மனிதர்களின் முன்னோடி விலங்குகளின் பழக்கம், வாழ்க்கைமுறை!

 

 

 

 

 Bonobo, Ape, Cincinnati Zoo, Primate, Zoo

 

 

 

 

 

 

 

 

 

 

முன்னோர்களின் பழக்கங்கள்….


பாலூட்டி இனத்தைச் சேர்ந்த மனிதர்கள், தங்களது பழக்கவழக்கங்களை எப்படி பெற்றார்கள்? இதற்கான விடையை மானுடவியலாளர்கள் பல்வேறு ஆய்வுகளின் வழியாக தேடி வருகிறார்கள். சிம்பன்சி, ஏப், உராங்குட்டான், கொரில்லா. போனபோ ஆகிய விலங்குகளின் நம்மின் மரபணுக்களோடும், பழக்கங்களோடும் ஓரளவு நெருக்கமாயிருக்கின்றன. சாப்பிடுவது, தூங்குவது, குடும்பத்தலைவர், அதற்கு கீழ் உள்ள அதிகாரப் படிநிலை, குழுக்களின் செயல்பாடு, தினசரி வாழ்க்கை சவால்கள் என பலதையும் இதில் நாம் பார்க்கலாம்.


சிம்பன்சி வம்சாவளிப்பிரிவில் நெருங்கிய உயிரினமாக உள்ளது. நாம் இந்த விலங்கின் மரபணுக்களோடு 98 சதவீதம் ஒத்துப்போகிறோம்., தனது ஐம்பது ஆண்டுகால வாழ்க்கையில் குட்டிகளை பராமரிப்பதிலும் பெரும் குழுக்களாக வாழ்வதிலும் திறன் பெற்றவைகளாக உள்ளன. பதிமூன்று வயது தொடங்கி சிம்பன்சிகள் கருத்தரிக்கத் தொடங்குகின்றன. குட்டிகளை இரண்டு வயது வரை கண்ணும் கருத்துமாக தோளில் தூக்கி வைத்து பராமரிக்கின்றன. ஆண் சிம்பன்சிகள் முதிர்ச்சியடைய அதிக காலம் எடுத்துக்கொள்கின்றன. இவை, பதினாறு ஆண்டுகளுக்கு பிறகுதான் முதிர்ச்சி பெறுகின்றன.


சிம்பன்சிகளின் கூட்டத்தில் அதிகாரப்படிநிலை என்பது இறுக்கமானது. இதில் அதிகாரம் செலுத்தும் சிம்பன்சிக்கு வயது 25 முதல் 30 வயது வரை உள்ளது. ஆல்பா ஆண் என்று அழைக்க்ப்படும் இந்த சிம்பன்சிதான் குழுவைக் கட்டுப்படுத்தி பிற குழுக்களின் தாக்குதலை சமாளிக்கிறது. தனது அதிகாரத்தை உறுதிப்படுத்தும் அதேசமயம், பிற ஆண் சிம்பன்சிகளின் ஆதரவையும் பெற்று குழுவை வழிநடத்துகிறது. பெண்களுக்கு கூட்டத்தில் பெரிய பதவிகள் வழங்கப்படுவதில்லை. கைகளாலும் கால்களும் மரத்தைப் பற்றி நடக்கும் சிம்பன்சிகள் மழைக்காட்டுகளை தங்களது இருப்பிடமாக கொண்டவை. பல்வேறு வித பழங்கள், தாவரங்கள், பூச்சிகளை உண்ணுகின்றன. வலைகளை கற்கள் மூலம் தகர்ப்பது, நீரை இலை மூலம் பிடித்துக் குடிப்பது என சில மனிதர்களின் பழக்கங்களைக் கொண்டிருக்கின்றன.


