கார் பந்தய சதியை வெல்ல அண்டர்டேக்கர் ஸ்கூபி டூ குழுவினரோடு போடும் ஒப்பந்தம்! - ஸ்கூபி டூ அண்ட் தி கர்ஸ் ஆப் ஸ்பீட் டிமோன்
ஸ்கூபி டூ அண்ட் தி கர்ஸ் ஆப் தி ஸ்பீட் டிமோன்
அனிமேஷன்
வார்னர் பிரதர்ஸ் - பென்னா பார்பரா
அமெரிக்காவில் நடைபெறும் டபிள்யூ டபிள்யூ இ போட்டியாளர்கள் கார் பந்தயம் ஒன்றில் பங்கேற்கிறார்கள். அதில் அவர்களை அழிக்க இதுவரை சந்திக்காத தீய சக்தியை எதிர்கொள்கிறார்கள். உண்மையில் அந்த தீய சக்தி யார், எப்படி தோன்றியது, அதன் நோக்கம் என்ன என்பதை ஸ்கூபி டூ சேகி இணையர் கோமாளித்தனங்களை செய்து கண்டுபிடிக்கிறார்கள்.
போட்டியைக் காண நேரடியாகவே மைதானத்திற்கு ஸ்கூபிடூவும் சேகியும் தங்கள் வண்டியை எடுத்துக்கொண்டு போய்விடுகிறார்கள். போனவர்கள் வண்டியை போர்டபிள் சாண்ட்விச் கடையாக மாற்றி ஜாலியாக போட்டியைப் பார்த்தபடி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். வாடிக்கையாளர்களிடம் காசை வாங்கிக்கொண்டு அவர்களுக்கு கொடுக்க வேண்டிய சாண்ட்விட்சையும் பர்கரையும் ஸ்கூபியும் சேகியும் சாப்பிட்டு களேபரம் செய்துகொண்டிருக்கிறார்கள். அப்போதுதான் வெல்மா, டெப்னி, டெப்னியின் காதலன் ஆகியோரைக் கொண்ட குழு வருகிறது.
போட்டி நடைபெறும் இடம் கரடுமுரடானது. போட்டியாளர்களைப் போலவே அனைத்து பாதைகளும் வித்தியாசமான வடிவங்களைக் கொண்டுள்ளன. இதில் போட்டியிட மல்யுத்த களத்தின் அனைத்து போட்டியாளர்களும் அணிவகுத்து நிற்கின்றனர். இதில் நாயகன் என்றால் அண்டர்டேக்கர்தான். அவரை தோற்கடிக்க வேண்டுமென போட்டியை நடத்தும் தலைவரின் மகன் ஸ்டெபானி, ட்ரிபிள் ஹெச் ஆகியோர் நினைக்கிறார். தனது மகள் கலந்துகொள்வதை போட்டியை நடத்தும் தலைவரே எதிர்பார்ப்பதில்லை. இந்த நேரத்தில் ஸ்பீட் டிமோன் இன்பெர்னோ எனும் பெயரில் வந்து மோதி முதல் போட்டியில் அண்டர்டேக்கரின் சகாவை அடித்து வீழ்த்துகிறான். இதனால் அவர் போட்டியில் கலந்துகொள்ள முடியாத நிலை. அப்போது இந்த மர்மத்தை தீர்த்து வைக்க மிஸ்டரி மெஷின் டீமான ஸ்கூபி டூ வினரை அழைக்கிறார் போட்டித்தலைவர்.
அண்டர்டேக்கரின் கார், போல்டு நட்டு என தனித்தனியாக கழன்றுவிட்டதால் அவர்களுக்கு ஸ்கூபி டூ குழு உதவுகிறது. எப்படி சாண்ட்விட்ச் வண்டியை அப்படியே டயர் மாற்றி, எஞ்சினை மாற்றி கொடுத்துவிடுகின்றனர். அண்டர்டேக்கருக்கு துணையாக ஸ்கூபியும் சேகியும் வண்டியில் ஏறுகின்றனர். இவர்கள் பந்தயத்தில் நடக்கும் முறைகேடுகளை எப்படி கண்டுபிடித்தார்கள், உண்மையில் தீய சக்தி என்பது தீய சக்தியா என்பதையும் கண்டுபிடித்தார்களை என்பதுதான் கதை.
ஸ்கூபி டூ கதைகளைப் பொறுத்தவரை பேய் பிசாசு என்றெல்லாம் ஒன்றும் கிடையாது. எல்லாம் சுயநலத்திற்காக மனிதர்கள் உருவாக்கும் உட்டாலக்கடி என்பதை அடித்தளமாக கொண்டுதான் காமிக்ஸ், அனிமேஷனை உருவாக்குகிறார்கள். எனவே, ஸ்கூபி டூ சேகியுன் கோமாளித்தனங்களை ரசித்துக்கொண்டு வெல்மாவின் புத்திசாலித்தனமான துப்பறியும் திறமையை ரசித்தாலே போதுமானது.
இந்த அனிமேஷன் ஒன்றரை மணிநேரம் ஓடுகிறது. ஆனால் படத்தின் பாதியில் நமக்கு யார் குளறுபடிக்கு காரணம் என புரிபட்டுவிடுகிறது அதற்குப்பிறகு எதற்கு படத்தை பார்க்கிறோம் என்றால் ்எதற்காக குற்றவாளி இப்படி செய்தார் என்பதை வெல்மா கேள்வி கேட்கவேண்டுமே? அதற்காகத்தான்.
மல்யுத்த வீரர்கள் இந்த அனிமேஷனின் முக்கியமான அம்சம். மக்களின் மனதில் இடம்பெற்ற வீர ர்கள் ஸ்கூபி டூவில் இடம்பெற்று அசர வைக்கிறார்கள். அதிலும் ட்ரிபிள் ஹெச், அண்டர்டேக்கரின் இறுதிக்காட்சி சண்டை அசர வைக்கிறது.
ஜாலியாக ரசித்துப்பார்க்க வேண்டிய கார் பந்தயம்
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக