பழச்சாறு vs ஸ்மூத்தி Vs கார்பன் பானங்கள் எது சிறந்தது?
pixabay |
உடனுக்குடன்
பிழியப்பட்ட பழச்சாறு, பழத்திலிருந்து எடுக்கப்பட்ட கான்சென்ட்ரேட் என இரண்டு இருக்கிறது.
இவற்றில் எது நல்லது?
இரண்டிலும்
வித்தியாசம் ஏதுமில்லை. கான்சென்ட்ரேட்டில் கூடுதலாக சர்க்கரை சேர்க்கப்படுகிறது. அதாவது
ப்ரக்டோஸ். இது கலோரி அளவைக் கூட்டுகிறது. இது சிறுவர்களின் பற்களை பெருமளவு பாதிக்கிறது.
பெப்சி, கோலா இவற்றைவிட பழரசம் சிறப்பானது என நினைப்பீர்கள். ஆனால் பழரசத்தில் சர்க்கரை
அளவை குறைத்துக்கொண்டால் மட்டுமே நீரிழிவு போன்ற பிரச்னைகளிலிருந்து நீங்கள் தப்பிக்க
முடியும். இல்லையெனில் நீரிழிவு பிரச்னை பெரியவர்களுக்கு மட்டுமல்ல ப்ரூட்மிக்ஸ் குடிக்கிற
சிறுவர்களுக்கும் வந்துவிட வாய்ப்பு உள்ளது.
பழங்கள்,
காய்கறிகளை கலந்து செய்யும் ஸ்மூத்தி பழச்சாறுகளுக்கு நல்ல மாற்று என்பதில் சந்தேகமில்லை.
ஆனால் இவற்றை கவனமாக தயாரிக்கவேண்டும். ஒவ்வொரு பழங்களுக்கும் உள்ள தன்மையைப் பொறுத்தே
அவற்றை ஒன்றாக சேர்க்கவேண்டும். இவற்றைக் குடித்தபின் வாயை நன்கு கொப்பளிக்க வேண்டும்.
இல்லையெனில் இதிலுள்ள இயற்கையான சர்க்கரையும் கூட பற்களை பாதிக்கும் வாய்ப்பு உள்ளது.
பழச்சாறுகளையோ,
ஸ்மூத்திகளையோ நாம் உண்ணும் உணவுக்கு மாற்றாக கருதக்கூடாது. உணவோடு கூடுதலாக அதனை எடுத்துக்கொள்ளலாம்.
இல்லையெனில் விரைவிலேயே பசி அகோரமாக எடுக்கும். நடிகைகள் இப்படி சாப்பிட்டாலும் இதற்கு
இடையில் அவர்கள் உணவு சாப்பிடுவார்கள் என்பதை மறக்காதீர்கள். டயட்டிற்கான முயற்சியாக
இதனை செய்தாலும் உணவுகளை உடலுக்கு முதலில் பழக்கப்படுத்திய பிறகே பழச்சாறுகளையும்,
ஸ்மூத்திகளையும் சாப்பிடத் தொடங்க வேண்டும்.
காய்கறிகளிலிருந்து
கிடைக்கும் பைடோகெமிக்கல்ஸ் இதில் நிறைய கிடைப்பதால், ஸ்மூத்தி டயட்டிற்காக நல்ல சாய்ஸ்.
கார்பன்
பானங்கள்
மூடியைத்
திறக்கும்போது வரும் ஸ்ஸ்.. சவுண்ட் இளைஞர்களுக்கு கிக் தரும் ஒன்று. அதனால் இளைஞர்களுக்கான
பானம் என பெப்சி தன்னுடைய கார்பன் பானங்களை விளம்பரம் செய்து விற்கிறது. இன்று உலகம்
முழுக்கவே கார்பன் பானங்கள் என்பது உணவு வகைகளில் ஒன்றாக மாறிவிட்டது.
