சூப்பர் பிஸினஸ்மேன்
ரிச்சர்ட் பிரான்சன்
இங்கிலாந்தைச் சேர்ந்த இந்த பிஸினஸ்மேனைப் பற்றி படித்தால் நீங்கள் என்ன நினைப்பீர்கள் என்று கூட எனக்கு சந்தேகமாக இருக்கிறது. ஆம் இவர் தனது பொருட்களை எப்பாடுபட்டாவது தானே விளம்பரப்படுத்திவிடுவார். மார்க்கெட்டிங்கா எனக்கு வராதே சுண்டுவிரலைக் கடிக்கும் பழக்கம் இவருக்கு கிடையவே கிடையாது. ஆல்பம் ரெக்கார்டுகள் முதல் மொபைல்போன், இணையசேவை நிறுவனங்கள், ரயில், குளிர்பானங்கள், விமான நிறுவனம் என மொத்தம் 360 நிறுவனங்களை வைத்திருக்கிறார். இதன் தோராய மதிப்பு 2.6 பில்லியன் வரும். இங்கிலாந்தில் புகழ்பெற்ற வணிகர் இவர்தான்.
இந்நேரம் இவரை யாரென்று யூகித்திருப்பீர்கள். வர்ஜின் காலாடிக் என்ற பெயரில் மக்களை விண்வெளிக்கு கூட்டிச்செல்ல திட்டம் போட்டுக்கொண்டிருக்கும் ரிச்சர்ட் பிரான்சன்தான் அவர். பெரும்பாலான இங்கிலாந்து பெருநிறுவன முதலாளிகளைப் பொறுத்தவரை அவர்கள் வேலை செய்யும் நிறுவன ஆட்களுக்கு மட்டுமே அடையாளம் தெரியும். ஆனால் ரிச்சர்டைப் பொறுத்தவரை உலகிலுள்ள அனைவருக்கும் அவரை அடையாளம் தெரியும். தெரிய வேண்டும் என்றுதான் ஆபத்தான பல்வேறு விஷயங்களை நான்தான் முதலில் என்று அடம்பிடித்து செய்வார். இதனால் இவரை அடையாளம் தெரிந்துகொண்டவர்கள் ஆச்சரியமாகி வர்ஜின் குழுமத்தைப் பற்றி தேடிப்பிடித்து அறிந்துகொள்வார்கள். நம்மூரில் இருக்கும் வசந்த் அண்ட் கோ போல என்று வைத்துக்கொள்ளுங்களேன்.
1950ஆம் ஆண்டு சர்ரேவிலுள்ள கில்ட்போர்டில் பிறந்தார். இவரது அப்பா வழக்குரைரர். குடும்ப வழக்கப்படி இந்த தொழிலை செய்தார். அம்மா. தென் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவர். விமான பணிப்பெண்ணாக வேலை செய்த நடனக்கலைஞரும் கூட. பள்ளிப் படிப்பை பொறுத்தவரை பிரான்சனுக்கு சொல்ல ஏதுமில்லை. அவருக்கு டிஸ்லெக்ஸியா பிரச்னை இருந்தது. இதனால் அனைவரும் படிக்கும் பள்ளியில் படிக்க முடியவில்லை. தனியாக அமைக்கப்பட்ட பள்ளியில் படித்தார். படிப்பில் கடைசி சீட் என்றாலும் விளையாட்டில் அவர்தான் முன்னே நின்றார். தான் படிக்கும்போதே ஸ்டூடன்ட் என்ற இதழை நண்பர்களின் துணையுடன் வெற்றிகரமாக நடத்தினார். அப்போதே ஒரு லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்றது. பிறகு அவர், இசை ரெக்கார்டுகளின் மீது திரும்பியது. பாடல்களை கேட்பது யாருக்குத்தான் பிடிக்காது. அதனை குறைந்த தள்ளுபடி விலையில் வாங்கித் தருவதாக விளம்பரத்தை தனது இதழில் வெளியிட்டார். ஆர்டர்கள் குவிந்தன. ஆனால் உண்மையில் அவரிடம் அத்தனை ஸ்டாக்குகள் இல்லை. அவருக்கு உதவ இசை ரெக்கார்டுகளை விற்கும் நிறுவனம் முன்வந்தது. இதில் நிறைய லாபம் கிடைக்கவே, ஸ்டூடன்ட் பத்திரிகையை பிரான்சன் நிறுத்திவிட்டார்.
