காவிமயப்படுத்தலையும், ஊழல்களையும் எதிர்த்ததால் தேசவிரோதி ஆகிவிட்டேன்!





Image result for brijesh kumar iit guwahati
brijeshkumar/edexlive




நீதிவெல்லும் என்ற நம்பிக்கை எனக்குண்டு!


பிரிஜேஷ் குமார், உதவிப் பேராசிரியர்.


பிரிஜேஷ்குமார், ஐஐடி குவகாத்தியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். 2011ஆம் ஆண்டிலிருந்து மின் மற்றும் மின்னணு பொறியியல் துறையில் பணி. இவர் கற்பித்தலுக்காக உலகிற்கு தெரியவரவில்லை. தனது மேலதிகாரிகள் ஐஐடியில் செய்த பல்வேறு ஊழல்கள் முறைகேடுகளை வெளியே சொல்லி உலகம் அறிய வைத்தார். அதற்காகவே பிரிஜேஷ் பெயர் அனைவராலும் கூறப்பட்டது.

உண்மையைப் பேசினால் சாதாரண மனிதருக்கு என்ன ஆகும் என்பதற்கு பிரிஜேஷ் மிகச்சிறந்த உதாரணம். நிர்வாகத்திற்கு எதிராகவும், அதில் செல்வாக்கு உள்ள மனிதர்களைப் பகைத்துக்கொண்டதால் அவர் தான் தங்கியுள்ள இடத்தை விட்டு உடனே காலி செய்துகொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறார். மேலும் அவரது பணியிலிருந்து கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கும் மேலாக அவருக்கு மன உளைச்சல் அளிக்கும்படியாக, அவர்மீது காவல்துறையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஐஐடியில் பெருகும் ஊழல், அங்கு அதிகரித்து வரும் இந்துத்துவ நடவடிக்கைகள் பற்றி பேசினோம்.

ஐஐடி நிர்வாகம் உங்கள் மீது வழக்கு பதிந்துள்ளது. இந்த நடவடிக்கைகளை நீங்கள் எப்படி எதிர்கொள்ளப் போகிறீர்கள்?

வழக்கு பற்றி விவரங்கள் எனக்கு கிடைத்தபோது நான் பனாரசில் இருந்தேன். அதாவது ஜனவரி 3அன்று எனக்கு வழக்கு பற்றிய விவரங்கள் கிடைத்தன. அதற்கு அடுத்தநாள் எனக்கு நிர்வாகம் அனுப்பிய மின்னஞ்சலில் நான் என் குடியிருப்பை காலி செய்து தரவேண்டும் என கூறப்பட்டிருந்தது. இந்த உளவியல் ரீதியான மனநெருக்கடி மூலம் நான் தவறுகளை செய்வேன் என நிர்வாகத்தினர் நினைத்தனர். நான் என்மீது தொடரப்பட்ட வழக்கிற்கு எதிராக பிணை பெற்றுள்ளேன். விரைவில் இதுதொடர்பான விசாரணை நடைபெற உள்ளது.

உங்கள் மீது தொடரப்பட்ட வழக்கு பற்றி சொல்லுங்கள்.

ஐஐடியைச் சேர்ந்த அதிகாரிக்கு நான் மிரட்டல் கடிதம் எழுதியிருப்பதாக வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால் அதில் உள்ள கையெழுத்து என்னுடையதில்லை. அதனை போலியாக பதிவு செய்து மிரட்டல் கடிதத்தை திறமையாக உருவாக்கியுள்ளனர். குறிப்பிட்ட அதிகாரி பற்றி நிறுவனத்தில் எந்தி நல்லபெயரும் கிடையாது. பல்வேறு ஊழல் விவகாரங்களில் பேசப்பட்டு வருபவர். நிறுவனத்தின் போர்டு கூட்டங்களில் எந்த அழைப்புமின்றி கலந்துகொண்டு வருகிறார். அவர்தான் இதற்கு பின்னால் உள்ளார் என்று எனக்குத் தெரியும்.

