டிஜிட்டல் வரலாற்றை மாற்றி எழுத முடியுமா? - மாட்டிக்கொண்ட விக்கிப்பீடியா
இன்று எந்த தகவல்கள் தேவை என்றாலும் பலரும் சொடுக்குவது விக்கிப்பீடியாவைத்தான். சிலர் இதனை பல்வேறு எடிட்டர்கள் திருத்துவதால் தகவல்கள் சரியாக இருப்பதில்லை என்று பிரிட்டானிகா தகவல் களஞ்சியத்தை நாடுவார்கள். ஆனால் அதிலும் கூட தொன்மையாக தகவல்கள்தான் இருக்கும். நடப்பு சம்பவம், விருதுவாங்கிய நபர் என்றால் விக்கிப்பீடியாவில் எளிமையாக அவர் பற்றி தகவல்களை பதிவிட்டு பக்கங்களை உருவாக்க முடியும்.
தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்களில் இந்துத்துவா குண்டர்கள், போராட்டக்காரர்கள் மீது கடுமையான தாக்குதல்களை நடத்தினர். சிலர் உத்தரப்பிரதேசத்திலிருந்து துப்பாக்கியோடு களத்தில் குதித்து போராட்டக்காரர்கள் மற்றும் காவல்துறையினர் மீது தாக்குதல் தொடுத்தனர். டில்லியில் அண்மையில் தேர்தல் வெற்றியை ருசித்த அரவிந்த் கெஜ்ரிவால் நமக்கு எதற்கு வம்பு என்று போராட்டக்காரர்கள் மீது நடந்த தாக்குதல், முஸ்லீம் வீடுகளை எரித்த சம்பவ இடத்திற்கு கூட வராமல் நடுநிலை காத்தார். நிச்சயம் வரலாறு இதற்காகவே அவரை நினைவுகூரும்.
இந்த வெறுப்புவாத கலவரத்தை தூண்டிவிட்டவர்களில் முக்கியமானவர்கள் அனுராக் தாக்கூர், கபில் மிஸ்ரா, பர்வேஸ் வர்மா, அபய் வர்மா ஆகியோரைக் கூறலாம். அனைத்து ஆட்களும் பாஜகவைச் சேர்ந்த தூண்கள்.
விக்கிப்பீடியாவில் பல்வேறு ஆட்களும் கலவரம் பற்றிய பக்கங்களை உருவாக்கினர். இதில் இடதுசாரிகளும் உண்டு. பாஜகவைச் சேர்ந்த வலதுசாரி ஆட்களும் உண்டு. இந்துத்துவா ஆட்கள், விக்கிப்பீடியாவில் தவறான தகவல் உள்ளது. கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களில் இந்துக்கள்தான் அதிகம் என அவர்கள் காசு கொடுத்து வளைத்த பேஸ்புக், ட்விட்டர் தளங்களில் பிரசாரத்தை வழக்கம்போல் தொடங்கினர். மேலும் கரசேவகர்கள் எப்போதும் போல தகவல்களை திரிக்கத்தொடங்கினர்.
குடியுரிமைச்சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் பற்றி விக்கிப்பீடியாவில் டிச. 12, 2019 அன்று பக்கம் உருவாக்கப்பட்டது. அதில் இதுவரை 2, 642 திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. அதாவது தினசரி 37.6 பேர் இப்பக்கத்தை திருத்தி செய்தியை உண்மையின் உரைகல்லாக மாற்ற முயன்றுள்ளனர்.
நான் எழுதிய செய்தி திரிக்கப்பட்டுள்ளது என்று ஓபிஇந்தியா ஆசிரியர் நுபுர் சர்மா விக்கிப்பீடியாவின் நிறுவனராக ஜிம்மி வேல்ஸூக்கு செய்தி அனுப்பியுள்ளார். ஆனால் உண்மையில் அவர் கூட இந்த கருத்தை மாற்ற முடியாது. அப்படி மாற்றினால் கடுமையான விமர்சனங்களை அவர் சந்திக்க நேரிடும் என்கிறார் ஸ்லாக்கர் 56 என்ற இணையவாசி.
விக்கிப்பீடியா பக்கங்களை திருத்துபவர்களில் 80 சதவீதம் பேர் யாரென்றே தெரியாத அனாமதேய மனிதர்கள்தான். “நாங்கள் புல்வாமா தாக்குதல் பற்றிய பக்கங்களை உருவாக்கினோம். அதில் கூறப்பட்ட தகவல்களை பாகிஸ்தானிய ஆசிரியர்கள் மாற்ற முயன்றனர். ஒருவர் மூன்று முறைக்கு மேல் மாறுதல்களை செய்ய முடியாது என விதிகளை மாற்றியபின்தான் அதில் திரித்தல்கள் குறைந்தன.” என்கிறார் விக்கிப்பீடியா பக்க ஆசிரியர்களில் ஒருவரான கே.சைதன்யா.
விக்கிப்பீடியா சில நடைமுறைகளை கடைப்பிடித்து பக்கங்களை வடிவமைக்கிறது. ஹிட்லர் யூதர்களை கொன்றார் என்பது அனைவரும் அறிந்த செய்தி. ஆனால் அவர் பற்றிய செய்திகளில் அவர் ஒரு சாத்தான் என்பது போன்ற குற்றம்சாட்டும் தொனியை விக்கிப்பீடியா ஏற்பதில்லை. அது அவர் சார்ந்த நாடு, மற்றும் இனம் சார்ந்தும் பிரச்னைகளை ஏற்படுத்தும் என வீக்கிப்பீடியா கருதுகிறது. எனவே, டில்லியில் நடைபெற்ற போராட்டங்கள் சார்ந்த விஷயங்களில் குறிப்பிட்ட இனக்குழுவினர், அங்குள்ள இளம்பெண்களின் உடைகளை அகற்றினர் என்பது போன்ற சர்ச்சை விஷயங்களை கவனமாக அகற்றினர். குறிப்பிட்ட பக்கங்களை வேறு யாரும் மாற்ற முடியாதபடி அதனை இயக்கியுள்ளனர்.
நாதுராம் கோட்சே பிரச்னையிலும் இது உண்டு. அவர் இந்துத்துவ அமைப்பான ஆர்எஸ்எஸ்ஸைச் சேர்ந்தவர் என்றும் அவர் அந்த அமைப்பைச் சேராதவர் என்றும் இருவேறு கூற்றுகள் உள்ளன. எனவே இதுதொடர்பான குழப்பத்தை தீர்ப்பது எளிதல்ல என்கிறார் விக்கிப்பீடியா ஆசிரியர்களில் ஒருவர்.
பாஜகவைச்சேர்ந்த ஐடி ஆட்கள் டிஜிட்டல் உலகிலும் வரலாற்றை மாற்றி திரித்து எழுத தொடங்கியுள்ளனர். இதற்கு அனுமதிக்காத நிறுவனங்களை உடனே போலிச்செய்தி தளம் என்று முத்திரை குத்தி, அவர்களை அடித்து நொறுக்க குண்டர்களையும் தயாரிக்க தொடங்கியுள்ளனர். இந்த ஆபத்தான போக்கு சர்வாதிகாரத்தையே இந்தியாவில் கொண்டுவரும்.
நன்றி - டைம்ஸ் மார்ச் 14, 2020 ரேச்சல் சித்ரா