மகளைப் பாதுகாக்க போதை மாபியாவோடு போராட்டம்! - ஹோம் ஃபிரன்ட்
ஹோம்ஃபிரன்ட் -2013 ஆங்கிலம்
இயக்கம் ஹோம் ஃபிளெடர்
திரைக்கதை சில்வஸ்டர் ஸ்டாலோன்
மூலம் - ஹோம்ஃபிரன்ட் - சக் லோகன்
ஒளிப்பதிவு தியோ வான் டி சாண்டே
இசை மார்க் இஷாம்
அமெரிக்காவில் போதை கும்பலை பிடிக்கும் ஏஜெண்டாக இருக்கும் போலீஸ்காரர், தனது ஆபரேஷன் ஒன்றில் தோல்வியைத் தழுவ அதன் விளைவாக ஒரு உயிர் பலியாகிறது. இதன் விளைவாக, தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தன் செல்ல மகளோடு அமைதியாக சிறு நகரம் நோக்கி சென்று வீடுகட்டி வாழ்ந்து வருகிறார். ஆனால் அங்கும் அவரை சீண்டுகிற சூழ்நிலை திரும்ப அவரை துப்பாக்கி எடுக்க வைக்கிறது. அவரது மகளைக் காப்பாற்ற இதைச் செய்கிறார். இம்முறை பழைய பகையோடு உள்ளூர் எதிரிகளும் கைகோக்க என்னவானது போலீஸ்காரரின் நிலை மை என்பதுதான் படம்.
ஆஹா
ஜேசன் ஸ்டாதம் பிரமாதப்படுத்தியிருக்கிறார். தன்னால் ஒரு உயிர் அநியாயமாக போனதை நினைத்து வேலையை விட்டு விலகியவர். மகளுக்காக அமைதியாக வாழ்கிறார். ஆனால் மகளுக்கு சொல்லிக் கொடுத்த தற்காப்புக்கலை அவருக்கு உள்ளூர் பகையை வலுவாக்குகிறது. கோபம், பொறுப்பு, வெறுப்பு, வன்மம், மகிழ்ச்சி என அனைத்திலும் அடக்கி வாசித்திருக்கிறார். இதனால் வெறித்தனமான ஃபைட், எழுச்சியாக்கும் காதல், நடுங்க வைக்கும் வில்லன் என்ட்ரி எல்லாம் கிடையாது. ஜேம்ஸ் ஃபிராங்கோ உள்ளூர் போதை மாஃபியாக நடித்திருக்கிறார். தனது நன்மைக்காக காதலி, அக்கா என யாரைப் பற்றியும் கவலைப்படாத கதாபாத்திரத்தில் வஞ்சகமான புன்னகையோடு பின்னுகிறார்.
ஐயையோ
டீச்சர் கதாபாத்திரம் உள்ளூர் மக்கள் பற்றிய எச்சரிக்கை மட்டுமே தருகிறதே தவிர கதையை நகர்த்திச்செல்ல பயன்படவில்லை. வீட்டுக்குள் ஒருவர் வந்துவிட்டு போனதை சாதாரண ஆட்கள் தெரியாமல் இருக்கலாம். போலீசாக இருப்பவர் எப்படி அறியாமல் போகிறார். வேற்று ஆளின் வாடை தெரிந்து குதிரை கூட மிரள்கிறது. ஆனால் ஜேசன் அமைதியாக இருக்கிறார். இதெல்லாம் படத்தின் வேகத்தைக் குறைக்கிற சமாச்சாரங்கள். குழந்தைகளின் முன்னே ஒருவரின் கடவாயை அடித்து உடைத்துவிட்டு உயிர் பிழைத்துப்போ என்கிறார் நாயகன். வன்முறையே குழந்தைகளின் மனதில் பாதிப்பை ஏற்படுத்துமே. அதை பார்க்காதவாறு செய்திருக்கலாம்.
கோமாளிமேடை டீம்