ஆயுளை நீட்டிக்க நாய்கள் உதவும்!
ஆயுளை நீட்டிக்க நாய்கள் உதவும்!
சாகாவரம் என்ற வார்த்தையின் மீது ஆசைப்படாதவர்கள் யார்? இந்த மாத்திரையை சாப்பிடுங்கள். நோயின்றி இருபது ஆண்டுகள் வாழலாம் என ஒரு மாத்திரையை டிவி சேனலில் விளம்பரம் செய்தால் நொடியில் அவை விற்றுத தீர்ந்துவிடும். காரணம், உயிர்வாழும் ஆசைதான். தற்போது, ஆயுளை நீட்டிப்பதற்கான ஆராய்ச்சியில் மனிதர்களோடு நெருக்கமாக வாழும் நாய்களை ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். பல்லாயிரம் ஆண்டுகளாக நாய் இனம், நம்முடன் இணைந்து வாழ்ந்து வருகின்றன. அவற்றுக்கு வயதாவது மனிதர்களை விட வேகமாக நடக்கிறது. இந்த ஆராய்ச்சி மூலம் அவற்றுக்கும், மனிதர்களுக்கும் வயதாவது பற்றிய வேறுபாடுகளைப் புரிந்துகொள்ளலாம் என ஆராய்ச்சியாளர்கள் எண்ணுகிறார்கள்.
அமெரிக்காவில் நாய்களின் வயது பற்றிய ஆராய்ச்சி நடைபெற்றது. இதில் 80 ஆயிரம் நாய்கள் ஈடுபடுத்தப்பட்டன. ”நோய்களை குணப்படுத்துவதற்கு நாம் முயற்சிப்பது நமது ஒட்டுமொத்த ஆயுளைக் குறைத்துவிடுகிறது. புற்றுநோய், இதயநோய், ஆகிய நோய்கள் ஏற்பட்டால் ஒருவர் அதிக நாட்கள் வாழ்வது கடினம். நாம் வயதாவதைத் தடுக்க உடலின் மூலக்கூறுகள் மீது கவனம் கொள்ளவேண்டும்” என்கிறார் நாய்களை ஆராய்ச்சி செய்து வரும் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் மேட் கேப்ரியலின்.
300க்கும் மேற்பட்ட நாய்களின் உரிமையாளர்களிடம் அவற்றின் உணவுப்பழக்கம், வாழ்க்கை முறை பற்றிய ஆய்வு நடத்தப்பட்டது. ”நாய்கள் பொதுவாக நம்மைப் போன்ற சூழலில்தான் வாழ்கின்றன. காற்று மாசுபாடு, ஒலி மாசுபாடு, சாப்பிடும் பழக்கம் என பலவும் பெரியளவில் மாறுபடாததால் இந்த ஆய்வு மனிதர்களுக்கும் பொருந்தும்” என்கிறார் நாய் ஆராய்ச்சி திட்டத்தின் துணை தலைவரான பேராசிரியர் டேனியல் பிராமிஸ்லோ. நாய்களுக்கு மனிதர்களை விட பத்து மடங்கு வேகத்தில் வயதாகிறது. மனிதர்களின் நாற்பது ஆண்டுகளை அவை நான்கு ஆண்டுகளில் அடைந்துவிடுகின்றன. மனிதர்களுக்கு ஏற்படும் புற்றுநோய், சிறுநீரகப் பிரச்னைகள், குடல் பிரச்னைகள், மனப்பதற்றம் ஆகியவையும் நாய்களுக்கு ஏற்படுகின்றன என்கின்றனர் ஆய்வாளர்கள்.
2007ஆம் ஆண்டு சயின்ஸ் இதழில், 143 நாய் இனங்களைப் பற்றி மரபணு ஆராய்ச்சி செய்தி வெளியானது. இதில் உள்ள IGF1 மரபணு, நாய்களின் வளர்ச்சி, வாழ்நாள் அதிகரிப்புக்கு உதவியது தெரிய வந்தது. மனிதர்களின் செல்களிலும் இந்த மரபணு உள்ளது. இதைப் பற்றியும் ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது.
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு வழங்கப்படும் ராபமைசின் என்ற மருந்தை, வாழ்நாள் அதிகரிப்பிற்காக 500 நாய்களுக்கு கொடுத்து சோதித்து வருகின்றனர். இம்மருந்து செல்களிலுள்ள மைட்டோகாண்டிரியா பாதிப்படைவதைக் குறைக்கிறது. இதனால் உடல் வயதாவது தடுக்கப்படுகிறது. மற்றொருபுறம், ஹார்வர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் வைரஸை நாயின் உடலில் செலுத்தி அதன் வயது அதிகரிப்பதை குறைக்க முயன்று வருகிறார்கள். உயிரியல் ரீதியான இந்த ஆராய்ச்சி நமக்கு எதிர்காலத்தில் பயன்களைத் தரக்கூடும்.
தகவல்: பிபிசி சயின்ஸ்ஃபோகஸ்
கருத்துகள்
கருத்துரையிடுக