தன் உயிரை பணயம் வைத்து சிறுமியை காப்பாற்ற முயலும் நாயகன்! - டாக்டர் ஸ்லீப்

 

 

 

 

STEPHEN KING'S DOCTOR SLEEP - Official Teaser Trailer [HD ...

 டாக்டர் ஸ்லீப் 2019

 

 

டாக்டர் ஸ்லீப் 2019

Director:

Mike Flanagan

Writers:

Mike Flanagan (screenplay by), Stephen King (based upon the novel by)



ஸ்டான்லி குப்ரிக் இயக்கத்தில் தி ஷைனிங் படம் பார்த்திருந்தால் இந்தப்படம் உங்களுக்கு தெளிவாக புரிய வாய்ப்புள்ளது. பார்க்காவிட்டாலும் இந்தப்படத்தைப் பார்க்கலாம்.தவறில்லை. ஆனால் தி ஷைனிங் படத்திற்கான ஆதார கதையை எழுதிய ஸ்டீபன் கிங் எழுதிய அடுத்த பாக நாவலை தழுவி டாக்டர் ஸ்லீப் எடுக்கப்பட்டுள்ளது. அதனால் படம் பார்க்கும்போது கொஞ்சம் தடுமாற்றமாக இருக்கும். எனவேதான் முன்னமே சொல்லிவிட்டோம். தி ஷைனிங் பார்த்தபிறகு, இந்த படத்தைப் பாருங்கள். 

Doctor Sleep [Special Edition] [DVD] [2019] - Best Buy
டாக்டர் ஸ்லீப் 2019



டேனி, அப்பா இறந்தபிறகு அம்மாவுடன் வளர்கிறான். அவனுக்கு அடுத்து நடக்கப்போகும் விஷயங்களை முன்னரே அறிவது ஒருகட்டத்தில் சாபமாக அவனுக்குப் படுகிறது. மேலும் சிறுவயதில் ஏற்பட்ட பல்வேறு மோசமான அனுபவங்களின் பாதிப்பில் அம்மா இறந்தபிறகு மதுவுக்கு தீவிரமாக அடிமையாகிறான். அம்மாவின் பாசம் கிடைக்காமல், கிளப்பிலும் பப்பிலும் சுற்றுகிறான். மூளையில் தேங்கிவிட்ட அபாயகர நினைவுகள் அவனை தூங்கவிடாமல் துரத்த வேறு நகரம் நோக்கி செல்கிறான். அங்கு பூங்காவில் அறிமுகமாகும் ஒருவர், அவனுக்கு வேலை வாங்கிக்கொடுத்து நெருங்கிய நண்பனாகிறார். அந்த நேரத்தில் அவரது அறையில் ஹலோ என்று எழுதப்பட்டிருக்கிறது. வேறு ஒன்றுமில்லை. அவரைப் போன்ற சக்திகொண்ட ஆப்ரா என்ற சிறுமி அவனை அடையாளம் கண்டு நட்பு கோரிக்கை அனுப்புகிறாள். இன்னொருபுறம் நகரில் டேனி, ஆப்ரா போன்ற மாய முன்னுணரும் சக்தி கொண்ட குழந்தைகளை வேட்டையாடி இளமையாக இருக்க முயலும் குழு ஒன்று உள்ளது. அவர்கள் அப்படி ஒரு சக்தி பெற்ற சிறுவனைக் கொல்வதை ஆப்ரா தனது சக்தி மூலம் பார்த்துவிட்டு டேனியை உதவிக்கு அழைக்கிறாள். முதலில் டேனி மறுத்தாலும் அவனுடைய வழிகாட்டியாக உள்ளவர், ஆப்ராவுக்கு உதவும் கோரிக்கையை வைக்க நெகிழ்ச்சியுடன் ஏற்கிறான்.  மனிதர்களை கடத்தி உடலில் கத்தியால் குத்தி சித்திரவதை செய்து அவர்களது ஆன்ம சக்தியை உறிஞ்சும் கும்பலை எப்படி டேனி - ஆப்ரா அழித்தனர் என்பதுதான் கதை.

தி ஷைனிங் படத்தில் பார்த்த காட்சிகளை இந்த படத்தில் நிறைய இடத்தில் காட்டியுள்ளனர். அதனால் படம் சற்று தேங்குவது போல உள்ளது. மற்றபடி டேனி - ஈவன் மெக் கிரீகர், வில்லியாக - ரெபெக்கா ஃபெர்குஷன் ஆப்ராவாக கைல் குரன் ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர்.

இந்த படத்தில் வரும் சுவாரசியமாக கதாபாத்திரங்களில் ஒன்று ஸ்னேக் பைட் ஆண்டி. எந்த மனிதராக இருந்தாலும் அவரது மனதை வசியம் செய்து தூங்கவைத்து பொருட்களை கொள்ளையடிக்கும் பாத்திரம். எமிலி அலைன் லிண்ட் இந்த பாத்திரத்தை அநாயசமாக நடித்து சிறப்பித்திருக்கிறார்.

படம் இரவில் நம்மை தூக்கம் எப்படி தழுவுகிறதோ அதேபோல நிதானமாகவே செல்கிறது. இதனால் பலரும் படத்தை பொறுமையுடன் பார்ப்பது கடினமாகவே இருக்கும்.

2013இல் வந்த நாவலை படமாக்கியிருக்கிறார் இயக்குநர் மைக் ஃபிளானகன். படத்தின் திகிலை நம் மனதிற்கு கடத்துவது நியூட்டன் பிரதர்ஸின் இசை.

பொறுமையாக நேரம் கிடைத்தால் பாருங்கள்.

ஒரு உயிரைக் காக்க உயிர்த்தியாகம்!

கோமாளிமேடை டீம்


 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்