கொரோனா வைரசில் இவர்கள் எந்த வகை?









கொரோனா பாதிப்பு நமக்கு நம்மையே கண்ணாடி மாதிரி அடையாளம் காட்டியிருக்கிறது. நாம் யார், எப்படிப்பட்ட ஆள், பக்கத்தில் அமர்ந்திருப்பவர் என்ன மாதிரியான ஆள் என்பதை இந்த இக்கட்டான நேரத்தில் அடையாளம் கண்டுகொள்ளலாம். அப்போதுதான் கொரோனாவை விட கொடுமையான ஆள் இவன் என பொட்டில் அறைவது போல சில வில்லங்க ஆட்களின் விஸ்வரூபம் நமக்கு தெரிய வரும். 

உலகிலேயே இந்தியர்கள் தனித்துவமானர்கள்தான். அதில் எந்த சந்தேகமுமில்லை. பின்னே, ஊரே கொரோனா பயத்தில் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் வீட்டுக்குள் முடங்கி கிடந்தது. அந்த நேரத்திலும் பர்சேஸூக்காக அண்ணாச்சி கடைக்கு சென்னை மக்கள் போகிறார்கள் என்றால், எங்கண்ணனுக்கு தில்லு பார்த்தியா மொமண்ட்தான் நினைவுக்கு வருகிறது. சிலரது நம்பிக்கையை எப்பாடு பட்டாலும் அசைக்க முடியாது.
சிலர் கொரோனாவை போலிச்செய்தி என நினைப்பார்கள். இன்னும் சிலர் பூமி மாதா நம்மை விழுங்கப்போறா என புராணக்கதையை பாட்காஸ்டில் ஒலிபரப்பியபடி இருப்பார்கள். தமிழர்கள் ஸ்டாலின் போல வெயில் வந்தா போதும். நோயெல்லாம் ஒழிஞ்சிடும் என வம்பாக கற்பனை வளர்த்து திரிவார்கள்.  

சானிடைசரே நமக!

சாப்பிட்டால் கூட டிஷ்யூ பேப்பரால் கையை கழுவலாமா என அமெரிக்கர்கள் அளவுக்கு முன்னேறிய இந்தியர்கள் இப்போது லைப்ஃபாய் சோப்பு விளம்பரத்தை வெறித்தபடி நிற்கிறார்கள். சோறு திங்கக்கூட கை கழுவ யோசித்தவர்களின் பாக்கெட்டில் இன்று சானிடைசர் ஜெல் இடம்பிடித்துவிட்டது. அதையும் கிளினிக் பிளஸ் ஷாம்பு போல பிதுக்கி கை, முழங்கை, தலை என தேய்த்து வருகிறார். அதென்ன கைக்கு மட்டும் முழு உடம்புக்கும் பாதுகாப்பு வேண்டாமா ப்ரோ என்கிறார்கள். அதுசரிதான், அப்படியென்றால் சானிடைசரை நீங்கள் காசு கொடுத்து வாங்கி தேய்க்கணும். என்னிடம் கடன் வாங்கி தேய்த்து பிலாசபி பேசினால், என்ன கொடுமை சார் இது?

கூவி விற்றாலும் ஒரு பயலும் லைஃப்பாய் சோப்பை வாங்கவிலை. இப்போது லைஃப்பாய், டெட்டால், சேவ்லான் தேடி சூப்பர் மார்க்கெட்டை சூறையாடி வருகிறது மக்கள் கூட்டம். யூனிலீவர் நிறுவனம் கொரோனாவைப் பயன்படுத்தி விற்கவே விற்காத நூறு கோடி ரூபாய் மதிப்பிலான லைஃப்பாய் சோப்புகளை மக்களுக்கு விலையின்றி வழங்கவிருக்கிறது. அனைத்திற்கும் கொரோனா நமக சொல்லி ஜபியுங்கள். ரத்தம் பரிசுத்தமாகி ரிசல்ட் நெகட்டிவ் என்று வரட்டும். 

இறுதித்தீர்ப்பு நாயகர்கள்!

இந்த கதாபாத்திரங்கள் எப்போதுமே பிரண்டையை பச்சையாக தின்றது போல் மூளை நமைச்சலோடு உட்கார்ந்திருப்பார்கள். ஆனால் அருகில் போய் மேடம் என்று சொல்லிவிட்டால், மேட்டூர் அணை திறந்தது போல பேச தொடங்கிவிடுவார்கள. அப்புறம் அவர்களை நிறுத்தவே முடியாது. என்ன அனைத்து பேச்சும் உலகம் அழிந்தே போய்விடும் வகையில் இருக்கும். இதற்கான தகவல் களஞ்சியத்தை சேகரித்து வைத்து கொட்டுவார்கள். நாம் முழுகிவிடுவோம். இவர்களுக்கு எந்த விஷயமாக இருந்தாலும் அதில் ஒரு மெலோடிராமா வேண்டும். கொரோனா இறப்பு அதிகரிக்கும்போதெல்லாம் இவர்களின் குரல் மசூதி பாங்கு சத்தமாக ஊரை எழுப்பும். 

