காலத்தின் புழுதி படியாத லட்சியவாத நாவல்! - உயிர்த்தேன் - தி.ஜானகிராமன்

 

 

 

https://abedheen.files.wordpress.com/2018/10/thi_janakiraman-by-adhimoolam.jpg?w=477
தி.ஜானகிராமன்


 

உயிர்த்தேன் 
தி.ஜானகிராமன்

 பொதுமுடக்க காலத்தில் இந்த நூலை படிப்பவர்களுக்கு பெரும் உற்சாகம் ஏற்படும். காரணம், இந்த நாவலில் கூட நாயகன் சென்னையிலிருந்து போதுண்டா பாண்டுரங்கா என்று தந்தை வாழ்ந்த சொந்த ஊரான ஆறுகட்டிக்கு வந்து வாழ்கிறார். அங்கு வரும் பிரச்னைகளை சமாளிக்கிறார்.

பூவராகவன் காகிதங்களை விற்கும் தொழில் செய்து அவரது அப்பா சம்பாதிக்காத அளவு, ஏன், பூவராகவனே நினைத்துப்பார்க்கமுடியாத காசு கொட்டுகிறது. சரியான முதலீடு செய்தால் உழைக்காமல் பணம் கிடைக்கும் அல்லவா? அதேதான். பணம் கிடைத்தாலும் மனத்தில் நிம்மதி இல்லை. ஊரில் உள்ள பெருமாள் கோவிலை புனருத்தானம் செய்ய அவரது அப்பா முயல்கிறார். ஆனால் பிராப்தமின்றி சில நாட்களிலேயே உயிர் துறக்கிறார். அந்த ஆசையை மகன் பூவராகவன் எப்படி நிறைவேற்றுகிறார் என்பதுதான் மையக்கதை.

ஜானகிராமனின் மற்ற கதைகளை விட இந்தக் கதை தீவிரமான லட்சியவாத தன்மை கொண்டது. சமூகத்திற்கு உழைக்கும் ஆன்மாகவாக பூவராகவன் உருவாக்கப்பட்டிருக்கிறார். இதற்கு அவர் அப்பா காரணமாக இருக்கலாம். அவரது சூழல் அப்படித்தான். அவரது வருகையால் உயிர்ப்பு பெறும் முக்கியமான பாத்திரம் செங்கம்மா. கணக்கு் பார்க்கும் கணேசபிள்ளையின் மனைவி. ஊரிலுள்ள அத்தனை வீடுகளிலும் சென்று வேலை செய்து முகம் சுளிக்காமல் அனைவரிடமும் பேசும் பெண்மணி.

பூவராகவனின் லட்சியவாதத்திற்கு அவரது மனைவி ரங்கநாயகி கூட துணை நிற்கவில்லை. ஆனால் வேலை செய்வதற்கு வரும் செங்கம்மா துணையாக நிற்கிறாள். காரணம் மனிதர்களின் மீதான அன்பும் ஆதுரமும் தவிர வேறில்லை. இவரை அப்படியே பிரதிபலிக்கும் இன்னொரு பெண் அனுசுயா. திருமணம் என்னும் கட்டுகளின்றி வாழ்பவள். பிறந்த குழந்தையின் கள்ளமின்மையை முதுமையில் சரியான செயல்களை செய்திருந்தால் ஒரு மனிதரிடமும் அதனை நாம் எதிர்பார்க்கலாம். அது ஒருவகையில் பார்வையில் நம்மை கூனிக்ககுறுக வைக்கும். இந்த இரு பெண்களும் அப்படித்தான். செங்கம்மாவை நோட்டமிட பழனிவேலு, திருநாவுக்கரசு என பலரும் முயன்றாலும் நேரில் வந்து நிற்கும்போது அனைத்தும் கள்ளமும் இறங்கி பதைபதைத்து போய்விடுகிறார்கள். இதில் பழனிவேலு இந்த அவஸ்தையை தாங்கமுடியாமல் உயிரையே நைவேத்தியம் ஆக்கிவிடுகிறான் என்பது செங்கம்மாவை தெய்வ உயரத்திற்கு கொண்டு செல்கிறது. 

https://s3.ap-south-1.amazonaws.com/storage.commonfolks.in/docs/products/images_full/uyir-thaen_FrontImage_976.jpg
உயிர்த்தேன் நாவல்



நம் மனதை அறிவை விதியை அறியும் சாவி நம்மிடமே இருந்தாலும் அதனை எப்படி திறப்பது என தவித்து நின்றுகொண்டிருக்கிறோம். அதேபோல உறவுச்சங்கிலியில் சிக்கி, பொறுப்பு, புனிதம் என செங்ம்மா தடுமாறும்போது அன்னையின் மடி தந்து உதவுபவள் அனுசுயா. செங்கம்மா போல நாவல் முழுவதும் வரும் பாத்திரமல்ல.  ஆனாலும் செங்கம்மாவும் அனுசுயாவும் வேறு வேறல்ல என்று இறுதியில் நமக்கு தோன்றும். அப்படிப்பட்ட விஷயங்களை இறுதியில்தான் ஆசிரியர் சொல்லுகிறார்.

ஒரு பெண்ணை தெய்வம் தரத்திற்கு ஒரு வர் உயர்த்திப் பார்க்கிறார். இன்னொருவர் உடலுக்கு கிடைத்த தேனாக சுவைத்துப் பார்க்க ஆசைப்படுகிறார். இதில் எதிரிகள் என்பது ஒரு செயலுக்கு எதிராக மனதில் உருவாகும் எண்ணங்கள் என்று சொல்லலாம். இந்த பாத்திரங்களின் வேறுபாடு ஒருவகையில் நாவலுக்கு சுவாரசியத்தை அளிக்கிறது.

பூவராகவனின் சுயநலன்றற பணிகள் ஆறுகட்டி ஊருக்கு கொண்டு வரும் வளமும், மாறும் மக்களின் குணமும்தான் இறுதிப்பகுதி. நாம் செய்யும் செயல்கள் சரியாக இருக்கும்போது அதனை யாருக்கு்ம மெய்பிக்க வேண்டியதில்லை என்ற வினோபா பாவே சொல்படி, பூவராகவன் செயல்படுகிறார். அந்த ஊருக்கான வேலைகளை செங்கம்மாவிடம் ஆலோசனை கேட்டு செய்கிறார். இதனை அவர் ஊர்மக்களிடம் ஒப்பு்க்கொள்கிறார். இதனால் அவரது நெருங்கிய உறவுக்கார்ரான நரசிம்மனே கோபம் கொள்கிறார். ஆனால் இதெல்லாம் யாருக்காக எனும்போது, அந்த கோபம் நொடியில் காணாமல்போகிறது. சுயநலம் பெருகியுள்ள இக்காலத்தில் உயிர்த்தேன், உண்மையில் நம் மனத்தில் நிகழ்த்தும் ஆச்சரியங்கள் அனேகம்.

நடப்பு ஆண்டு 2020, தி.ஜானகிராமனின் நூற்றாண்டு. இந்த நாவலை படிப்பதற்கு தூண்டியவர் எழுத்தாளர் சுகுமாரன். அவர் கனலி.இன் வலைத்தளத்தில் எழுதிய கட்டுரை அற்புதமானது. வாசிக்க நேரமிருப்பவர்கள் கனலி வலைத்தளத்தில் தி.ஜா நூற்றாண்டு மலரைத் தேடி வாசியுங்கள்.
நன்றி எழுத்தாளர் சுகுமாரன்

 கோமாளிமேடை டீம்

கருத்துகள்