சிம்பன்சிகள் தனது சக குரங்களின் உடலை எந்தளவு புழு, பூச்சிகளின்றி பராமரிக்கிறதோ அதேயளவு இன்னொருபுறம் தீவிர வன்முறை முகத்தையும் கொண்டவை. அதனை வெளிப்படையாகவும் காட்டுபவை. இவை உயர்ந்த மரக்கிளைகளில் படுத்து தூங்குகின்றன. இதன்மூலம் நிலம் மூலமாக வரும் எதிரிகளின் பாதிப்பைக் கட்டுப்படுத்த முடியும். எட்டு அல்லது ஒன்பது மணிநேரம் தூங்கும் பழக்கம் கொண்டவை.


கொரில்லா


சகாரா ஆப்பிரிக்காவைப் பொறுத்து கொரில்லாக்கள் நான்கு வகையாக உள்ளன. சிம்பன்சிகளைப் போலவே இவையும் அதிகாரப்படிநிலை கொண்டவைதான். கொரில்லா இனக்குழுவில் நாற்பது உறுப்பினர்கள் உண்டு. இதில் வயது முதிர்ந்த கொரில்லாதான் குழுவை வழிநடத்தும். இளம் கொரில்லா படைகளின் உதவியுடன் குழுவை அதிகாரம் செலுத்துகிறது. இவை பிற இன குரங்குகளுடன் அதிகம் சண்டையில் ஈடுபடுபவை அல்ல. தாக்கப்படும்போதும், அச்சுறுத்தப்படும்போதும் மட்டுமே வன்முறையில் இறங்குபவை. ஆண்கள் பதிமூன்று வயதில் முதிர்ச்சி அடைகின்றன என்றால் பெண்கள் பனிரெண்டு வயதில் முதிர்ச்சி அடைகின்றன. பெண்களுக்கு கருத்தரித்தல் காலம் ஒன்பது மாதங்களாகும்.


பெண் கொரில்லாக்கள் மரத்தின் மேல் தூங்கும். ஆண்கள் நிலத்தில் உறங்கும். ஒவ்வொரு இரவும் தூங்கும் இடத்தை மாற்றிக்கொண்டே இருக்கும். தனது குழுவில் உள்ள இளைய கொரில்லாக்களை காப்பாற்றுவதே முக்கியம் என கொரில்லாக்கள் கருதுகின்றன. பெண்கள் தங்களது குட்டிகளை சில ஆண்டுகள் மரக்கிளையில் உள்ள வலையில் தங்க வைத்து பாதுகாக்கின்றன.


சிம்பன்சி, போனபோஸ் ஆகியவற்றுக்கு அடுத்து டிஎன்ஏ ஒத்துப்போவது கொரில்லாக்களுடன்தான் என்பதை ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளன. மனிதர்களைப் போலவே மகிழ்ச்சியையும், சோகத்தையும் வெளிப்படுத்தும் தன்மை கொண்டவை. இவை மீது செய்யப்பட்ட ஆராய்ச்சியில் குறிப்பிட்ட சைகைமொழிகளைக் கற்றுக்கொண்டு தங்கள் புத்திசாலித்தனத்தை நிரூபித்துள்ளன.


உராங்குட்டன்


போர்னியோ, சுமத்ராவில் உள்ள மழைக்காடுகளில் உராங்குட்டான்களைப் பார்க்கலாம். உராங்குட்டான் என்றால் மலாய் மொழியில் காட்டிலுள்ள மனிதன் என்று அர்த்தம். இவை பெரும்பாலும் தனது நேரத்தை மரங்களின் மேல்தான் செலவழிக்கின்றன. இவற்றின் நீண்ட கரங்கள் மரங்களில் வாழ்வதற்கான தன்மை கொண்டவை. தங்களது வாழிடங்களை தேர்ந்தெடுத்து அதற்கேற்ப வாழ்வதில் திறமை கொண்ட உயிரினங்கள்.