இதழ் தொடக்கத்தில் நன்றாக விற்றாலும் கூட அதில் வரும் லாபம் செலவுகளை ஈடுகட்ட போதுமானதாக இல்லை. எனவே லாபம் வரும் தொழிலை வைத்துக்கொள்ளலாம் என நினைத்து அதனை மூடிவிட்டார். இசை ரெக்கார்டுகளை குறைந்த விலைக்கு விற்கும் நிறுவனம் தொடங்கலாம் என முடிவெடுத்த நிலையில் என்ன பெயர் வைப்பது என்பதில் குழப்பமாக இருக்க ஊழியர் டக்கென வர்ஜின் என்று சொல்ல பிரான்சனுக்கு உடனே அந்த பெயர் ஒகே என்று தோன்றியது. இன்றுவரை வர்ஜின் ரெக்கார்ட்ஸ் பல்வேறு புதிய இளம் பாடகர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அவர்க்ளுடன் தன்னையும் வளர்த்துக்கொண்டு வருகிறது. இதனை தனது விமான நிறுவனத்தைக் காப்பாற்ற ராபின்சன் விற்றது தனிக்கதை. இந்த நேரத்தில் பிரான்சனுக்கு காதலும் கிடைத்தது. வணிகமோ, காதலோ தீவிரமாக ஈடுபடுவதுதான் அவரது ஸ்டைல். துரதிர்ஷ்டவசமாக அவரது காதலி கர்ப்பம் தரித்தார். அப்போதிருந்த சூழலில் இதனை எப்படி அணுகுவது என்பது பிரான்சனுக்கும் அவரது காதலிக்கும் தெரியவில்லை. இந்த குழப்பத்தில் அவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும்படி குழந்தை கருவிலேயே கலைந்துவிட்டது. இவரது இந்த சொந்த வாழ்க்கை அனுபவம், இளைஞர்களுக்கு வாழ்க்கை தொடர்பான வழிகாட்டலைத் தரும் அமைப்பை உருவாக்கத் தூண்டியது. இது கால்சென்டர் போன்று வல்லுநர்களின் துணையுடன் தொடங்கப்பட்டது. தேசம் எங்கும் வெற்றி பெற்ற திட்டம் இது. பிரான்சனின் புகழ் தேசமெங்கும் பரவியது. பிபிசியில் கூட இவரைப் பற்றிய ஆவணப்படம் எடுத்தார்கள். அப்போது பிரான்சனின் வயது 20 தான்.
வர்ஜின் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்திற்கு என தனிக்கடை கிடையாது. கிடைத்த இடத்தில் வேலை செய்து அங்கேயே படுத்து தூங்கித்தான் ஸ்டூடன்ட் இதழ் காலத்திலேயே வேலை செய்தார்கள். நிறுவனம் பிரபலமானதும் அந்த வணிகத்திற்கு வரி கட்ட ஆட்கள் வந்துவிட்டனர். இதனால் நிறுவனத்திற்கென 1971இல் தனிக்கடை ஒன்றை தொடங்கினார். கடையின் அடிப்படை விஷயம் அதேதான். விரும்பிய ரெக்கார்டுகள் மிக குறைந்த விலையில் கிடைக்கும். நெருக்கியடித்துக்கொண்டு வாங்கவேண்டியதில்லை. பாடல்களைக் கேட்டபிறகு ரெக்கார்டுகளை வாங்கலாம் என பல்வேறு வசதிகளை உருவாக்கினார்.
1972இல் வர்ஜின் ரெக்கார்டு நிறுவனத்திற்கான ஸ்டூடியோவை உருவாக்கினார். அதில் மைக் ஓல்டுபீல்டின் டியூபுலர் பெல்ஸ், செக்ஸ் பிஸ்டல்ஸ் ஆகிய ஆல்பங்களை தொடர்ச்சியாக உருவாக்கினார். குறைந்த விலையில் தரமான இசை, சர்ச்சைக்குரிய பாடல்கள் என வர்ஜின் ரெக்கார்ட்ஸ் விற்பனை மீட்டருக்கும் மேலே சென்றுகொண்டிருந்தது. இவரை அப்போது தொழிலதிபர்கள் தங்களுக்கு போட்டியாக பார்க்கவில்லை. ஹிப்பி என்பதுபோலத்தான் பார்த்தார்கள். பிறகுதான் வர்ஜின் அட்லாண்டிக் என்ற குறைந்தவிலை விமானசேவையை்த் தொடங்கினார். விலை குறைவு என்றாலும் வசதிகள் அதிகம்
இதற்குப் பிறகு கடலில் பயணிப்பதற்கான வர்ஜின் அட்லாண்டிக் சேலஞ்சர் உருவானது. முதலில் உருவான கப்பல் மூழ்கிப்போனாலும் பிரான்சன் கவலையே படவில்லை. பிடிவாதமாக தனது முயற்சியைத் தொடர்ந்து சாதித்தார். ஆணுறை நிறுவனம், ஹோட்டல் தொடங்கியது, செயற்கைக்கோள் வணிகம் என பல்வேறு தொழில்களைத் தொடங்கினா்ர். சிலவற்றை விட்டு விலகினார்.
