தவறுகளை ஒழிக்க உருவான புராண நாயகன் - வீரபோக வசந்த ராயுலு!
வீரபோக வசந்த ராயுலு - தெலுங்கு
இயக்கம் - இந்திரசேனா
இசை மார்க் கே ராபின்
ஒளிப்பதிவு நவீன் யாதவ், எஸ்.வெங்கட்
மூன்று கதைகளைக் கொண்ட படம். படம் முடிவில் ஆச்சரியமான முடிவு கிடைக்கிறது. இதுதான் படத்தை இப்படி ஒரு படமா எனவும், குழப்பறாங்கப்பா எனவும் சொல்ல வைக்கிறது.
வெவ்வேறு காலகட்டங்களில் நடைபெறும் கதை. முதல் கதையில் ஆதரவற்றோர் காப்பகங்களில் உள்ள பெண்குழந்தை காணாமல் போகிறது. போலீசார் வழக்கை அலட்சியமாக கையாள்கின்றனர். இந்த வழக்கை தீவிரமாக எடுத்துக்கொண்டு காப்பக உரிமையாளர் டாக்டர் செயல்பட திடீரென அவர், கடத்தல் கும்பலால் கொல்லப்படுகிறார். அதில் மிஞ்சுவது செஸ் பிளேயராக உள்ள டாக்டரின் மகன்தான். சிறுவன் என்ன செய்ய முடியும்?
அடுத்த கதை - ஒரு பதினைந்து வயது சிறுவன், காவல்நிலையத்தில் தன் வீட்டைக் காணோம் என்று புகார் செய்கிறான். என்னடா இது புது விஷயமாக இருக்கிறதே என சப் இன்ஸ்பெக்டர் விசாரிக்கிறார். அப்போதுதான் குழந்தைகளை கடத்துவது தெரிய வருகிறது. இதற்கிடையில் கடத்தல் குழுவைச் சேர்ந்தவரை சுட்டுக்கொன்று தலைவரை நெருங்கும்போது, சப் இன்ஸ்பெக்டரின் தந்தை தற்கொலை செய்துகொள்கிறார்.
மூன்றாவது கதை - விஐபிகள் சென்ற விமானம் காணாமல் போகிறது. அதை நான் கடத்தி விட்டேன் என ஒருவர் போன் செய்து மிரட்டுகிறார். குற்றவாளிகளை நீங்கள் கொன்றுவிட்டால் விமானத்தை விட்டுவிடுகிறேன் என்கிறார். உண்மையில் அவர் விமானத்தை கடத்தவில்லை என்று அரசுக்கு தெரிய வருகிறது. அப்போதுதான் அவர் குற்றவாளிகளை பிடித்து வைத்து மிரட்டுவது தெரிகிறது. அத்தனை பேர்களையும் எரித்து கொல்கிறார். ஏன் அப்படி என்பதற்கு நீங்கள் கண்டிப்பாக படம் பார்க்கவேண்டும்.
ஆஹா
கொஞ்சம் சமூகம், நிறைய ஃபேன்டசி என படம் எடுத்துள்ளார் இயக்குநர். காலகட்டத்தைப் பற்றி பேசுவதில் தடுமாறிவிட்டார். மற்றபடி நடித்த நடிகர்கள் அனைவரும் நன்றாக நடித்துள்ளனர். மோசம் இல்லை.
ஐயையோ
காலகட்ட குழப்பம்தான் முக்கியமானது. இறுதியில் மூன்று கதைகளும் ஒன்றாக இணையும் புள்ளி சரியாக இல்லை. ஏமாற்றமே மிஞ்சுகிறது. இயக்குநர் நிறைய பரிசோதனை முயற்சிகளை செய்திருக்கிறார். ஆனால் அதனை இன்னும் செம்மைப்படுத்தி இருக்க வேண்டும்.
பரிசோதனைப் படம்!
கோமாளிமேடை டீம்