ஆதித்த கரிகாலனை பலிவாங்கும் சகோதர பொறாமை, சதி! அத்திமலைத்தேவன் 5 - நிறைவுப்பகுதி

 

 

 

Athimalai Devan - Part 5 - Tamil eBook

 

 

 

 

அத்திமலைத்தேவன் 5

நரசிம்மா

வானதி பதிப்பகம்


இந்த பாகத்தோடு அத்திமலைத்தேவன் நிறைவடைகிறது. ஏறத்தாழ நரசிம்மா ஆதித்த கரிகாலனின் மரணம் பற்றி இதுவரை மறைத்து வைத்திருந்த அத்தனை விஷயங்களையும் வெளிப்படுத்திவிட்டார். பல்லவர்களைப் பற்றிய ஆவணமாக நூலை படைத்து அவர்களின் பரம்பரையை விவரித்து இருந்தார் ஆசிரியர். அபராஜிதனை ஆதித்த சோழ ன் குத்திக்கொள்ள சோழ சம்ராஜ்யம் தொடங்குகிறது. இதன் காரணமாக அவர்களின் பரம்பரை முழுக்க சாபம் பீடித்தது போல அனைத்து நடவடிக்கைகளும் நடைபெறுகின்றன. இதில் பெரிதும் பாதிக்கப்படுவது, ஆதித்த கரிகாலன்தான்.


பொன்னியின் செல்வன் போல அல்லாமல் ஆதித்த கரிகாலன் எப்படி கொல்லப்பட்டிருக்கலாம் என்பதற்கான அத்தனை விஷயங்களையும் சிறப்பாக முன்வைத்திருக்கிறார் ஆசிரியர். சுந்தர சோழரின் மகள் அனைத்து சதிகளுக்கும் பின்னணியில் இருந்து நடத்துகிறாள் என்பது பலருக்கும் அதிர்ச்சியாக இருக்கும். அதற்கு வலு சேர்க்கும் விதமாக ஏராளமான ஆதாரங்களைக் காட்டுகிறார். சிறப்பாக வந்திருக்க வேண்டிய சோழ சாம்ராஜ்யம் சகோதர பகையால் கீழே வீழ்வதோடு பல்லவ சொத்துக்களும் அந்நியர்களின் படையெடுப்பால் கொள்ளையடிக்கப்படுகிறது.


ஆதித்த கரிகாலன் மனநலன் சார்ந்த பிரச்னைகளைக் கொண்டவன். அவனுக்கு பாதுகாப்பாக பணியாற்றுகிறான் பல்லவன். அவனும் ஆதித்த கரிகாலன் இறந்தபிறகு, எரித்துகொல்லப்படுகிறான். துரத்தும் சாபமும், அரியணை மீதான மோகமும் அரச குடும்பத்தினரை பாடாய்ப்படுத்த சுந்தரசோழர் காஞ்சியில் உயிர்துறக்கிறார். அதற்குப்பிறகுதான் நிறைய மாற்றங்கள் காஞ்சியில் நடைபெறுகிறது.


இறுதியில் ராமனுஜருக்கு அத்திமலைத்தேவன் தான் இருக்கும் இடத்தை தெரிவிக்கிறான். ஆனாலும் கூட அதனை அவர் எடுத்து ஸ்தாபிக்கும் பாக்கியம் கிடைப்பதில்லை. பின்னாளில் ஏற்படும் பல்வேறு மாற்றங்களுக்குப் பிறகு காஞ்சியில் அத்திமலைத்தேவன் நீருக்கடியில் ஸ்தாபிதமாகிறான்.


கதை முடிவுக்கு வந்தாலும், அரசியல், மதம் சார்ந்த பிரச்னைகள் நாட்டில் எப்போது தீருவதில்லை. இக்காலகட்டத்திற்கும் இந்த விவகாரம் சிறப்பாக பொருந்திப்போகிறது.


ஐந்து பாகங்களையும் ஏராளமானோர் வா சித்திருக்க கூடும். பெரும்பாலும் ஜெயவர்மன், ராஜசிம்மன், ராஜஶ்ரீ, சிம்ம வல்லன் ஆகியோரை பலருக்கும் பிடித்திருப்பதாக சொல்லுவார்கள். அனைத்திற்கும் காரணமாக உள்ள விஷ்ணு குப்தரையே இங்கு குறிப்பிட விரும்புகிறோம். இவரின் ஆட்சி அமைக்கும் வேட்கை காரணமாகவே அத்திமலைத்தேவன் அடிக்கடி திருடப்படவும், பதுக்கி வைக்கப்படவும் காரணமாக இருந்துள்ளது. காலமாற்றங்களையும் விதியின் செயல்பாடுகளையும் தடுத்து நிறுத்தமுடியாது.


பல்லவர்களின் வரலாற்றை விரிவாக எழுதிய வகையில் அத்திமலைத்தேவன் நூல் நரசிம்மாவின் பெயரை வரலாற்றில் எப்போதும் கூறிக்கொண்டே இருக்கும்.


கோமாளிமேடை டீம் 

 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்