தொண்ணூறுகளில் புத்தகம், வோட்கா, கோலா, ரேடியோ, திருமண ஏற்பாட்டு நிறுவனம், ரயில், அழகுசாதனப்பொருட்கள், ஜிம், மொபைல் என ஏராளமான நிறுவனங்களை தொடங்கினார். 1992இல் தனது விமான நிறுவனம் ஏற்படுத்தியத நஷ்டத்தை ஈடுகட்ட தனது முதல் தொழிலான வர்ஜின் மியூசிக்கை விற்க முடிவெடுத்தார். அவர் மிகவும் வருத்தப்பட்டு எடுத்த முடிவு இதுதான் என்று கூறலாம். 2000ஆம் ஆண்டல் பிரான்சன் தனது துணிச்சலான தொழில்முயற்சிகளை கைவிடவே இல்லை. வர்ஜின் ப்ளூ என்ற குறைந்த விலை கொ ண்ட ஆஸ்திரேலிய விமான சேவையைத் தொடங்கினார். வர்ஜின் ப்யூல் என்று சூழலுக்கு ஆபத்தில்லாத எரிபொருளை தயாரிக்கும் நிறுவனத்தை அக்கறையுடன் தொடங்கினார். வர்ஜின் மணி என்ற சேவையைத் தொடங்கி நலிவடைந்த வங்கி ஒன்றைக்கூட வாங்க நினைத்தார். அத்திட்டம் நிறைவேறவில்லை. அதற்கெல்லாம் கவலையே படவில்லை பிரா்ன்சன். வளிமண்டலத்தில் உள்ள கா்ர்பனை குறைக்கும் நிறுவனம் அல்லது தனி நபரின் கண்டுபிடிப்புக்கு பரிசளிக்க வர்ஜின் எர்த் சேலஞ்ச் என்ற திட்டத்தை அமெரிக்க சூழல் போராட்டத் தலைவரான அல்கோருடன் இணைந்து தொடங்கினார்.
இவரை ஸ்டீவ் ஜாப்ஸ் , வாரன் பபெட் என யாருடனும் பொருந்தியே பார்க்க முடியாது. இவர்கள் ஏதேனும் ஒன்றைத்தான் செய்கிறார்கள். அதில் வெற்றி பெற்றார்கள். ஆனால் வர்ஜின் பிரான்சன் அப்படியில்லை. அவர் தொடங்கிய தொழில்கள் சிலவற்றில் வென்றார். பலவற்றில் தோல்வி கண்டார் என்றாலும் அவரது தொழில்முயற்சிகளும் துணிச்சலும், ஆர்வமும் குறையவே இல்லை. அவரது நிறுவனப் பொருட்களை விளம்பரப்படுத்துவதற்கு தன்னையே பயன்படுத்திக்கொள்கிறார் என்று பலர் விமர்சிப்பார்கள். அதைப்பற்றியெல்லாம் பிரான்சன் அணுவளவும் கவலையே படுவதில்லை. இவரைப பற்றி பிபிசியின் செய்தியாளர் ராபர்ட் பெஸ்டன் தொழில்முனைவோருக்கு ஏற்பட்ட காயம் என்று எழுதினார். டிஸ்லெக்சியாவால் பாதிக்கப்பட்டவரின் மோசமான இளமைப்பருவம், கல்வி கற்ற நிலை ஆகியவற்றை நினைவில் கொண்டு ஊடகங்கள் இப்படி கூறலாம். ஆனால் தான் செய்யும் அனைத்து விஷயங்களையும் அவர் அனுபவித்தே செய்கிறார். தான் செய்யும் செயல்கள் எதிலும் திருப்தி அடையாதவர் என்று பலரும் கூறினாலும், பிறரை விட துடிப்புடன் செயல்படும் திறன் கொண்டவர் பிரான்சன். அவரது அனைத்து நிறுவனங்களும் லாபகரமாக இயங்குகிறதா என்று உறுதியாக கூற முடியாது. புதிதாக தொழில்துறைக்குள் நுழையும் தொழில்முனைவோரின் ஆ்ர்வம் இன்றுவரை பிரான்சனிடம் குறையாமல் இருக்கிறது. அவர் பிற இங்கிலாந்து தொழிலதிபர்களைப்போல அடக்க ஒடுக்கமாக இல்லாமல் இருக்கலாம். தொழில்துறையில் சாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு அவர் நிச்சயம் செலிபிரிட்டிதான் அதில் எந்த சந்தேகமுமில்லை.
ரைமர் ரிக்பி
தமிழி்ல் கா.சி. வின்சென்ட்
கருத்துகள்
கருத்துரையிடுக