கல்யாணம், காதுகுத்து என்று எங்கு சென்றாலும் தண்ணீர்
கொடுக்கிறார்களோ இல்லையோ ஃபேன்டா, மிராண்டா கொடுத்துத்தான் வரவேற்கிறார்கள். பெப்சி,
கோலா போன்றவை விஸ்கி, பிராந்திக்கு நண்பனாகி வெகு ஆண்டுகளாகின்றன. இவற்றில் என்ன இருக்கிறது
என நினைக்கிறீர்கள்? நீரும், சர்க்கரையும்தான். இதில் கார்பன் டை ஆக்சைடு பாட்டிலை
சீல் செய்யும்போது சேர்க்கிறார்கள். அதனால்தான் ஃப்ரிட்ஜிலிருந்து எடுத்து உடைக்கும்போது
வாயு சீறி, நம் தேநீர் சட்டையைக் கூட சடுதியில் நனைத்து விடுகிறது. கூலிங் போக போக
வாயுவின் சீற்றம் அதிகமாகும்.
சாதாரணமாக
கார்பன் பானங்களில் உள்ள சர்க்கரை அளவுதான் உடல்பருமனுக்கு காரணமாக இருக்கிறது. ஆனால்
இதனை வெளியில் சொல்ல முடியாது. கோலா நிறுவனங்களின் செல்வாக்கு லாபி உலக நாடுகளின் எல்லை
தாண்டியது. இவர்களே பல்வேறு ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு காசு கொடுத்து உடலுக்கு உற்சாகம்
அளிக்கிறது, ஊக்கமூட்டுகிறது என ஆய்வுகளைச் செய்து வெளியிட்டுக்கொள்வார்கள்.
கோலா
பானங்களில் 7 முதல் 12 சதவீதம் சர்க்கரை சேர்க்கப்படுகிறது. டயட் கோலா, பெப்சி பானங்களில்
சர்க்கரை நீக்கப்பட்டு அதற்கு நிகரான செயற்கை இனிப்பூட்டிகள் சேர்க்கப்படுகின்றன. இந்த
பானங்களில் உள்ள பகுதிப் பொருட்களில் பெரிய மாற்றங்களை கம்பெனிகள் செய்வதில்லை. ஆனால்
இவற்றின் பாட்டில்கள் கண்டங்களுக்கு கண்டம் மாறுபடும். பெரும்பாலும் பெண்களின் உடல்
அமைப்பு போன்ற வடிவத்தில் கோலா பான பாட்டில்கள் உருவாக்கப்படுகின்றன. இதன் உயரம் என்பது
இந்தியாவுக்கும், சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் மாறுபடும். விற்கும் பகுதியிலுள்ள
மனிதர்களின் உயரங்களுக்கு ஏற்ப பாட்டில்கள் உருவாக்கப்படுகின்றன. அனைத்து நாடுகளிலும்
ஒரே கலாசாரம், ஒரே உணவு என்பதே இந்த பன்னாட்டு குளிர்பான நிறுவனங்களின் ஒரே நோக்கம்.
லட்சியம் கூட.
சோடா
முதலில் கண்டறியப்பட்டபோது ஒயின் மற்றும் கோகைன் ஆகியவற்றோடு கலந்து பயன்பட்டது.
1886ஆம் ஆண்டு சோடாவை ஒயினோடு கலந்து விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது. பின்னர்,
சோடாவில் கோகைனின் பயன்பாடு 1904ஆம் ஆண்டு வரை நீடித்தது. அதற்குப்பிறகு சோடாவை பருகுபவர்கள்
கோகைனின் தன்மையால் அதற்கு அடிமையாகத் தொடங்கினர். இதனால் பல்வேறு உலக நாடுகள் சோடாவில்
கோகைனைக் கலந்து பயன்படுத்த தடை விதித்தனர்.
தொடக்க
காலத்தில் சோடாவை விற்பனைக்கு எடுத்துச்செல்லும் வாகனங்களில் ஆபத்தான பொருள் கவனம்
என வாசகங்கள் எழுதப்பட்டு இருந்தன.
நன்றி: ஹவ் இட் வொர்க்ஸ் இதழ்