வியாபாரக் காந்தம்

உலகம் எந்த ஆபத்தைச் சந்தித்தாலும் சரி, இவர்களுக்கு அது எல்லாமே காசுதான். சானிடைசர் எங்குமே கிடைக்கவில்லை என்று சொல்லும்போதே வீட்டில் சானிடைசர் தயாரிக்க முடியும். என்னிடம் இருக்கிறது. வாங்கிக்கிறீங்களா என்று மார்க்கெட்டிங் செய்வார்கள். இது சானிடைசர் மட்டுமல்ல எண்ணெய், ஊறுகாய், ஆப்ப மாவு என மல்டி பிஸினஸ் செய்து அதற்கு வாடிக்கையாளர்களைப் பிடிக்கவே ஆபீசுக்கு வருபவர்கள் இன்று அதிகம். 

சூப்பர் ஹீரோ

காற்றில் கார்பன் டை ஆக்சைடு அதிகம் என கர்ச்சீபைக் கட்டினால் கூட உங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவா என நக்கல் செய்வார்கள். இவர்களுக்கு பிறக்கும்போதே கடவுள் மரபணுக்களை எஃகில் செய்து அனுப்பியது போல எதுவுமே எனக்கு ஆகாது என சூப்பர் ஹீரோவாக ஆபீசில் சுற்றி வருவார்கள். இவர்களின் பரம்பரையில் வந்தவர்கள்தான் ஹெல்மெட் போட்டால் பூ கசங்கிடும் என புகார் சொன்ன கேட்வுமன்கள். 

தகவல் பெட்டகம்

எகனாமிக் டைம்ஸ் இணைப்பிதழ்களைப் படித்துவிட்டு அடுத்தவர்களை பயப்படுத்துவதே இவர்களுக்குத் தொழில். பொருளாதாரமோ, கொரானோவோ எதாக இருந்தாலும் நெகட்டிவ்வான செய்திகளை மட்டுமே அடுத்தவர்களுக்கு சொல்லுவார்கள். அவர்கள் மிரண்டால் உடனே மேலதிக பீதியை ஊட்டி அவர்களை கழிவறைக்கு அனுப்பி வைப்பார்கள். அரசு சமூக விலகல் என்று கூறுவது இதுபோன்ற செய்தி வாந்தி எடுக்கும் ஆட்களிடமிருந்து விலகியிருப்பதை வேண்டிதான். 

ஈவன்ட் மேனேஜர்கள்

இவர்களுக்கு பேரிடம் மேனேஜர் பணிகளைக் கொடுக்கலாம். ஏதாவது பிரச்னை என்றால் உடனே பக்கத்திலுள்ளஅமுதம் அங்காடி முதல் ஸ்பென்சர் கோ வரை சரக்கு எவ்வளவு உள்ளது, ஆலுபூஜியா பிரெஷ்ஷாக கிடைக்குமா, வெங்காயம் ஆபரில் கிடைக்குமா என ஆராய்ந்து வாங்கி வந்து பதுக்குவார்கள். யாராவது எதுக்கு ப்ரோ? ஊருக்கே அன்னதானம் செஞ்சு பண்ணிப் போடப்போறீங்களா என்று கேட்டால், மூணுவேளையும் சாப்பிடவேண்டாமா? என்று பதில் சொல்லி திடுக்கிட வைப்பார்கள். 

இன்டர்நேஷனல் கலைஞர்கள்

தன்னுடைய சட்டையில் மட்டும் காலர் உயரம் அதிகம் என்பதுபோல திரியும் ஓவியக்கலைஞர்கள் இவர்கள். மற்றவர்கள் எல்லாம் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிப் போகும் அளவு திறமை கொண்டவர்கள் என நம்புவார்கள். டரியலான காப்பிகேட் ஓவியங்களைத்தான் வரைவார்கள். என்னுடைய திறமையைப் பாருங்க வெட்கப்படாம பாராட்டுங்க என கூச்சமே இல்லாமல் பேசுவார்கள். நான் வேலை செய்கிறேன் என்று பேசுபவர்கள் வாரத்திற்கு இரண்டு படம் வரைந்து ஃபேஸ்புக்கில் போட்டு ராட்சச உழைப்பு என்பார்கள். யாரும் பார்க்கலையா? உடனே ஆபீஸ் வாட்ஸ் அப்புக்கு அனுப்பிவிட்டு அத்தனை பேரையும் கூப்பிட்டு கார்டூனை பார்த்தீங்களா என கேட்டு மிரட்டுவார்கள். கபாலீஸ்வரரையே விட்ச் ஹண்டர் லெவலுக்கு திகிலாக வரைந்து பீதியூட்டுவார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். 

பிரபலமான இடுகைகள்