ஸ்மார்ட் சிட்டி வசதிகளை பெரு நகரங்கள் அடைந்தால் .......

 

 

Smart, City, Communication, Network, Skyline, Night
cc

 

 

 

தற்போது 50 சதவீத மக்கள் நகரங்களில் வசிக்கிறார்கள். 2100ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 80 சதவீதமாக அதிகரிக்கும். ஸ்மார்ட் சிட்டி வசதிகளை பெரு நகரங்கள் அடைந்தால் என்னென்ன விஷயங்கள் மேம்படும் என்பதைப் பார்ப்போம்.

போக்குவரத்து நெரிசல்

இப்போது சீனாவில் தெரு விளக்குகள் ஏறத்தாழ மக்களைக் கண்காணிக்கும் சென்சார்களைக் கொண்டுள்ளன. இதே பாணியில் நகரங்களில் ஏற்படும் விபத்துகள், போக்குவரத்து நெருக்கடி ஆகியவற்றை பதிவு செய்து தலைமை கணினிக்கு அனுப்பும் வசதி உருவாகியிருக்கும். எனவே விபத்து ஏற்பட்டால் யாரும் போன் செய்யாமலேயே உதவிகள் கிடைக்கும். போக்குவரத்து நெருக்கடிகளை விரைவில் தீர்க்க காவல்துறையினரும் அங்கு வருவார்கள் அல்லது அதனை தீர்க்க ரோபோக்கள் செயல்பாட்டுக்கு வரும்.

வண்டி நிறுத்தங்கள்

வண்டி நிறுத்தங்கள் எங்கே உள்ளன என்பதை திறன்பேசி செயலி மூலம் அறிய முடியும். இதனால் இடத்தை தேடி அலையாமல் திறன்பேசி மூலமே இருந்த இடத்திலேயே அறியலாம். இதனை தெருவிளக்கில் பொருத்தப்பட்ட ரேடார்கள் கண்காணித்து இத்தகவலை திறன்பேசியிலுள்ள செயலிக்கு அனுப்புகிறது.

மக்கள் சக்தி

இதன் அர்த்தம் அவர்கள் நிறைய இடங்களில் போராட்டம் நடத்துவார்கள் என்பதல்ல. மக்கள் நடக்கும் நடைபாதை, சுரங்கப்பாதை ஆகிய இடங்களில் நடக்கும் போது ஏற்படும் உராய்வு சக்தியை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் ஏற்பாடுகளை அரசு - தனியார் நிறுவனங்கள் இணைந்து செய்யும். இதன்மூலம் மின்சாரத்திற்கு நாம் வேறு ஆற்றல் மூலங்களை நம்பியிருக்கும் அவசியம் இல்லை. மைதானங்களிலும் இதுபோல ஏற்பாடுகள் செய்யப்படும். இதனால் மைதானத்தில் ஒளிரும் விளக்குகளுக்கான மின்சாரம் அதிலிருந்து கிடைக்கும்.

ஆற்றல் அனைத்திலும்....

மக்கள் பணிபுரியும் கட்ட டங்களிலும், சாலைகளிலும், நடைபாதைகளிலும் கூட போட்டோவோல்டிக் கோட்டிங் இருக்கும். இதன் மூலம் சூரிய ஆற்றலை சேமித்து மின்னாற்றலாக மாற்ற முடியும். சொல்லும்போது ஷங்கர் படத்தின் காட்சி போல ஃபேன்டசியாக தெரியலாம். ஆனால் சாத்தியம்தான்.

விளம்பர பலகை

பார்க்க விளம்பர பலகை போன்ற தோற்றத்தில் இருந்தாலும் காற்றிலிருந்து நீர் மூலக்கூறுகளை எடுக்கும். கூடவே கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சும். சூரிய ஒளியிலிருந்து புற ஊதாக்கதிர்களை உறிஞ்சும். கார்புகையிலிருந்து நைட்ரஜன் ஆக்சைடு, டைட்டானியம் ஆக்சைடு ஆகியவற்றை தனியாக பிரிக்கும்.

ரோபோ எந்திரன்கள்

காவல்துறைக்கு போன் செய்து உதவிகளை கேட்டால் ரோபோக்கள்தான் இனி உதவிக்கு வரும். துபாயில் ரோபோகாப்கள் பணிக்கு வந்துவிட்டன. இனி பல்வேறு நாடுகளுக்கும் இந்த காவலர்கள் துப்பாக்கியுடன் வலம் வருவார்கள். முகமறிதல் விஷயத்தை அவர்களுக்கு முன்னமே கோடிங் மூலம் ஏற்றிவிட்டால் பிரச்னை ஏற்படுத்தும் ரோமியோக்கள், பார்முலா 1 பந்தயத்திற்கு காமராஜர் சாலையில் பயிற்சி எடுப்பவர்கள் ஆகியோரை எளிதாக பிடித்து எலக்ட்ரிக் ஷாக் கொடுத்து விசாரிப்பார்கள்.

சார்ஜ்  இலவசம்

எலக்ட்ரிக் கார்களை எங்கு நிறுத்தினாலும் இலவசமாக சார்ஜிங் செய்துகொள்ள முடியும். இந்த வசதி இனிமேல் அமலாகும். நாம் இந்தியர்கள் என்பதால் கண்டிப்பாக மத்திய அரசு இதற்கும் கலால் வரி விதிக்கும். அதையும் கட்டிவிட்டு, சூழலுக்காக டெபிட் கார்ட்டை தேய்ப்போம் அல்லது பாரத் பில்பேயில் காசைக் கட்டுவோம்.


குப்பைத்தொட்டிகள்

குப்பைகளை நிரம்பி வழிந்து மாடுகள் அதனை மேய்ந்துகொண்டிருக்கும் அவல காட்சி இனிமேல் இருக்காது. நிரம்பியவுடன் கார்ப்பரேஷனுக்கு குறுஞ்செய்தி சென்றுவிடும்.  எனவே, அவர்கள் உடனே அதை மாற்றிவிட வாய்ப்பு உள்ளது. அதையும் எப்போதும் போல செய்யவில்லை என்றால் குப்பைத்தொட்டிக்கு முன்னால் உள்ள ஸ்மார்ட் என்ற சொல்லை எடுத்துவிடுவோம். வேறு என்ன வழி இருக்கிறது நமக்கு?

டிரோன் நிறுத்தங்கள்

இப்போதைக்கு இந்திய நகரங்களில் டிரோன்கள் பறக்க அனுமதி கிடையாது. ஆனால் எதிர்காலத்தில் டிரோன்கள் மூலம்தான் ஸ்விக்கி டெலிவரி நடக்கும். எனவே அதற்கான நிறுத்துமிடங்கள் உருவாக்கப்படும்.

bbc





 

கருத்துகள்