1991 பொருளாதார சீர்திருத்தங்களுக்கு வயது 30!
1991 சீர்திருத்தங்களுக்கு வயது 30
நரசிம்மராவ் தலைமையிலான ஆட்சியில் டாக்டர் மன்மோகன் நிதியமைச்சராக இருந்து கொண்டு வந்த தாராளமயமாக்கள் கொள்கைகள் செயல்பாட்டுக்கு வந்து நடப்பு ஆண்டோடு 30 ஆண்டுகள் ஆகின்றன. 3.5 சதவீத பொருளாதார வளர்ச்சியில் தடுமாறிய இந்தியா சீர்திருத்தங்களின் விளைவாக 6.5 சதவீத வளர்ச்சியை இருபத்தைந்து ஆண்டுகளில் பெற்றது மகத்தான சாதனை. உடனே நாம் சீனாவுடன் நம்மை இணைத்துப் பார்க்க கூடாது. அங்கு ஒரு கட்சி ஆட்சிமுறையோடு அரசியல் கொள்கையும் வலுவாக இருந்ததால் பொருளாதாரத்தில் இந்தியா எட்ட முடியாத உயரத்திற்கு சென்றுவிட்டார்கள். உள்நாட்டிற்கான வணிகத்திலும் நிலையான இடத்தை பிடித்து பன்னாட்டு நிறுவனங்களுக்கு சவால் விடும்படி வளர்ந்துவிட்டார்கள்.
இந்திய முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததை விட ஐந்து மடங்கு பொருளாதார வளர்ச்சியை எட்டியுள்ளது. ஆனால் வறுமை ஒழிப்பில் பெரிதாக சாதிக்க முடியவில்லை. நடுத்தர வர்க்கத்திற்கும் கீழ் உள்ள வர்க்கத்தினரை பெரிதாக மேலே கொண்டு வர இயலவில்லை. ஆனாலும் சந்தையை விரிவாக்கியதில் இந்தியா முக்கியமான சாதனையை செய்துள்ளதுதான். இதனால் இந்தியாவின் அரசியல் கொள்கைகள் பெரிதாக மாறிவிட்டது என்று கூற முடியாது. இதேகாலத்தில் அமெரிக்காவில் ரொனால்ட் ரீகன், இங்கிலாந்தின் தாட்சர் ஆகியோர் தனியார்மய கொள்கைகளை அமல்படுத்திக்கொண்டிருந்தனர். 1980ஆம் ஆண்டில் மேற்படி மாற்றங்ளள் நடைபெற்றபோது, மத்திய அரசு அனைத்து தொழில்களையும் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு லைசென்ஸ் வாங்கும் சிக்கல்கள் இருந்தன. புதிய சீர்திருத்தங்கள் 1991இல் அமலானபிறகு இவை விலக்கிக்கொள்ளப்பட்டன.
புதிய கொள்கைகள் அமலுக்கு வர பிரதமர் நரசிம்மராவ், நிதியமைச்சர் மன்மோகன்சிங், முதன்மை செயலர் ஏவி வர்மா ஆகியோர் முக்கியமான காரணமாக இருந்தனர். அப்போது மாவட்ட ஆட்சியர்களுக்கு கூட மத்திய அரசின் செயல்முறைகளின் நோக்கம் தெளிவுபடுத்தப்படவேண்டியிருந்தது. இந்தியாவின் அண்டை நாடுகள் வேகமாக முன்னேறிக்கொண்டிருந்த நிலையில் இந்தியா தொழில்துறை சார்ந்து வேகமான முடிவை எடுக்கவேண்டியிருந்தது. சீர்திருத்தங்களுக்காக அமைக்கப்பட்ட கமிட்டியில் குடிமைத்துறை அதிகாரிகள் எல் கே ஜா, எம் நரசிம்ஹம், அபித் ஹூசைன், அர்ஜூன் சென்குப்தா ஆகியோர் இடம்பெற்றனர். 1989இல் விபி சிங் தலைமையிலான அரசு தொழில்துறை தொடர்பான கொள்கைளை திருத்தி உரிமம் வாங்கும் முறையை கைவிட நினைத்தது. இதற்கு அஜித் சிங் தேவைப்பட்டார். இவர், ஐபிஎம்மில் பணியாற்றியவர், ஐஐடியில் படித்தவர். இவர் உருவாக்கிய கொள்கையை அமலாக்க நிதித்துறை அமைச்சர் மது தாண்டவடே பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. ஆட்சி நிலைக்கவில்லை என்றாலும் கூட அப்போதே மாற்றங்களுக்கான அறிகுறிகள் தென்படத்தொடங்கின. மன்மோகன் சிங்கின் சீடரான மான்டேக் சிங் அலுவாலியா பொருளாதார சீர்திருத்தங்களுக்கான முயற்சிகளை பிரதமர் அலுவலகத்தில் உருவாக்குவதில் பங்களித்திருந்தார். இதனை எம் டாக்குமெண்ட் என்று குறிப்பிட்டனர்.
சந்திரசேகர் பிரதமராக அடுத்து பதவியேற்றார். அப்போது மன்மோகன்சிங், அரசின் பொருளாதார ஆலோசகராக இருந்தார். அப்போதே அவரது மனதில் பொருளாதார சீர்திருத்தங்களுக்கான அம்சங்கள் உருவாகத் தொடங்கியிருக்க வேண்டும். ஜூன் 21, 1991ஆம் ஆண்டு நரசிம்மராவ் அரசு பதவியேற்றது. உடனே ஐந்து வாரத்தில் தொழில்துறைக்கான சீர்திருத்தங்கள் உருவாக்கப்பட்டுவிட்டன. பி.வி.என் தனது நிதியமைச்சராக மன்மோகனையும், முதன்மைச்செயலராக வர்மாவையும் தேர்ந்தெடுத்தார். சரியான நேரத்தில் சரியான மனிதர்களை சரியான இடத்தில் அமர்த்தியதால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பயணம் வெற்றிகரமாக தொடர்ந்தது.
ராகேஷ் மோகன்
ஹெச்டி
கருத்துகள்
கருத்துரையிடுக