ஐஐடி மாதிரியான நிறுவனங்கள் ஊழல் என்பது பெரிய விஷயமல்ல. ஆனால் நீங்கள் எப்படி ஊழல் நடைபெறுவதைக் கண்டுபிடித்தீர்கள்?

2012 ஆம் ஆண்டு நிறுவனத்திற்கு வாங்கிய ஸ்டாக்குகளை பற்றி கணக்குகளை சோதித்தேன். அதில் பத்து கோடி ரூபாய்க்கு பொருட்களை வாங்கியதாக கூறப்பட்டிருந்தது, கருவிகள், கணினி, பிளாப்பிகள் என எந்த பொருட்களும் பயன்பாட்டுக்கு வரவில்லை. ஏழைநாடான இந்தியாவில் பத்து கோடி ரூபாய் என்பது சாதாரண பணமா? இதேயளவு பணத்தை புற்று நோயாளிகளுக்கு செலவழித்தால் நிறையப் பேரை பிழைக்க வைக்க முடியுமே என்றுதான் நான் யோசித்தேன். இந்த தகவல்களை யாரிடம் சொல்லுவது என்று நெனக்கு புரியவில்லை. இந்த பிரச்னை இந்த ஒரு துறையில் மட்டுமல்ல. பல்வேறு துறைகளிலும் பரவி வருகிறது.  ஊழல் செய்து மக்கள் வரிப்பணத்தை கொள்ளையடிப்பதில் அனைத்து அதிகாரிகளும் ஒற்றுமையாக செயல்படுகிறார்கள்.

2017 ஆம் ஆண்டு நீங்கள் ஐஐடியில் நடைபெற்ற பணியிடங்களில் ஊழல் நடைபெறுகிறது என்று கூறியுள்ளீர்கள். இதற்கு எதிர்வினையாக ஐஐடி நிர்வாகம் உங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டுள்ளதே?


2017ஆம் ஆண்டு ஐம்பது பேர் ஐஐடியில் நியமனம் செய்யப்பட்டார்கள். இவர்களின் நியமனம் இஸ்ரோ நிறுவனத்தோடு தொடர்புடையது என்பதோடு இந்த பணியிடங்கள் அரசின் விதிமுறைகளுக்கு விரோதமாக செய்யப்பட்டது. நியமிக்கப்பட்ட ஐம்பது பேர்களும் தலா பத்து லட்சம் கொடுத்து பணியில் சேர்ந்ததாக கூறப்பட்டு வந்தது. நான் இதுபற்றி தகவல்களை சேகரித்தபோது இச்செயல்பாட்டில் பல்வேறு முரண்பாடுகள் நிலவி வந்ததை அடையாளம் கண்டேன். 2011-12 ஆண்டு தொடங்கியே இந்த முரண்பாடுகள் இங்கு நடைபெற்று வருகின்றன. இம்முறையில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த 200 பேர் பணம் கொடுத்து பதவியைப் பெற்றுள்ளனர். இஸ்ரோ வெளியிட்ட பணியிடத்திற்கான விதிகளை சற்று தளர்த்தி ஊழல் நடைபெற்றுள்ளது.

தற்போதைய இயக்குநர் டி.ஜி. சீதாராம் மீது ஊழல் புகாரை நீங்கள் எழுப்பியுள்ளீர்கள். இப்போதுதான் ஊழல் என்பது இங்கு இருக்கிறதா? அல்லது காங்கிரஸ் ஆட்சியின்போதே ஊழல் பெருமளவு நடந்து வந்ததா?

ஊழல்களுக்கு கட்சி பேதம் கிடையாது. ஆனால் சீதாராம் ஆர்எஸ்எஸ் கருத்தியல் கொண்டவர். பிரதமருக்கு தனிப்பட்ட யோகா ஆசிரியராக இருந்தவர். இவர் தனது அரசு குடியிருப்பை மட்டும் இருபது லட்சம் செலவிட்டு புதுப்பித்தோடு தேவையின்றி ஏராளமான நாற்காலிகளை மேசைகளை அரசு பணத்தில் வாங்கியுள்ளார். மேலும் இந்த ஊழல்களைப் பற்றி குடியரசுத்தலைவர், பிரதமர் என பலருக்கும் கடிதங்களை எழுதியுள்ளேன். ஆனால் எவரும் எதையும் கண்டுகொள்ளக்கூடாது என்ற முடிவில் இருக்கின்றனர். இன்று அரசு அமைப்பில் நடைபெறும் ஊழல்களைப் பற்றி பேசினால் தேசவிரோதி, கம்ப்யூனிஸ்ட் என்கிறார்கள். ஆர்எஸ்எஸ் விழாவில் கலந்துகொள்கிறவர்கள் தேசியவாதி, தேசப்பற்று உடையவர் என போற்றுகிறார்கள்.

