால் யார் வாங்குவார்கள்? அதில் மாதத்தில் பலருக்கு மளிகைச்செலவே அடங்கிவிடுமே? ஆனாலும் ஹைஃபையாக வாழ ஆசைப்படுபவர்கள் கன்னித்தன்மை கொண்ட ஆலிவ் ஆயில்களை வாங்க விரும்புவார்கள். தப்பில்லை. 2014-15 இல் செய்த ஆய்வுப்படி மூன்றாம் தரம் கொண்ட மலிவான ஆலிவ் எண்ணெய்களை சந்தையில் கலப்படம் செய்திருப்பது கண்டறியப்பட்டது. உள்ளூரில் உற்பத்திக்கும், பயன்பாட்டிற்கும் எண்ணிக்கையில் நிறைய இடைவெளி இருந்தது. இதனால் சந்தேகம் எழவே ஆய்வு அமைப்புகள் அதில் இருந்த திருட்டுத்தனத்தை கண்டுபிடித்தன.  எனவே உள்ளூரில் கிடைக்கும் நமது சூழலுக்கு உவப்பான எண்ணெய்களை வாங்கி சுழற்சி முறையில் பயன்படுத்துங்கள். இத்தாலி நாட்டில் பயன்படுத்தும் ஆலிவ் எண்ணெய்களை பயன்படுத்த அடம் பிடித்து நோய்வாய்படாதீர்கள்.

உலகம் முழுவதும் நடைபெறும் உணவு கலப்படத்தின் மதிப்பு 1.7 ட்ரில்லியன் டாலர்களுக்கும் அதிகம்.

எப்படி இதிலிருந்து தப்புவது என்கிறீர்களா? நீங்கள் எண்ணெய் மளிகை பொருட்களை வாங்கும் கடைகளை கவனியுங்கள். நம்பிக்கையான பொருட்களை வழங்குபவரிடம் மட்டுமே பொருட்களை வாங்குங்கள். சூப்பர் மார்க்கெட்டில் தான் ப்ரோ பர்சேஸ் என்று கலப்பட பொருட்களை வாங்கி பங்கம் ஆகாதீர்கள்.

நன்றி - ஹவ் இட் வொர்க்ஸ் இதழ்