விலங்குகளும் அதன் கணக்கிடும் திறன்களும்!
விலங்குகளும் அவற்றின் திறன்களும்
சிங்கம் தனக்கென கூட்டத்தை உருவாக்கி வைத்திருப்பதில் சிறப்பு பெற்றவை. ஆனால் அதன் எண்ணிக்கை கூடாமல் இருப்பது அதன் பலம். ஒற்றுமையாக இருப்பதால், எளிதாக இரையை வேட்டையாட முடியும். கூடவே தனது எல்லையை எளிதாக பாதுகாக்க முடியும். ஒரு தனி சிங்கம் 259 சதுர கிலோமீட்டர் தூரத்தை தனது கோட்டையாக பாவித்து காப்பாற்றி வாழும். இதன் எல்லை மாறிக்கொண்டே இருக்கும்.
கூட்டமாக இருப்பதால் பிற சிங்க கூட்டத்தின் தாக்குதலை எளிதாக சமாளிக்க முடியும். மேலும் சண்டையில் பிற எதிரி கூட்டங்களிலுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையையும் மனதில் கொண்டு தாக்குதலை நடத்துகிறது.
ராணித்தேனீயை மையமாக கொண்ட தேனீக்களின் காலனி எப்போதும் ஆச்சரியப்படுத்துகிற செய்திதான். நூற்றுக்கணக்கான ஆண் தேனீக்களும், ஆயிரக்கணக்கான பெண் தேனீக்களும் வாழ்வதற்காக கடுமையாக உழைக்கின்றன. இவை பிற தேனீக்களுடன் தொடர்புகொள்ள குறிப்பிட்ட திசை நோக்கி நடனம் ஆடுகின்றன. குறிப்பிட்ட திசை நோக்கி பறக்கின்றன. இப்படி பறக்கும் விதத்தில் பூக்கள் எவ்வளவு தொலைவில் உள்ளன என்ற தகவலையும் வெளிப்படுத்துகின்றன.
கோழிகளை எப்போதும் முட்டாள் என்று பெரும்பாலும் கருதுவார்கள். ஆனால் கோழி, குஞ்சுகளை பொறித்தபிறகு அந்த குஞ்சுகள் உலகில் வேகமாக வாழக் கற்றுக்கொள்வதோடு, எதிரிகளையும் கையாளக் கற்கிறது. மேலும் ஐந்து என்ற எண்ணிக்கைக்கு மேலும் அதனால் கணக்கிட முடிவதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது புதிதாக பிறந்த குழந்தையின் திறனை விட அதிகம்.
நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த ராபின் பறவை, தனது இணைப்பறவையின் உணவு விருப்பங்களை பின்பற்றி வாழ்கிறது. பெண்பறவை அடைகாக்கும்போது ஆண் பறவைதான் உணவு தேடி வரவேண்டும். பனிக்காலத்தில் தேடி வைத்த உணவை எதிரிகளிடமிருந்து ராபின் பறவை காப்பாற்றுகிறது. ஆனாலும் உணவு என்று வரும்போது போட்டி இருக்கும் அல்லவா? ஆண் பறவை தேடிய உணவை பல்வேறு மறைவிடங்களில் மறைத்து வைப்பதை பெண் பறவை கணக்கிட்டு வைத்துக்கொள்கிறது. தேவைப்படும்போது எடுத்து சாப்பிடுகிறது. நெருக்கடியான காலகட்டங்களில் பிழைத்திருப்பதற்கான வழி இதுவே!
பழுப்பு கிளிகள் மனிதர்களின் குரலை மிமிக்ரி செய்வதோடு எண்களை எண்ணுவதிலும் திறன்பெற்றவை என ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர். அலெக்ஸ் என்ற பெயரிட்டு ஆராய்ச்சியாளர்கள் கிளி ஒன்றை ஆய்வு செய்து வந்தனர். எட்டு எண்களுக்கும் மேல் அடையாளம் கண்டு சொல்லப்பழகியது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக இளம் வயதிலேயே இறந்துபோய்விட்டது.
ஓநாய்கள் வேட்டையாடுவதைப் பொறுத்தவரை கூட்டமாக வேட்டையாடுபவை. மேலும் இவற்றின் திட்டமிடுதலும், திறனும் பிற விலங்குகளோடு ஒப்பிட முடியாதவை. குறிப்பிட்ட விலங்கு கூட்டத்தை திட்டமிட்டு தாக்கி வேட்டையாடும். தாக்கும் விலங்குகளின் எண்ணிக்கையை எளிதாக கணக்கிட்டுவிடுகிறது. இதனோடு ஒப்பிடும்போது வம்சாவாளி கிளையில் வரும் நாய்கள் தடுமாறுகின்றன. இவை உணவுக்காக மனிதர்களை நம்பி இருப்பதால் வேட்டையாடும் திறனும், அதற்கான திட்டமிடுதலும் இல்லாமல் போய்விட்டதாக கூட கருதலாம்.
முழுமையான மனதோடு குதிரையுடன் பழகினால் அதைவிட சிறந்த நண்பன் ஏதுமில்லை என்று கூறுவார்கள். ஆனால் குதிரைக்கு கணக்குப்போட தெரியுமா? ஆராய்ச்சியில் குதிரைகள் ஆப்பிள்கள் நிறைந்துள்ள கூடையைத்தான் சாப்பிடத் தேர்ந்தெடுக்கின்றன என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.
1890ஆம் ஆண்டு கிளவர் ஹான்ஸ் என்ற குதிரை கூட்டல், கழித்தல், வகுத்தல், பெருக்கல் ஆகியவற்றை செய்து காட்டி பிரமித்தது. இதனை இதற்கு சொல்லித் தந்தவர், ஓய்வு பெற்ற ஆசிரியரும் அதன் உரிமையாளருமான வில்ஹெம் வோன் ஆஸ்டென். இவர், தனது குதிரையை ஜெர்மனியெங்கும் அழைத்து சென்று காட்சிபடுத்தினார். ஆராய்ச்சியாளர்கள் குதிரைகள் குறைந்த எண்ணிக்கையிலான எண்களை மட்டுமே நினைவில் வைத்திருக்கும் என்று கூறுகின்றனர்.
பாலைவனத்தில் எறும்புகள் ஆனாலும் உயிரோடு வாழ்வது கடினம். கொஞ்சம் வெயில் அதிகமானாலும் உயிர் போய்விடும். இதனை எப்படி சமாளிப்பது? இதற்காகவே எறும்புகள் தாங்கள் குறிப்பிட்ட திசையில் எத்தனை அடிகள் வைத்து நடக்கின்றன என்பதை ஒளியை வைத்து கணக்கிட்டுக்கொள்கின்றன. இதனால்தான் வளைக்கு உடனே திரும்ப முடிகிறது. நேரம் அதிகமானால் வெளியிலேயே இறக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.
கருத்துகள்
கருத்துரையிடுக