இந்தியாவிலுள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் காவிமயப்படுத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது. ஐஐடி குவகாத்தி எப்படி செயல்படுகிறதுழ

பிற கல்வி நிறுவனங்களைப் போலத்தான் இந்த நிறுவனமும் உள்ளது. இந்த மாற்றங்களை எதிர்க்கும் என் போன்றவர்களை தேசவிரோதி என்றும் கம்ப்யூனிஸ்ட் என்றும் முத்திரை குத்தி பல்வேறு இடையூறுகளை, மன உளைச்சல்களை ஏற்படுத்துகின்றனர். நான் செய்யும் பணி பற்றி கேட்டால் நான் விளக்கம் தர தயாராக இருக்கிறேன். என்னுடைய கருத்தியல் பற்றி கேள்வி எழுப்பப்படுவது வித்தியாசமாக இருக்கிறது. அதற்கும் நான் இவர்கள் மீது எழுப்பிய புகார்களுக்கும் என்ன தொடர்பிருக்கிறது?

கல்லூரி வளாகத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர் சிவன் கோவிலைக் கட்டினார். அதற்கான அனுமதி யாரிடம் பெறப்பட்டது, கட்டுமானத்திற்கான நிதி ஆகிய விஷயங்கள் பரம ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. தொழில்நுட்ப மையம் கற்பித்தலுக்கு கவனம் செலுத்தவேண்டும். எதற்கு கோவில் கட்டுகிறீர்கள் என்று நிர்வாகத்திடம் கேட்டேன். உடனே அவர்கள் என்னை இந்துவுக்கு எதிரானவன் என்று முத்திரை குத்தி தனிமைப்படுத்த தொடங்கினர்.

பிரம்மபுத்திரா ஆற்றைக் கடந்தால் காமகியா கோவில் உள்ளது. அதுமட்டுமன்றி இங்கு ஏராளமான கோவில்கள் உள்ளன. பக்தர்கள் அங்கு செல்ல முடியுமே? எதற்கு கல்வி மையத்தில் கோவில். அது பல்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் படிக்கும் மையத்தை பிளவுபடுத்துமே என்று கூறினால் நிர்வாகத்தினர் கோபமுறுகின்றனர். கோவிலுக்கு எதிராக 2019இல் தகவல்களைத் திரட்டி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளேன்.

உங்களது குடும்பம் உங்களது செயல்பாட்டை எப்படி பார்க்கிறார்கள்? ஐஐடி நிர்வாகத்தின் நடவடிக்கை உங்களை பாதித்துள்ளதா?

எனது நற்பெயருக்கு களங்கம் விளைவித்து மன உளைச்சல் ஏற்படுத்தும் முயற்சிகளை செய்து வருகிறார்கள். ஆனால் நீதி வெல்லும் என்ற நம்பிக்கை எனக்குண்டு. மேலும், நான் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவன்தான். மிகவும் கஷ்டப்பட்டு படித்து முன்னேறி வந்தவன். என் பெற்றோர் ஆசிரியர் பணி புனிதமானது என்று கூறி என்னைப் படிக்க வைத்தனர். நான் அதனைப் பின்பற்றி வருகிறேன். என் மாணவர்களுக்கு இதைப் பற்றி வலியுறுத்தி வருகிறேன்.

என் மீது அவதூறு ஏற்படுத்தும் சீதாராமை நீதிமன்றத்தில் சந்திப்பேன். அதில் எந்த சந்தேகமும் இல்லை.

நன்றி – சயின்ஸ் வயர் கௌரவ் தாஸ்