மரங்களில் வாழிடங்களை அமைப்பது இருப்பதிலேயே சிக்கலான முறை. இதைத்தான் இளைய குரங்குகள் தன் அம்மாவிடம் மூன்று ஆண்டுகளில் கற்றுக்கொள்கின்றன். கிளைகள் முதலில் ஒன்றாக இணைக்கப்படுகின்றன. பிறகு இலைகள் கொண்ட கிளைகள் ஒன்றாக இணைத்து அடித்தளம் அமைக்கப்படுகிறது. இவைதான் படுக்கைகள். உராங்குட்டான்கள் எட்டு ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் பிரசவிக்கிறது. இது அனைத்து வில ங்குகளிலும் அதிகமான காலகட்டம் என்று கூறப்படுகிறது. பாலின ம் சார்ந்த முதிர்ச்சியை ஆணும், பெண்ணும் பதினைந்து வயதில் பெற்றுவிடுகின்றன. குட்டிகளின் வளர்ப்பில் தந்தையின் பங்கு பெரிதாக இல்லை. பெண்கள் மட்டுமே குட்டிகளை ஏழு ஆண்டுகள் வரை பராமரிக்கின்றன. இதில் ஆண்கள் பெரும்பாலும் தனியாகவே வாழ்கின்றன. பெண்கள் தங்கள் குட்டிகள் இருந்தால் அவற்றைப் பராமரிக்கின்றன. முதிர்ச்சி பெற்ற இளம் உராங்குட்டான்கள் தனி குழுவாக உள்ளன. பழங்கள்தான் முக்கியமான உணவு. பூச்சிகள், பறவைகளின் முட்டைகளையும் சாப்பிடுகின்றன. இந்த இனத்தில் ஆண்களுக்கு இடையில் வன்முறை சண்டைகள் அதிகம் நடைபெறுவது இல்லை.


பெண் குரங்குகளை கவரும்போது மட்டுமே சண்டை நடைபெறுகிறது. முன்னர் இரண்டு லட்சத்திற்கும் மேல் வாழ்ந்த உராங்குட்டான்கள் இன்று ஐம்பதாயிரமாக சுருங்கியுள்ளதற்கு மனிதர்களே முக்கியமான காரணம்.


போனபோஸ்


காங்கோவில் உள்ள அரசியல் நிலைமைகளால் போனபோஸை அதிகளவு கவனம் கொடுத்து ஆராய்ச்சி செய்ய முடியாத நிலை உள்ளது. இவை எங்கேயிருந்து வந்தன, என்பது பற்றிய குறைந்த தகவல்களை நம்மிடம் உள்ளன. மேலே பார்த்த பிற இனங்களை விட குறைவாகவே கோபப்படும், அதிகளவு கூச்சத்தன்மை கொண்டவை. இதில் பிற இனங்களைப் போல அதிகாரப்படிநிலை இறுக்கமாக இல்லை. பெண்களும் இதில் அதிகாரத்தில் உள்ளன. குழுக்களை செலுத்துகின்றன. போனபோஸ் அதிகளவு குட்டிகளை பெறுகின்றன. இந்த இனத்தில் ஓரினச்சேர்க்கை சமாச்சாரங்களும் உண்டு. உடலுறவு கொள்வதிலும் கூட பெண் இணைக்காக போராட்டங்களோ சண்டையோ செய்வதில்லை. கூட்டத்தில் பாலுறவு என்பது இயல்பாகவே நடக்கிறது. மேலும் இவை பெரும்பாலும் நூறு போனபோஸ் கொண்ட கூட்டங்களாவே உள்ளன. பகல் முழுக்க வேட்டையாடச்செல்லுகின்றன. இரவில் தூங்குவதுற்கு ஒன்றாக கூடுகின்றன. மரத்தில் வீடு அமைப்பது பிற இனங்களைப் போலவேதான். உணவாக பழங்கள், சிறு விலங்குகளை கொன்று சாப்பிடுகின்றன.


குரல் கொடுத்து தகவல்களை பரிமாறுவது, இல்லை என்றால் தலை அசைப்பது என சில விஷயங்கள் மனிதர்களோடு பொருந்திப்போகின்றன.


பிபிசி


ஸ்டீவ் ரைட்











கருத்துகள்