கிறித்துவத்தில் ஒளிந்திருக்கும் தொன்மை மர்மம்! - டாவின்சி கோட்
டாவின்சி கோட்
டான் ப்ரௌன்
எதிர் வெளியீடு
பிரான்சிலுள்ள அருங்காட்சியகத் தலைவர், மர்ம நபரால் கொல்லப்படுகிறார். அவர் சுட்டு கொல்லப்படுவதற்கு முன்பு அவரின் மூன்று நண்பர்களும் அடுத்தடுத்து கொல்லப்பட்டுவிடுகின்றனர். இந்த கொலை கற்சாவி ஒன்றுக்காக நடைபெறுகிறது. இந்த கொலைகளை டீச்சர் என்பவர் வழிநடத்த அரிங்கரோசா என்ற பிஷப்பின் சீடன் சிலாஸ் எனும் அடிப்படைவாதி கொலைகளை செய்கிறான். ஏன் இந்த கொலைகள், கற்சாவி என்பது என்ன? என்பதை விவரிக்கிறது டாவின் கோட்.
நாவல் முழுக்க ஏராளமான கணிதப்புதிர்கள் உள்ளன. கணிதத்தில் 35 மார்க்குகளை எடுத்த ஆட்கள் இந்த நூலை தவிர்ப்பது நல்லது. காரணம், ஏராளமான விஷயங்கள் கணிதம் மூலமாகவே பூடகமாகவே கூறப்படுகின்றன. பிபனாச்சி தொடர்வரிசை, டாவின்சியின் குறியீட்டு முறை, என்கிரிப்ஷன், டீகிரிப்ஷன் என பல்வேறு புதிர்முறைகளை சிறப்பாக அமைத்து அதனை விடுவித்திருக்கிறார் நூல் ஆசிரியர் டான் ப்ரௌன்.
நூலில் புதிராக அமையும் கதாபாத்திரம் அதனை சிறப்பாக வடிவமைத்து இறுதியில் அதனை உடைத்து பிரமிப்பு தருகிறார் ஆசிரியர். முழு நாவலையும் வடிவமைப்பது டீச்சர் எனும் போனில் மட்டும் பாத்திரம்தான். இதில் என்ன நடக்கிறது என உத்தம புத்திரன் படத்தில் வரும் ஆடிட்டர் விவேக் போல மாட்டிக்கொள்கிறார் ஓடஸ் டெய் மதத்தை வாடிகன் போப்பின் ஆதரவில் கொண்டு வர நினைத்து தோல்வியுறுகிறார். காரணம் இம்மதம் சமணம் போன்ற கடுமையான தூய்மை நெறிகளைக் கொண்டது. இதற்கு உதாரணமாக சிலாஸ் கதாபாத்திரம் வருகிறது.
மனதை தூய்மையாக வைத்துக்கொள்ள உடலை வதைத்துகொண்டு உயிர்விடும் பாத்திரம் உண்மையில் யாரையும் ஒரு கணம் திகைக்க வைப்பது. அவரது வாழ்க்கையை சில அத்தியாயங்களில் ஆசிரியர் பகிர்கிறார்.
ராபர்ட் லாங்டன் கதாபாத்திரம் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இறந்துபோகும் கிராண்ட் மாஸ்டர் எழுதும் வார்த்தை அவரை கொலைக்குற்றத்தில் மாட்டிவிட, பிரான்ஸ், இங்கிலாந்து என குறியீட்டியல் துறை அதிகாரியான சோபியாவோடு அலைந்து திரிகிறார். இறுதியில் அவரை மனைவியாகவும் ஏற்கிறார் என்ற செய்தியோடு உண்மையில் தான் தேடியது என்ன என்பதையும் இறுதியில் அடையாளம் காண்பதோடு கதை நிறைவு பெறுகிறது.நாவலில் வரும் பல்வேறு கட்டட விவரணைகள், இடங்கள் அனைத்தும் உண்மை என்பதால் கதை நிஜமா, புனைவாக என நமக்கே திகைப்பு ஏற்படுகிறது.
சிறப்பான அறிவியல் தொன்மை கலந்த சாகச நாவலைப் படிக்கவேண்டுமென விரும்பினால் டாவின்சி கோட் நாவல் அதற்கு உதவும்.
கோமாளிமேடை டீம்