இளவரசி மீது காதல் வசப்படும் வங்கி அதிகாரியின் காமெடி கதை! - மல்லீஸ்வரி
மல்லீஸ்வரி
இயக்கம் - விஜயபாஸ்கர்
கதை, வசனம் - திரிவிக்ரம் ஶ்ரீனிவாஸ்
இசை - கோடி
வரபிரசாத் என்ற வங்கி ஊழியர். அவருக்கு 24 பெண்களை பார்த்தும் ஏதோ காரணங்களால் தட்டிப்போகிறது. அவருக்கு இருப்பது அண்ணன், அண்ணி, அவர்களது குழந்தைதான். வரன்கள் பார்த்து தட்டிப்போக, அவரது பெயரே கல்யாணமாக பிரசாத் என்று வங்கியில் செல்லப்பெயராகிறது. அந்த நேரத்தில் மல்லீஸ்வரி என்ற பெண்ணை வீட்டுக்குப் போகும் வழியில் பார்க்கிறார். அந்தப் பெண்ணை பின்தொடர்கிறார். தன்னைப்பற்றிய விவரங்கள் சொல்லி கல்யாணம் செய்துகொள்ள அந்த வீட்டிற்கு அண்ணனை அனுப்புகிறார். ஆனால் அவர்கள் மணம் செய்துகொடுக்க மறுத்து, வீட்டு வேலை செய்யும் பெண் என்று சொல்லிவிடுகிறார்கள். அதேநேரம் மல்லீஸ்வரியை கடத்திச்சென்று கொல்வதற்கு ஒரு குழு முயல்கிறது. உண்மையில் மல்லீஸ்வரி யார்? அவளை எதற்கு கடத்த முயல்கின்றனர் என்பதை வரபிரசாத் அறிந்துகொள்வதுதான் கதை.
பக்கா
விக்டரி வெங்கடேஷ், தனது கதாபாத்திரத்தை அற்புதமாக நடித்திருக்கிறார். கத்ரீனா மல்லீஸ்வரி பாத்திரத்தில் இளவரசியாக வரும்போது மட்டும் ஈர்க்கிறார். தணிகெலா பரணியின் மனைவி பேசும் வசனங்கள், நடிப்பு அருமை. படம் முழுக்க காமெடி அட்டகாசமாக வேலை செய்திருக்கிறது. திரிவிக்ரமின் வசனமும், கதையும் சிறப்பு.
டொக்கு
இளவரசியை கொல்ல பலமுறை முயன்றவரிடம் போய் சமாதானம் பேசுவார்களா? அதுவும் இளவரசி வீட்டிற்கு கூட வரவில்லை. உயிர்பிழைக்க ஓடிக்கொண்டிருக்கிறார். அரண்மனைவாசிகள் அவரை மீட்க கூட துரும்பைக் கிள்ளிப்போடவில்லை.அது பொருந்தவே இல்லை. இன்னொன்று, என்னதான் இளவரசி என்றாலும் வீட்டில் உள்ளவர்களிடம் கூட தனக்கு என்ன பிடிக்கும் பிடிக்காது என்று சொல்லாம ல் இருப்பாரா என்ன? புறாவுக்கு தானியங்கள் எதற்கு? இட்லி, தோசை வைக்கலாமே என்று முட்டாள் போல பேசும் இளவரசி நூலகம் போய் படிக்கிறார் என்பது ஒட்டவே இல்லை. முட்டையை எண்ணிக்கை சொல்லி வாங்காமல் கிலோ கணக்கில் வாங்குகிறார். இதை காமெடி என்பதா, அவருக்கு இயல்பு வாழ்க்கை தெரியவில்லை என்பதா? இந்த கதாபாத்திரம் இயல்பாகவே உருவாக்கப்படவில்லை.
விக்டரி வெங்கடேஷ் காமெடியில் உங்களை காப்பாற்றுவார்.
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக